
சிவகுமாரனின் மரணம் என்பது பின் பற்றக்கூடிய ஒரு தியாக மரணமல்ல. அது வழிதவறிய ஒரு அப்பாவி இளைஞனின் சோக முடிவு.
- செழியன்
பொன்னுத்துரை சிவகுமாரன் என்ற உரும்பிராயைச் சேர்ந்த யாழ் இந்துக் கல்லூரி முன்னாள் மாணவன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடியாக பல தமிழ் தேசியவாதக் குழுக்களால் பார்க்கப்பட்டு வருகின்றார். பொலிசாரின் சுற்றி வளைப்பின் போது அவர்களின் கைகளில் அகப்படாமல் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டதால் அவருக்கு இந்த முதல் மரியாதை.ஆனாலும் அவர் செய்த தியாகம் வீரத்தனமானதா அல்லது கோழைத்தனமானதா என்ற ஆய்வை இன்றையஇளம் தமிழ் சந்ததியினர் செய்வது தமது கடந்த காலத் தவறுகளைத் திருத்திக் கொள்ள பயன்படக்கூடும்.
ஒருவகையில் பார்க்கப்போனால் சிவகுமாரனின் மரணத்தை தியாகம் என்பதைவிட பலிக்கடா மரணம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். ஏனெனில் 1970 பொதுத் தேர்தலைத் தொடர்ந்து தமிழ் அரசியலில் ஒரு குழப்ப நிலையும் ஜனநாயக விரோதப் போக்கும் தலைதூக்க ஆரம்பித்தது. அதற்குக் காரணம் இத் தேர்தலில் அ. அமிர்தலிங்கம் உட்பட பல தமிழ் அரசியல் தலைவர்களை தமிழ் மக்கள் தோற்கடித்திருந்தனர். இதனால் விரக்தியடைந்த அவர்கள் குறுக்கு வழியில் இழந்துபோன அதிகாரத்தை பிடிப்பதற்காக இனவாத விஷத்தை தமிழ் இளைஞர்களின் நெஞ்சங்களில் ஊட்ட ஆரம்பித்தனர். இந்த இனவாத தீக்கு பலியானவர்களில் முதன்மையானவர் சிவகுமாரன். தலைவர்கள் ஆவேச உருவேற்றிவிட அவர் பல வழிதவறிய நடவடிக்கைகளில் இறங்கினார். யாழ்ப்பாணம் பிரதான வீதியில் வைத்து யாழ் மாநகரசபை முதல்வர் அல்பிரட் துரையப்பாவின் காருக்குக் குண்டு வீசினார். யாழ் கோவில் வீதியில் வைத்து யாழ் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சந்திரசேகராவின் வாகனத்துக்கு குண்டு வீசினார். உரும்பிராய் சந்தியில் வைத்து கலாச்சார அமைச்சர் சோமவீர சந்திரசிறீயின் காருக்கு குண்டு வீசினார். அவை எல்லாமே இலக்கு தவறிவிட்டன. கடைசியாக வங்கிக் கொள்ளை ஒன்றில் ஈடுபட்டபோது பொலிசாரால் துரத்தப்பட்டு தப்பியோட முடியாத நிலையில் புகையிலைத் தோட்டம் ஒன்றுக்குள் புகுந்து நஞ்சு அருந்தி தற்கொலை செய்து கொண்டார். அந்த இளைஞனின் இந்த தவறான பாதையை சுட்டிக்காட்டி திருத்துவதற்கு பதிலாக தமிழ் தலைவர்கள் அவரது தற்கொலையை வீரம் என வர்ணித்து அதை முன்மாதிரிhக்கினர்.
தமிழீழ இலட்சியத்துக்கான முதலாவது பலிக்கடா அன்று கோழைத்தனமான முறையில் பலியிடப்பட்டது என்றே இதனைக் கூறலாம்.. இன்று அதையே புலிகள் இராணுவத்திடம் அகப்படும் போது சயனைட் குப்பியைக் கடித்துவிட்டு வீரத்தியாகம் என்கின்றனர். எதிரியின் கைகளில் அகப்படுவதற்கு பயப்படும் ஒருவன், அவனது சித்திரவதைகளுக்கு அஞ்சும் ஒருவன், தற்கொலை செய்துவிட்டு தியாகி என்று போற்றப்படுவதும் மாவீரன் பட்டம் பெறுவதும் தமிழர்களின் பண்டைய வீரவரலாறுகளில் என்றாவது நடந்ததுண்டா? என்றொரு கேள்வியை நாம் இங்கு கேட்க்கலாம். போர் களங்களில் புறுமுதுகு காட்டாமல் எமது பண்டைய மன்னர்கள் போரிட்டதாகவே நாம் வரலாற்றில் படித்துள்ளோம். தமிழினத்தின் பண்டைய வரலாற்றைப் புதுப்பிக்கப் போவதாக சூளுரைத்து போருக்குப் புறப்பட்ட நவீன சேர, சோழ, பாண்டியர்களான புலிகள் எதிரிக்குப் பயந்து தற்கொலை செய்வதை வீரம் என்கின்றனர். என்னே புதிய கண்டுபிடிப்பு! உலகில் எத்தனையோ மாபெரும் புரட்சியாளர்கள் தோன்றியிருக்கின்றனர். அந்த மாபெரும் புரட்சியாளர்களில் லெனின், ஸ்டாலின், மாஓ, ஹேசிமின், பிடல் கஸ்ட்ரோ, சேகுவேரா போன்ற பலர் எதிரிகளால் சிறைப்பிடிக்கப்பட்டு கொடும் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்ட போதும் நிலை குலையாது தமது புரட்சிப் பயணத்தைத் தொடர்ந்துள்ளனர். எமது அண்டை நாடான இந்தியாவில் கூட சுதந்திரப் போராட்ட காலத்தில் காந்தி, நேரு போன்ற எத்தனையோ தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எல்லோரும் புலிகள் செய்வது போல தற்கொலைசெய்திருந்தால் இந்த புகழ் பூத்த தலைவர்களின் வழிகாட்டல் மக்களுக்கு கிடைத்திருக்கவாய்ப்பிருந்திருக்க முடியுமா? எனவே சிவகுமாரனின் மரணம் என்பது பின் பற்றக்கூடிய ஒரு தியாக மரணமல்ல. அது வழிதவறிய ஒரு அப்பாவி இளைஞனின் சோக முடிவு. ஆனால் அவரது மரணத்திற்கு சூத்திரதாரிகளான தமிழ் தலைவர்கள் அவரது துக்கரமான முடிவுடன் தமது அழிவு அரசியலை நிறுத்தவில்லை. மேலும் மேலும் அதை ஊக்குவித்தனர். அதனால் இன்று நாம் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் இளைஞர்களை அநியாயமாகப் பலியிட்டு நிற்கின்றோம்.
இருந்தும் புலித் தலைமையின் இரத்த தாகம் அடங்கவில்லை. வீடு வீடாக சின்னஞ் சிறார்களை கொலைக் களத்திற்கு இழுத்தச் சென்றவண்ணம் உள்ளனர்.அன்றும் சிவகுமாரனின் தவறான பாதையை விமர்சித்தவர்கள், சுட்டிக்காட்டியவர்கள் இல்லாமல் இல்லை. ஆனால் அவர்களது சொல் ஏற்கப்படவில்லை. அவ்வாறானவர்களில் துணிந்து பகிரங்கமாக தமது கருத்தை மக்கள் மத்தியில் சொன்ன இருவரைக் குறிப்பிடலாம். ஒருவர் முன்னை நாள் பருத்தித்துறை நகரசபைத் தலைவரும் தமிழ் காங்கிரஸ் பிரமுகரமான கே. நடராசா. சிவகுமாரன் மரணித்து அந்த மரணத்தை அரசியல் ஆதாயம் பெறுவதற்காக தமிழ் தலைவர்கள் பெரும் சடங்காக நடாத்திக் கொண்டிருந்த வேளையில் நடராசா யாழ் மாநாகரசபை மைதானத்தில் பகிரங்க பொதுக் கூட்டம் ஒன்றில்பேசினார். அந்தக் கூட்டத்தில் பேசிய நடராசா ‘இன்று தமிழ் இளைஞன் ஒருவனின் மரணத்தை சில அரசியல்வாதிகள் பெரும் சடங்காக நடாத்துகின்றனர். சிலர் என்னையும் பார்த்து அந்த மரணச் சடங்கில் கலந்து கொள்ளவில்லையா எனக் கேட்கின்றனர். அவர்களுக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகின்றேன். அதாவது நான் எனது வாழ்க்கையில் ஒரு போதும் தற்கொலை செய்து கொண்டவர்களின் மரணச் சடங்கிற்கு சென்றது கிடையாது. ஏனெனில் தற்கொலை செய்துகொள்பவர்கள் வாழ்க்கையின் சவால்களுக்கு முகம் கொடுக்க திராணியற்றவர்கள், கோழைகள்" என்று கூறினார். என்னே அர்த்தமுள்ள பேச்சு! இதேபோல சிவகுமாரன் மரணித்த நாட்களில் கூட்டம் ஒன்றில் பேசிய மார்க்சிச லெனினிச கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான வி.ஏ. கந்தசாமி, ‘சிவகுமாரன் என்ற ஒரு தமிழ் இளைஞன் தனது உயிரை தானே மாய்த்துக் கொண்டுள்ளார். இந்த மரணம் ஒரு பின்பற்றக்கூடிய உதாரணம் என்று சில அரசியல் தலைவர்கள் கூறிவருகின்றனர். அது தவறு. அவரது தற்கொலை மரணம் கூறும் செய்தி என்னவெனில், தமிழ் தலைமைகள் தற்பொழுது தமிழ் மக்களுக்கு காட்டுகின்ற பாதை தற்கொலைப் பாதை என்பதாகும்,. இதுவருங்காலத்தில் ஏற்படப் போகின்ற அழிவுக்கு முற்கட்டியம் கூறுகின்றது’ என்றார். எவ்வளவு தீர்க்கதரிசனமான வார்த்தைகள்! இன்று புலிகள் நடாத்துகின்ற யுத்தம் தமிழ் மக்களை முற்று முழுதான தற்கொலைப் பாதையில், அழிவுப் பாதையில் இட்டுச் செல்வதை யாராவது இதய சுத்தியுடன் மறுத்துரைக்க முடியுமா? அன்று இந்த இரு தலைவர்களும் மனதில் பட்டதை பேசக்கூடிய குறைந்த பட்ச ஜனநாயகச் சூழலாவது இருந்தது. ஆளால் இன்று ?..?..? ஒன்றை மட்டும் இந்தச் சந்தர்ப்பத்தில் கூறுவது அவசியம். சிவகுமாரனின் மரணத்தை நினைவுகூரும் போது அந்த அநியாய மரணத்துக்காக வருத்தப்படுங்கள். ஆனால் அதை பின்பற்றக்கூடியதான ஆதர்சமாக்காதீர்கள். அவனது மரணம் வழங்கிய எதிர்மறை படிப்பினைகளை தற்கொலைப் பாதையில் விரைகின்ற தமிழினத்துக்கு உணர்த்துங்கள்!.
எதிரொலி

No comments:
Post a Comment