Wednesday, July 23, 2008

25 ஆண்டுகள் நினைவாக

1983 ஜூலை இன வன்செயலின் அரசியல் பின்னணியும்நோக்கங்களும்

- ஞானம் அருட்பிரகாசம்

இலங்கையில் 1983 ஜூலை இன வன்செயல்கள் நடைபெற்று, இந்த ஆண்டுடன் 25 வருடங்கள் பூர்த்தியாகின்றன. 1948 ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்த பின்னர், இலங்கையின் படுபிற்போக்கு அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி, சிறுபான்மை இனங்களுக்கெதிராக நடாத்திவந்த இனவெறித் தாக்குதல்களில் 1983 ஜூலை இனக்கலவரமே மிகவும் மோசமானதாகும். 1977 ஆண்டு ஜூலை மாதம் 21ந் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில், மொத்தமாக 168 ஆசனங்ளைக் கொண்ட இலங்கைப் பாராளுமன்றத்தில் 140 ஆசனங்ளைப் பெற்று ஐக்கிய தேசியக்கட்சி அமோக வெற்றிபெற்றது. ஐக்கிய தேசியக்கட்சியின் அப்போதைய தலைவரும், பிரதமராகப் பொறுப்பேற்றவருமான ஜே.ஆர்.ஜெயவர்த்தன தமிழ் மக்களைப் பார்த்து, “போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்”எனச் சவால் விடுத்து, 1977 ஓகஸ்டில் தமிழ் மக்களுக்கெதிராக இன வன்செயல் ஒன்றைக் கட்டவிழ்த்து விட்டார். அதைத் தொடர்ந்து, 1981ல் மீண்டும் ஒரு இன வன்செயலை தமிழ் மக்களுக்கெதிராக கட்டவிழ்த்தார். அதன் தொடர்ச்சியாக 1983 ஆண்டு ஜூலையில் மிகப்பெரிய தாக்குதலை ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம் நடாத்தியது. 1983 ஜூலை வன்செயல் நடைபெற்ற பின்னர், வருடாவருடம் உலகம் முழுவதுமுள்ள இலங்கைத் தமிழர்களில் ஒரு பகுதியினர், ‘கறுப்பு ஜூலை’என சடங்காசாரரீதியாக அந்தச் சம்பவத்தை நினைவுகூர்வது ஒரு சம்பிரதாயமாக இருந்து வருகின்றது. அந்த ‘கறுப்பு ஜூலை’நினைவுகூரல்களில், இலங்கையில் வாழும் முழுச் சிங்களமக்களும் தமிழர்களைத் தாக்கிவிட்டார்கள் என்ற தோரணையில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு, தனித்தமிழ் ஈழத்துக்கான தேவை நியாயப்படுத்தப்படுகின்றன. அதாவது, 1983 ஜூலை சம்பவம், வெறும் தமிழ் - சிங்கள இனவாதப் பிரச்சினையாக மட்டும் மக்களுக்கு காண்பிக்கப்படுகின்றன. 1983 ஜூலை வன்செயலின் அரசியல் பின்னணி என்ன, அதில் ஜ.தே.கவின் பங்களிப்பு என்ன, புலிகளின் பாத்திரம் என்ன, இந்த சம்பவத்தின் பின் இலங்கையின் இனப்பிரச்சினை எவ்வாறு சர்வதேசமயப்படுத்தப்பட்டது, தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள், ஏகாதிபத்தியத்தினதும் உள்ளுர்; பிற்போக்கு சக்திகளினதும் கையாட்களான புலிகள் மூலம் எவ்வாறு திசைதிருப்பப்பட்டு, தமிழ்மக்களின் இன்றைய அவலநிலை உருவாக்கப்பட்டது என்பதும் ஆராயப்படுவதில்லை.

1983 ஜூலை வன்செயல் என்பது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. 1948ல் இலங்கை சுதந்திரம் பெற்ற நாள்முதல், ஒருபக்கத்தில் சிங்கள பேரினவாத சக்திகளும், இன்னொரு புறத்தில் தமிழ் பிரிவினைவாத சக்திகளும், தமது அரசியல் நலன் கருதி இனமுரண்பாட்டைத் தூண்டி வந்துள்ளன. அதேவேளையில் தமது வர்க்க நலன்கருதி, இவ்விரு சக்திகளும் ஜக்கியப்பட்டும் வந்துள்ளன. பாராளுமன்றப் பதவிகளைப் பெறுவதற்காக இவ்விரு சக்திகளும் எதிரும்புதிருமாக நின்று தீவிர இனவாதம் பேசுவார்கள். பாராளுமன்றம் சென்று ஆட்சியைப் பிடித்தவுடன், மக்களுக்கெதிராக ஒன்றுபட்டு செயலாற்றுவார்கள். இதற்கு எண்ணற்ற உதாரணங்கள் உள்ளன. ஐக்கிய தேசியக்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிங்கள பிற்போக்கு சக்திகளுக்கும், முதலில் தமிழ்க்காங்கிரஸ் - தமிழரசுக்கட்சிகளாலும், பின்னர் அவற்றின் தொடர்ச்சியாக புலிகளாலும் (ஆயுதம் தரித்த தமிழ்க்காங்கிரஸ் - தமிழரசுக்கட்சி) பிரதிநிதித்துவப்படுத்தப்படும் தமிழ் பிற்போக்கு சக்திகளுக்குமிடையிலான இந்த தமிழ் - சிங்கள முதலாளித்துவ வர்க்க ஒற்றுமை இன்றுவரை நீடிக்கின்றது. 1977 ஆண்டில் நிகழ்ந்த பொதுத்தேர்தலில் மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகளில் 50.9 வீதமான வாக்குகள் (3179221 வாக்குகள்) பெற்ற ஐக்கிய தேசியக்கட்சி 140 ஆசனங்களையும், 29.7 வீதமான வாக்குகள் (1855331 வாக்குகள்) பெற்ற சிறீலங்கா சுதந்திரக்கட்சி 8 ஆசனங்களையும் கைப்பற்றியது. ஆனால் அத்தேர்தலில் 6.4 வீதமான வாக்குகள் (421488 வாக்குகள்) பெற்ற தமிழர்; விடுதலைக்கூட்டணி, மொத்தமாக 18 பாராளுமன்ற ஆசனங்ளை வென்று, வடக்குக் கிழக்கில் அமோக வெற்றியீட்டி, இலங்கைப் பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக அமர்ந்தது. அப்போது பிரபல கம்யூனிஸ்ட்டான மு.கார்த்திகேசன், “ஓம் தமிழர்; விடுதலைக்கூட்டணி எதிர்க்கட்சிதான், ஆனால் எவ்வாறான எதிர்க்கட்சி?...?...? அது எதிர்க்கட்சியின் எதிர்க்கட்சி!”என நகைச்சுவையாகவும், அர்த்தபுஸ்டியுடனும் குறிப்பிட்டார். அதாவது, அவர்கள் உண்மையான எதிர்க்கட்சியான சிறீலங்கா சுதந்திரக்கட்சிக்கே எதிரான கட்சியினர் என்று குறிப்பிட்டார்.

தமிழ் தலைமைகளின் தொடர்ச்சியான வரலாறு, ஐக்கிய தேசியக்கட்சியுடன் நட்பு பூண்டதாகவே இருந்து வருவது இரகசியமல்ல. 1977ல் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிபீடமேறிய போது, அக்கட்சி அமோக செல்வாக்குடன் இருந்தது. அதன் பிரதான எதிரியான சிறீலங்கா சுதந்திரக்கட்சி மிகவும் பலவீனமான நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தது. ஐக்கிய தேசியக்கட்சி அரசுக்கு ஏற்றவகையில் செயல்படும் எதிர்க்கட்சியாகவே தமிழர்; விடுதலைக்கூட்டணி இருந்தது. தமிழர் விடுதலைக்கூட்டணியையும்; சேர்த்துக் கொண்டு, இலங்கையை ‘பிலிப்பைன்ஸ் வகை’அமெரிக்க ஏகாதிபத்திய காலனி நாடாக மாற்றும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் நீண்டநாள் திட்டத்துக்கு, எல்லா அனுகூலங்களும் இருப்பதாக ஐக்கிய தேசியக்கட்சி தலைமை எண்ணியது. அதையே ஜே.ஆர்.ஜெயவர்த்தன “இலங்கையை சிங்கப்பூர் ஆக்கிக் காட்டுகிறேன்”என மாற்றிக் கூறிவந்தார். ஆனால் அவர் போட்டிருந்த திட்டங்களை நிறைவேற்றுவதற்கு, தமிழர்; விடுதலைக்கூட்டணியால் தமிழ் இனவாதம் ஊட்டி வளர்க்கப்பட்ட தமிழ் இளைஞர்களின் இனவிடுதலைப் போராட்டம் ஒரு மாபெரும் இடையூறாக இருந்தது. தமிழர் விடுதலைக்கூட்டணித் தலைமையினால், தனது தேர்தல் வெற்றிக்காக கிளப்பிவிடப்பட்டிருந்த தமிழ் இனவாதம், வன்முறை வடிவத்தை எடுத்து பிரிவினைப் போராட்டமாக வளர்ந்து கொண்டிருந்தது. அப் பிரிவினைப் போராட்டம் தமிழர் விடுதலைக்கூட்டணி தலைமையை ஏற்கெனவே நிராகரித்திருந்தது. அதனால் ஐக்கிய தேசியக்கட்சி –தமிழர்; விடுதலைக்கூட்டணி தேன்நிலவை அனுபவிக்க முடியாமல், அவ்விரு கட்சியினரும் திண்டாடிக் கொண்டிருந்தனர். மறுபக்கத்தில் சரியான தலைமைத்துவ வழிகாட்டல் எதுவுமில்லாதிருந்த தமிழ் இளைஞர்களின் போராட்ட அமைப்புகள், போட்டி அரசியலில் தீவிரமாக இறங்கின. ஒரு பக்கத்தில் அரசியல் பின்னணிகளும், சாதிப்பின்னணிகளும் இயக்கங்களை முரண்படுத்தின. இன்னொரு பக்கத்தில் தனிமனிதப் போட்டிகளும் மோதலாக உருவெடுத்தன. அதில் குறிப்பாக வல்வெட்டித்தறையை அடிப்படையாகக் கொண்ட, பிரபாகரனின் புலிகள் இயக்கத்துக்கும், குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரின் தமிழீழ விடுதலை இயக்கத்துக்கும் இடையிலான மோதலே முதன்மையானதாக இருந்தது. ஏற்கனவே பிரபாகரனின் காட்டிக்கொடுப்பால், குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் போன்ற ரெலோ தலைவர்கள் அரசபடைகளால் கைதுசெய்யப்பட்டு, வெலிக்கடைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்திய அரசின் பலமான பின்னணி உதவியுடன் செயல்பட்டு வந்த ரெலோ இயக்கம், ஒரு அதிரடி நடவடிக்கையின் மூலம், வெலிக்கடைச் சிறையில் இருந்த தனது தலைவர்களை விடுவிக்கத் திட்டம் தீட்டியிருந்தது. அதை முறியடித்து ரெலோ இயக்கத்துக்கு எதிர்காலம் இல்லாமல் செய்யவும், சட்டவிரோத செயல்பாடுகளில் தனது மேலாதிக்கத்தை நிறுவவும் பிரபாகரன் எதிர்த்திட்டம் தீட்டினார். 1983 ஜூலை 23ந் திகதி இரவு, பிரபாகரன் தலைமையிலான புலிகள் இயக்கம் யாழ் - திருநெல்வேலியில் இராணுவ வாகனம் ஒன்றின மீது தாக்குதல் நடாத்தி, 13 இராணுவத்தினரைக் கொலைசெய்தானர். அதன்மூலம் பிரபாகரன் தனது திட்டத்தின் சில நோக்கங்களை நிறைவேற்றிக் கொண்டான். அதாவது பிரபாகரன் எதிர்பார்த்தது போலவே, ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான இலங்கை அரசாங்கம் இரு தடைவைகள் தனது குண்டர்களை ஏவி, வெலிக்கடைச் சிறையிலிருந்த ரெலோ தலைவாகள் உட்பட பல தமிழ் அரசியல் கைதிகளை கொலைசெய்தது. இதன்மூலம் பிரபாகரனின் நேரடி அரசியல் எதிரிகள் ஒழித்துக் கட்டப்பட்டனர். அதேவேளையில், பிரபாகரனே இராணுவத்துடன் போரிடும் ஆற்றலுள்ளவர்; என்ற ஒரு பிம்பமும் தமிழ்மக்களிடம் ஏற்படுத்தப்பட்டது. மேலும் பிரபாகரன் விரும்பியது போலவே, ஜே.ஆர். ஜெயவர்த்தன அரசு தென்னிலங்கையில் வாழ்ந்த தமிழ்மக்கள் மேல் கொடூர வன்முறைத் தாக்குதலைத் தொடுத்தது. இதுவே பின்னர் பிரபாகரனது எதிர்காலப் போராட்டங்களுக்கு உரமாக அமைந்தது. அதேநேரத்தில், இந்த தாக்குதலின்போது பிரபாகரன் இன்னொன்றையும் சாதித்துக் கொண்டார். அதாவது, புலிகள் இயக்கத்தில் பிரபாகரனை விட இராணுவ நடவடிக்ககைகளில் தீரமிக்கவராக இருந்த, ‘செல்லக்கிளி அம்மான’; என்பவர் எதிர்காலத்தில் தனது தலைமைத்துவத்துக்கு சவாலாக அமைவார் என்ற காரணத்தால், அவரை இந்த இராணுவ நடவடிக்கையின் போது, திட்டமிட்டமுறையில் பிரபாகரனே தன்கையால் சுட்டுக் கொலைசெய்தார்.

இவ்வாறு தனது பல நோக்கங்களை பிரபாகரன் 1983 ஜூலை 23ந் திகதி இரவு நிகழ்த்திய இராணுவ நடவடிக்கையின் மூலம் சாதித்துக் கொண்டார். ஆனால் பிரபாகரனின் இந்த நடவடிக்கை, மறுபக்கத்தில் எதிர்விளைவுகளையும் தாராளமாக உருவாக்கியது. ஜே.ஆர். ஜெயவர்த்தன இந்தச் சந்தர்ப்பத்தைப் பாவித்து, சிங்கள மக்களை தனக்குப்பின்னால் திரட்டி தமிழர்களைத் தாக்கியது மட்டுமின்றி, சகல எதிர்க்கட்சிகளையும் அடக்கியொடுக்குவதற்கும், அவசரகாலச்சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பவற்றை அமுல்செய்யவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார். தமிழர்களின் மேல் கடுமையான இனவன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதின் மூலம,; தமிழர்களின் பிரிவினைவாத சிந்தனைகளை முளையிலேயே கிள்ளிவிடுவதே ஜே.ஆரின் நோக்கமாக இருந்தது. ஜே.ஆரின் இந்த நடவடிக்கையை அ.அமிர்தலிங்கம் போன்ற தமிழர்; விடுதலைக்கூட்டணி தலைவர்களும் உள்ளுர விரும்பினர். ஏனெனில் ஜே.ஆரின் இந்த நடவடிக்கை, தமது தலைமையை நிராகரித்து செயல்படும் தமிழ் இளைஞர் இயக்கங்களுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியமாக அமைந்து, தமிழ் இளைஞர்கள் மீண்டும் தமது கட்டுப்பாட்டுக்குள் வருவார்கள் என தமிழர் விடுதலைக்கூட்டணித் தலைமை எதிர்பார்த்தது.. ஆனால் விளைவுகள் எதிர்த்திசையிலேயே செல்ல ஆரம்பித்தன. 1983 ஜூலை வன்செயல் உடனடியாகவே இந்தியத் தலையீட்டுக்கு வழிசமைத்தது. இந்தியாவின் பிரதமராகவிருந்த இந்திராகாந்தி, தனது நீண்டநாளைய விரோதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவை பழிவாங்க இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டார். அமெரிக்க ஏகாதிபத்திய விசுவாசியான ஜே.ஆர். ஜெயவர்த்தன, தனது வழமையான பாணியில் இந்தியாவிற்கு எதிராக கடுமையாக முரண்டு பிடித்தார். இதனால் பங்களாதேசில் செய்தது போல இலங்கையிலும் செய்து, இலங்கை நாட்டைத் தூண்டாடவும் 1983 ஜூலை –ஓகஸட் மாதத்தில் இந்திராகாந்தி தயாராக இருந்ததாக அவருக்கு நெருக்கமானவர்கள் பின்னர் கூறியுள்ளனர். ஜே.ஆர். ஜெயவர்த்தன இந்தியாவுக்கு அடிபணிய மறுத்ததால், இந்திராகாந்தியின் அரசாங்கம், இலங்கைத் தமிழ் இளைஞர் இயக்கங்களுக்கு தனித்தனியாக ஆயுதப்பயிற்சியும் ஆயுதங்களும் தாராளமாக வழங்கி, சென்னையைத் தலைமையமாகக் கொண்டு இலங்கைக்கு எதிராக ஆயதப்போராட்டத்தில் ஈடுபட அனுமதியும் வழங்கியது. இந்திய அரசாங்கம் தனது இந்துசமுத்திர பிராந்திய நலன் காரணமாக அன்று மேற்கொண்ட இந்த தவறான செயல்பாடுதான், இலங்கை இனப்பிரச்சினை இன்றுவரை தீர்க்கப்படாமல் இருப்பதற்கு அதிமுக்கிய காரணமாகும்.

உண்மையில் 1983 ஜூலை வன்செயல் என்பது, சிங்கள மக்கள் தன்னெழுச்சியாக தமிழ்மக்களுக்கெதிராக கிளர்ந்தெழுந்து வன்முறையில் ஈடுபட்ட ஒரு நிகழ்வல்ல. அது ஐக்கிய தேசியக்கட்சி போன்ற சிங்கள பேரினவாத சக்திகளாலும், தமிழ் கட்சியான தமிழர்; விடுதலைக்கூட்டணியால் ஊட்டிவளர்க்கப்பட்ட புலிப்பாசிசவாதிகளாலும், திட்டமிட்டு மேற்கொண்டு வந்த இனவாத நடவடிக்கைகளின் ஒரு உச்ச கட்ட விளைவாகும். அதன் விளைவாகவே இன்றைய இனவாத உள்நாட்டு யுத்தம் ஆரம்பமானது. இந்த 1983 ஜூலை வன்செயலை அடிப்படையாக வைத்தே, தமிழ் இனவாதிகள் பிரிவினை கோர ஆரம்பித்தனர். தாமும் பங்காளிகளாக இருந்து, திட்டமிட்டு நடாத்திய ஒரு வன்செயலை, தமிழ்மக்கள் மேல் ஒருதலைப்பட்சமாக திணிக்கப்பட்ட ஒரு நிகழ்வாக சித்தரித்து, அந்த மக்கள் சார்பாக பிரிவினைக் கோரிக்கையை எழுப்புவதும், அவர்கள் பெயரால் யுத்தத்தை முன்னெடுத்து அவர்களுக்கு அழிவுகளை உண்டுபண்ணுவதும், தமிழ் பாசிசவாதிகள் செய்துவரும் பெரும் நாசகாரச் செயல்பாடாகும். மறுபக்கத்தில் சிங்கள முதலாளித்துவ பேரினவாத சக்திகள், நாட்டின் இறைமை, சுயாதிபத்தியம் என்பனவற்றைப் பாதுகாப்பது என்ற போர்வையில், சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீது ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளதுடன், உண்மையில் நாட்டை அந்நிய ஏகாதிபத்திய சக்திகளுக்கு தாரை வார்த்து, முழுநாட்டையும் நவகாலனித்துவப் பிடிக்குள் கொண்டு சென்றுள்ளனர்.

எனவே 1983 ஜூலை இனவன்செயலை நினைவுகூரல் என்பது அச்செயலால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கும், அதன்விளைவாக இன்று பல வழிகளிலும் விலை செலுத்திவரும் சிங்கள மக்களுக்கும் உரிய ஒன்றாகும். அந்தச் சம்பவத்தைப் பயன்படுத்தி, புலிப்பாசிசவாதிகள் தமது பிரிவினைவாத நோக்கங்களை ஈடேற்றிக்கொள்ள அனுமதிக்கக் கூடாது. அதேபோல சிங்கள பேரினவாத சக்திகளும் நாட்டின் இறைமை, சுயாதிபத்தியம் என்பனவற்றின் பெயரால் தமது இராணுவவாத ஆட்சியைக் கட்டியெழுப்புவதற்கு அனுமதிக்கக்கூடாது. முன்னொருகாலத்தில் மிகவும் சிறப்பாக இருந்த தமிழ் - சிங்கள சகோதரத்துவ உறவு, தமிழ் - சிங்கள இனவாதிகளால் தமது நோக்கங்களை நிறைவேற்றுவதறகாக திட்டமிட்டு தகர்க்கப்பட்டள்ளது. இந்நிலையில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை மீளவும் கட்டியெழுப்பி, ஏகாதிபத்தியத்துக்கும், உள்நாட்டுப் பிற்போக்குசக்திகளுக்கும் எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் சென்று, ஒரு புதிய, ஜனநாயக, செழிப்புமிக்க இலங்கையை உருவாக்குவதே, இன்று இலங்கையில் தேவைப்படுவது. 1983 ஜூலை இனவன்செயல் நடைபெற்று 25 ஆண்டுகள் பூர்த்தியடைகின்ற இவ்வேளையில், இலங்கையர்களான நாம் அனைவரும் ‘புதிய இலங்கையின் உதயத்திற்காக உழைப்போம்’என சபதம் எடுக்க வேண்டும்.

No comments: