Friday, April 25, 2008

மூன்று இலங்கை தமிழர்கள் கைது

குடியுரிமை அதிகாரிகளை ஏமாற்றி வெளிநாடு செல்ல முயற்சி: விமான நிலையத்தில் மூன்று இலங்கை தமிழர்கள் கைது

சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளை ஏமாற்றி,வெளிநாடு செல்ல முயன்ற, மூன்று இலங்கை தமிழர்களை விமான நிலைய போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து போலீசார் கூறியதாவது: இலங்கை கொழும்புவைச் சேர்ந்தவர்கள் ஜீவானந்தன் (26), அச்சுதன்பிள்ளை (35). இலங்கை கோழிக்கண்டி என்ற இடத்தைச் சேர்ந்தவர் வசுந்தராஜன் (35). இவர்கள் மூவரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர், கொழும்புவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர். மண்ணடியில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கினர்.

அச்சுதன்பிள்ளையிடம் மலேசியா செல்வதற்கான விசாவும், ஜெட் ஏர்வேஸ் விமானத்திற்கான டிக்கட்டும் இருந்தது. வசுந்தராஜனிடம் கனடா செல்வதற்கான விசாவும், அதற்கான ஜெட் ஏர்வேஸ் டிக்கட்டும் இருந்தது. இவர்கள் இருவரும் விமான நிலையத்திற்கு வந்து, போர்டிங் கார்டு பெற்று, குடியுரிமை சோதனைகள் முடித்த பின்னர், தங்களின் போர்டிங் கார்டுகளை மாற்றிக் கொண்டு பயணம் செய்ய திட்டமிட்டனர். இதன்படி, வசுந்தராஜன் மலேசியா செல்லவும், அச்சுதன்பிள்ளை கனடா செல்லவும் திட்டமிடப்பட்டது. ஜீவானந்தன் போலி பாஸ்போர்ட் மூலம் மலேசியா செல்ல திட்டமிட்டிருந்தார்.

இந்த ஏற்பாட்டுடன் மூவரும் நேற்று முன்தினம் இரவு சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர். அங்கு அவர்களிடம் வழக்கமான குடியுரிமை சோதனை நடத்தப்பட்டது. இதில், ஜீவானந்தன் வைத்திருந்தது போலி பாஸ்போர்ட் என்று கண்டறியப்பட்டதால், அவர் உடனடியாக விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்நிலையில், ஒரிஜினல் பாஸ்போர்ட் மற்றும் விசா ஆகியவற்றை வைத்திருந்த அச்சுதன்பிள்ளையும், வசுந்தராஜனும் குடியுரிமை சோதனைகளை முடித்துவிட்டு, போர்டிங் கார்டுகளுடன் விமானம் ஏறுவதற்காக முதல்மாடிக்கு சென்றனர். அங்கு இவரும் தங்கள் போர்டிங் கார்டுகளை மாற்றிக் கொண்டனர். இவர்களை தொடர்ந்து கண்காணித்து வந்த குடியுரிமை அதிகாரிகள் அச்சுதன்பிள்ளையையும், வசுந்தராஜனையும் கையும் களவுமாக பிடித்து விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். மூவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், பின்னர் அவர்களை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

No comments: