Saturday, May 31, 2008

மல்லாவி நோக்கி 45 கிலோமீற்றர் தூரத்திற்கு பின்வாங்கியுள்ள புலிகள்

கடந்த 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்ட வன்னிமீட்புப்போர் நடவடிக்கைகளில் அரச படையினரின் 57 ஆவது படையணி புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசத்துக்குள் மொத்தம் 42 கிலோமீற்றர் தூரம்வரை முன்னேறிவிட்டதாகவும் இதன் மூலம் புலிகளிடமிருந்து அரசபடையினர் 600 சதுரகிலோமீற்றர் பரப்புடைய பெரும் பிரதேசங்களைத் தமது கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டு வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறு கைப்பற்றப்பட்ட பெரும் பிரதேசப் பரப்பிலும் இராணுவத்தின் 57 ஆவது படையணி நிலைகொண்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை கடந்த 28 ஆம் திகதி தேசிய பாதுகாப்புத் தகவல் நடுவகத்தில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின்போது இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வவுனியா பிரதேசத்தில் புலிகளுக்கு எதிரான தீவிர இராணுவத் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ள மேற்படி 57 ஆவது படையணியினர் இதுவரை மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளின் போது மொத்தம் 600 சதுரகிலோமீற்றர் பெரும்பரப்பைக் கைப்பற்றிவிட்டதைத் தொடர்ந்து புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் மொத்தம் 45 கிலோமீற்றர் தூரத்துக்குப் பின்வாங்கிவிட்டனர் எனவும் இதற்கேற்ப புலிகளின் பதுங்குகுழிகள், அவர்களின் இறுதிக்கட்டுப்பாட்டுப் பிரதேசமாகவும் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உட்பட முன்னணித் தலைவர்கள் பதுங்கியிருக்கும் பிரதான நிலக்கீழ் பதுங்குகுழி நிலையங்கள் அமைந்திருக்கும் பிரதேசமாகவும் கருதப்படும் மல்லாவிப் பிரதேசத்தை நோக்கி பின்தள்ளப்பட்டுவிட்டனர் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறு இதுவரை அரச படையினரால் புலிகளின் பலக்கோட்டை எனக்கருதப்பட்ட முக்கிய முகாம் அமைந்திருந்த பாலம்பிட்டி, மடு, பெரியமடு, விளாத்திக்குளம், கள்ளிக்குளம், பாலமோட்டை போன்ற பிரதேசங்கள் 57 ஆவது படையணியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விட்டன எனவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

திவயின : 29.05.2008

No comments: