கிழக்கு மாகாண முதலமைச்சராக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிள்ளையான் (சிவனேசதுரை சந்திரகாந்தன்) நியமிக்கப்படவுள்ளார். இவர் இன்னும் சில தினங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வார் என நம்பகரமாக தெரியவருகின்றது. கிழக்கு மாகாண முதலமைச்சராக பிள்ளையானையா அல்லது ஹிஸ்புல்லாவையா நியமிப்பது என்பது தொடர்பில் கடந்த சில நாட்களாக பெரும் இழுபறி நிலை காணப்பட்டது. லண்டனுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று இரவு நாடு திரும்பியிருந்தார். நாடு திரும்பிய அவர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிள்ளையானை சந்தித்து பேசியிருந்தார்.
இதனையடுத்து முதலமைச்சர் நியமனம் தொடர்பில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களையும் இன்று மாலை அலரிமாளியையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து பேசியுள்ளது.
எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை முதலமைச்சராக நியமிக்க வேண்டுமென ஜனாதிபதியை வலியுறுத்தும் கடித்ததில் கையொப்பமிட்டிருந்த அமைச்சர்களான எம்.எஸ். அமீரலி, ஏ.எல்.எம்.அதாவுல்லா, றிசாட் பதியுதீன், ஏ.எச்.எம். பௌசி, நஜீப்.ஏ.மஜீத், எம்.எச்.மொஹமட் பிரதியமைச்சர்களான கே.ஏ.பாயிஸ், எஸ்.நிஜாமுதீன்,, மயோன் முஸ்தபா, பைசர் முஸ்தபா, ஹுசைன் பைலா மற்றும் மேல்மாகாண ஆளுநர் அலவி மொலானா, ஜனாதிபதி ஆலோசகர் ஏ.எச்.எம்.அஸ்வர் போன்றோர் கலந்து கொண்டதாக தெரியவருகிறது. ஆயினும் ஈரான் சென்றிருந்த அமைச்சர் பேரியல் அஷ்ரபும் கொழும்புக்கு வெளியேயிருந்த அமைச்சர் சேகு இஸ்ஸதீனும் இச்சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.
இச்சந்திப்பின் போது ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாவை முதலமைச்சராக நியமிக்குமாறு முஸ்லிம் அமைச்சர்கள் கோரியுள்ளனர். ஆனால், கிழக்கு மாகாண முதலமைச்சராக பிள்ளையானை நியமிக்க வேண்டியுள்ளமைக்கான காரணங்களை ஜனாதிபதி, முஸ்லிம் அமைச்சர்களுக்கு எடுத்துக் கூறியதாக தெரிவிக்கப்படுகிது.
இதேவேளை, பிள்ளையானை முதலமைச்சராக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிங்கள கட்சிகள் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஜனாதிபதி முன்னிலையில் நாளை பிற்பகல் பதவியேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment