தேர்தலை கண்காணிப்பதற்கு எம்மிடம் போதியளவு கண்காணிப்பாளர்கள் இருக்கவில்லை. 17 கண்காணிப்பாளர்களும் மூன்று குழுக்களாக ஒவ்வொரு மாவட்டத்திலும் கண்காணிப்பை மேற்கொண்டோம். ஆனாலும், எமது அவதானிப்புகளின்படி கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தல் அமைதியானதும் நீதியானதும் சுதந்திரமானதுமாக இடம்பெற்றது என்று ஆசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்தது.
கிழக்கு மாகாண சபை தேர்தலில் மேற்கொண்ட அவதானிப்புக்கள் தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று முற்பகல் கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது.
அதில் பிலிப்பைன்ஸின் முன்னாள் தேர்தல் ஆணையாளர் ரெறிசிற்றா லியாக்கோ புளோறஸ், ஆப்கானிஸ்தான் தேர்தல் ஆணையகத்தின் பிரதி தலைவர் ஜெனரல் அயூப் அஸில், நேபாள தேர்தல் ஆணையகத்தின் தலைவர் யூஷா ஆகியோரின் தலைமையில் பத்து ஆசிய நாடுகளைச் சேர்ந்த 17 கண்காணிப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
இங்கு ஆசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்ட தேர்தல் கண்காணிப்பு அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த பத்தாம் திகதி திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களை உள்ளடக்கிய கிழக்கு மாகாண சபைத் தேர்தல் அமைதியாகவும் நீதியானதும் சுதந்திரமானதுமாக நடைபெற்றது. அரசாங்கத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் உள்ளவர்கள் தேர்தலை சுமூகமாக நடத்துவதற்கு தமது பங்களிப்பை சிறப்பாக வழங்கினார்கள்.
வாக்களிப்பு நிலையங்களில் பணியாற்றியவர்கள் பிரதேசத்தில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டவர்கள் உள்ளிட்ட தேர்தல் கடமைகளை மேற்கொண்ட அனைவரும் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயற்பட்டனர். தேர்தல் ஆணையாளரின் திறமையான வழிகாட்டுதலின் கீழ் அனைத்து தேர்தல் நடவடிக்கைகளும் சட்டம் ஒழுங்கிற்கு அமைவாக இடம்பெற்றது.
மேற்படி தேர்தல் வெற்றிகரமானதாக அமைவதற்கு கிழக்கு மாகாண மக்களின் ஒத்துழைப்பும் ஆர்வமுமே காரணமாகும். இறுதியாக கிழக்கு மாகாண தேர்தல் நீதியானதாகவும், சுதந்திரமானதாகவும் நடைபெற்றது என்பதே எமது இறுதிமுடிவாகும். ஊடகவியலாளர் கேள்வி இவ்வறிக்கையை வெளியிட்ட பின்னர் அது தொடர்பில் ஊடகவியலாளர்கள் காரசாரமாக வினாக்களை தொடுத்தனர்.
தேர்தல் முறைகேடுகளை ஊடகவியலாளர்கள் நேரடியாக கண்டுள்ளதாகவும் பவ்ரல் அமைப்பு வாக்களிப்பு தினத்தில் வன்முறைகள் இடம்பெற்றுள்ளதாகவும், கூறிய ஊடகவியலாளர்கள் அறிக்கை குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என கோரினர். எனினும் சில கேள்விகளுக்கு பதிலளித்த பின்னர் ஊடகவியலாளர் மாநாடு நிறுத்தப்பட்டது.
இதேவேளை இப்பிரச்சினை குறித்து கேசரிக்கு கருத்து தெரிவித்த பிலிப்பைன்ஸின் முன்னாள் தேர்தல் ஆணையாளர் ரெறிசிற்றா லியாக்கோ புளோறஸ் தேர்தல் ஆணையகத்தின் அழைப்பின் பேரிலேயே கிழக்கு மாகாண சபை தேர்தலை கண்காணிப்பதற்காக நாம் இலங்கைக்கு வந்தோம். கிழக்கு மாகாணம் தொடர்பாகவோ, மேற்படி தேர்தல் தொடர்பாகவோ எமக்கு எந்த பின்னணியும், அது தொடர்பான அறிவும் இல்லையென்பது உண்மையே.
அத்தோடு எம்மிடம் போதியளவு கண்காணிப்பாளர்கள் இருக்கவில்லை. 10நாடுகளை சேர்ந்த 17 கண்காணிப்பாளர்களே கடமையில் ஈடுபட்டனர். இதனால், நாம் மூன்று குழுக்களாக பிரிந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் கடமையில் ஈடுபட்டோம்.
இதனால் மாவட்டத்திலுள்ள சகல வாக்களிப்பு நிலையங்களையும் ஒரே நேரத்தில் கண்காணிக்க முடியவில்லை. நாம் எழுமாற்றாக பல்வேறு வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று அவதானித்தோம். எமது அவதானிப்புக்களையே நாம் இங்கு தெரிவித்தோம்.
நாம் அரசாங்கத்துக்கோ அல்லது வேறுயாருக்குமோ சார்பானவர்கள் அல்ல. எமக்கு பல்வேறு நாடுகளில் தேர்தல்களை கண்காணித்த அனுபவமுண்டு.
இங்கு எமது அவதானிப்பின்போது எந்தவித தேர்தல் வன்முறையும் இடம்பெறவில்லை. தேர்தல் நீதியானதும் சுதந்திரமானதுமாக நடைபெற்றது என்று தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment