Saturday, May 10, 2008

வன்னி கிளைமோர் தாக்குதல்கள் எழுப்பும் சில கேள்விகள்!

அண்மையில் (20-04-2008) புலிகளால் இயக்கப்படும் வடக்கு-கிழக்கு மாகாண மனித உரிமை அமைப்பின் தலைவர் வண.பிதா கருணாரத்தினம் அவர்கள் வன்னியில் கிளைமோர் வெடியில் சிக்கி மரணமானார். கருணாரத்தினம் அவர்கள் North East Secretariat on Human Rights என்ற அமைப்பின் மூலமாக புலிகளின் சகல மனித உரிமை மீறல்களையும் இருட்டடிப்புச் செய்து சர்வதேச அரங்கில் அவர்களை நல்ல மனிதர்களாகக் காட்ட முயற்சி செய்து வந்தவர் என்பது உண்மையேயாயினும், ஆயுதம் தரிக்காத ஒரு நபர் என்ற வகையில் அவரது கொலையை யாரும் நியாயப்படுத்தி விட முடியாது. அவரது கொலைக்கான காரணகர்த்தாக்கள் இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினரே என புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இராணுவத் தரப்பு அதை முற்று முழுதாக மறுத்துள்ளது. இதற்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் (06-03-2008) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சிவனேசனும் இவ்வாறான தாக்குதல் ஒன்றில் வன்னியில் வைத்துக் கொல்லப்பட்டார். அப்பொழுதும் புலிகள் இவ்வாறான குற்றச்சாட்டும் இராணுவத்தரப்பில அதறகான மறுப்பும் வெளியாகின. புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னிப் பகுதியில் (முன்னர் கிழக்கிலும்) கடந்த சில வருடங்களாக இவ்வாறான கிளைமோர் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இவற்றில் புலிகளின் பல முக்கிய உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளனர். சில சந்தர்ப்பங்களில் பொதுமக்களும் இவற்றில் அகப்பட்டுள்ளனர். தற்பொழுது ஒரு புதிய அம்சமாக புலிகளுக்கு சார்பான அரசியல்வாதிகள் மதகுருமார்கள் ஆகியோரும் இவற்றில் சிக்க ஆரம்பித்துள்ளனர்.

அரசாங்க பகுதிகளில் என்ன தாக்குதல்கள் நடந்தாலும் புலிகளைக் குற்றம் சாட்டுவது போல புலிகளின் பகுதிகளில் நடைபெறும் தாக்குதல்களுக்கு அரச இராணுவமே காரணம் என்ற ஒரு அபிப்பிராயம் பொதுமக்களிடையே நிலவுகின்றது. ஆனால் இந்தக் கருத்துக்கு அப்பால் வேறுவகையான சில உண்மைகளும் இருக்கின்றனவா ஜயம் அண்மைக் காலங்களில் சிலரிடையே ஏற்பட்டு வருகின்றது. இந்த ஜயத்திற்குக் காரணம் இந்த தாக்குதல்கள் சிலவற்றைப் பொறுத்தவரை அவை நடைபெறுகின்ற இடங்கள் அப்போது நிலவுகின்ற சூழ்நிலை என்பவற்றை வைத்துப் பார்க்கையில் புலிகளும் அவற்றைச் செய்திருக்கலாம் என்ற கருத்து உருவாகி உலா வருகின்றது. இந்த விதமான கருத்து வெளியே மட்டுமின்றி வன்னியில் உள்ள சிலரிடம் நிலவுவதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக புலிகளின் உள்வட்டாரங்களில் நெருங்கி பழகி அவர்களது உள் முரண்பாடுகளை தெரிந்து கொண்டவர்கள் அவ்வாறான ஊகங்களை இரகசியமாக வெளியிடுகின்றனர். புலிகள் தமிழ் மக்களையும் சர்வதேச சமூகத்தையும் அரசுக்கு எதிராகத் திருப்புவதற்கு என்னவிதமான தந்திரோபாயங்களைக் கையாளுவார்கள் என்பதை நன்கு அறிந்தவர்கள் இவர்கள். அண்மையில் வன்னிப்பகுதியில் நடந்த கிளைமோர் தாக்குதல்களை எடுத்துப் பார்க்கையில் புலிகள் மீதான சந்தேகத்தையும் புறந்தள்ள முடியாமல் இருக்கின்றது.

பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசனின் மீதான தாக்குதலை நோக்குகையில் அது ஏ-9 வீதியில் மாங்குளத்திற்கும் கொல்லன்குளத்திற்கும் இடையில் நிகழ்ந்துள்ளது. இப்பகுதி 24 மணி நேரமும் புலிகளினதும் பொதுமக்களினதும் நடமாட்டமுள்ள ஒரு பகுதி. ஏ-9 வீதியைப் பொறுத்தவரை வீதியின் இருமருங்கிலும் காடுகள் எதுவும் கிடையாது. அப்படியான ஒரு இடத்தில் இராணுவ ஆழ ஊடுருவும் அணி ஒருவர் கண்ணிலும் படாமல் நீண்ட நேரம் காத்திருந்து தாக்குதல் நடாத்தவது சாத்தியமா? என்ற கேள்வி எழுவது நியாயமானதே.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிவனேசன் மீது முன்பொருமுறை முறிகண்டியில் வைத்தும் தாக்குதல் நடந்து அவர் அதிலிருந்து தப்பியிருந்தார். அதே பகுதியில் முன்னர் ஒரு முறை புலிகளின் முன்னைய அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்செல்வன் மீதும் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டு அவரும் மயிரிழையில் உயிர் தப்பியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் தமிழ் செல்வன் விமானக் குண்டுவீச்சில் பலியான போது அது உள்வீட்டு சதி வேலை எனத் தெரியவந்தது.

புலிகளின் தற்போதைய தலைமையகமான கிளிநொச்சியிலிருந்து சுமார் 3 மைல் தூரத்திலுள்ள முறிகண்டிவரை இராணுவ அணி ஊடுருவிச் சென்று தாக்குதல் நடாத்துவது சாத்தியமென்றால் புலிகளின் தலைவர்கள் யாருக்குமே பாதுகாப்பில்லை என்றுதான் சொல்ல வேண்டும்! வண.பிதா கருணாரத்தினம் கொல்லப்பட்ட இடமும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள வன்னியின் உட்பிரதேசமாகும். மல்லாவிக்கும் வவுனிக்குளத்திற்கும் இடையில் அவர் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த வவுனிக்குளத்திலிருந்துதான் மல்லாவி, யோகபுரம், ஒட்டன்குளம், துணுக்காய், செல்வபுரம் போன்ற பகுதிகளுக்கு நீர்ப்பாசனம் செய்யப்படுகின்றது. வவுனிக்குளத்தைக் கடந்தே செல்வபுரம், பாண்டியன்குளம் ஆகிய பகுதிகளுக்குச் செல்ல வேண்டும். முன்னைய காலத்தில் பாண்டியன்குளம், வன்னி சிற்றரசன் கயிலைவன்னியனின் பனங்காமம்பற்று இராசதானிக்குள் அடங்கியிருந்த ஒரு கிராமமாகும். ஏனைய பகுதிகள் அனைத்தும் பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட அரச குடியேற்றத் திட்டங்களாகும். இப்பகுதியிலிருந்து இராணுவத்தின் மன்னார் முன்னரங்க நிலைகளுக்கு வெகுதூரம் செல்ல வேண்டும்.

வண.பிதா கருணாரத்தினம் தனது பழுதுபட்ட வாகனத்தை கட்டி இழுத்துச் செல்வதை நன்கு அறிந்தவாகளே நிச்சயமாக அவர் மீதான தாக்குதலை மேற்கொண்டிருக்க வேண்டும். அதுவும் அவரது கட்டி இழுத்துச் சென்ற வாகனத்தைத் தவிர்த்து அவரை மட்டும் குறி வைத்து தாக்குதல் நடந்துள்ளது. இராணுவம் தான் அவரைக் குறிவைத்துத் தாக்கியிருந்தால் அவர்களுக்கு உள்ளுரில் உளவாளிகள் இருந்திருக்க வேண்டும். அவர் என்று தெரியாமல் தாக்கியிருந்தால் அவருக்கு முன்னர் அப்பாதையால் சென்ற பிரயாணிகள் மினி பஸ், உழவுயந்திரங்கள் என்பனவும் தாக்கப்பட்டிருக்க வேண்டும். எனவே எடுத்த எடுப்பில் இராணுவத்தின் மீது குற்றம்சாட்டுவது நம்பகத்தன்மையானது அல்ல.

அண்மையில் மடுப்பிரதேசத்தில் நடைபெற்ற யுத்தத்தை அடுத்து புலிகள் மீது இலங்கையிலுள்ள கிறிஸ்தவ மக்கள் மத்தியிலும் சர்வதேச நாடுகள் மத்தியிலும் பலத்த அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மடுக்கோவிலை அண்டிய பகுதிகளை புலிகள் யுத்தத்திற்கு பயன்படுத்தியதாலும் மடுமாதா திருச்சொரூபத்தை தமது பகுதிக்கு எடுத்துச் சென்றதாலுமே இந்த அதிருப்தி ஏற்பட்டது. போதாததிற்கு இலங்கையின் அடுத்த பிரதமராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட பிரசித்தி பெற்ற தமிழ் கிறிஸ்தவ அமைச்சரான ஜெயராஜ் பெர்னாண்டோ பிள்ளேயை கொலை செய்ததின் மூலம் கிறிஸ்தவ சமூகத்தின் ஆத்திரத்தை மேலும் சம்பாதித்துள்ளனர்.

மடுமாதா சொரூபத்தை முன்னைய இடத்தில் கொண்டு போய் வைக்கும்படி வத்திக்கானும் இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் மன்றமும் வேண்டுகோளும் விடுத்துள்ளன. அதை ஏற்றுக் கொள்ளாத புலிகள் எல்லாவற்றுக்கும் அரசையே குற்றம்சாட்டி வந்தனர். ஆனால் அது எடுபடவில்லை. எனவே வெளிநாடுகளுக்கு பரிச்சயமான மனித உரிமைச் செயற்பாட்டாளரும் கத்தோலிக்க மத குருவுமான வண.பிதா கருணாரத்தினம் அவர்களைக் கொலை செய்து பழியை அரசின் மீது போடுவதன் மூலம் அரசிற்கு அபகீர்த்தியை உண்டுபண்ணலாம் எனக் கருதியே புலிகள் அவரைக் கொலை செய்திருக்கலாம் என்ற அபிப்பிராயம் பொதுவாக நிலவுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசனின் மரணத்திற்கும் புலிகள் அரசு மீது குற்றம் சுமத்தினாலும் வடமராட்சியிலுள்ள அவரது உறவினர்கள் மத்தியிலும் வட பகுதியிலுள்ள தெங்கு பனம் பொருள் உற்பத்தி விற்பனவு ஊழியர்கள் மத்தியிலும் புலிகளே அக்கொலையைச் செய்ததாக பலத்த அபிப்பிராயம் நிலவுகின்றது. அண்மையில் அவர் நினைவாக நினைவுமலர் வெளியிட்ட வைபவத்தில் பேசிய சிலர் அதை சூசகமாகக் குறிப்பிட்டதையும் அவதானிக்க முடிந்தது.

இந்த அபிப்பிராயங்களையெல்லாம் ஒருபுறம் தள்ளிவிட்டு இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணி தான் இக் கொலைகளைச் செய்தது என்று வைத்துக் கொண்டால், அப்பொழுது வேறு சில கேள்விகள் எழுகின்றன. முன்பெல்லாம் புலிகள் தமது பாதுகாப்பு கட்டமைப்பின் மேன்மையைப் பற்றிக் குறிப்பிடும் போது காற்று புகமுடியாத இடத்திற்குள்ளும் தாம் புகுவோம் என்றும், ஆனால் தமது பிரதேசத்துக்குள் எறும்பு கூட நுழைய முடியாது என்று வீரம் பேசுவதுண்டு. அப்படியானால் இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணி எவ்வாறு அவர்களது தலைநகரான கிளிநொச்சிக்கு அருகாமை வரையிலும் முன்னேறுகின்றது? எவ்வாறு நாட்கணக்கில் அங்கு தங்கியிருந்து தாக்குதல் நடாத்திவிட்டு பாதுகாப்பாக திரும்புகின்றது? அந்தப் பகுதிகளில் அடிக்கடி நடமாடும் புலிகளின் முக்கியஸ்தர்கள் எவ்வாறு இராணுவத்தின் தாக்குதல்களிலிருந்து தப்பிவிட அரசியல்வாதிகளும் மதகுருமாரும் பொதுமக்களும் மட்டும் அகப்படுகின்றனர்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் புலிகள் சரியான பதிலைச் சொல்லாத வரையும் புலிகள் மீதான சந்தேகம் தீரப்போவதில்லை. வலுத்துக் கொண்டே செல்லும்.

இங்கு இன்னொன்றையும் குறிப்பிடுவது அவசியம். சிங்களப் பகுதிகளில் புலிகள் தாக்குதல் நடாத்தும் போதெல்லாம் அதைப்பற்றி யாராவது கேட்டால் அது அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதியில் நடைபெறுவதால் அதற்கும் தமக்கும் சம்பந்தம் இல்லையென்றும் அதற்கான முழுப்பொறுப்பையும் அரசு தான் ஏற்க வேண்டும் என்றும் சு.ப.தமிழ்செல்வன் முன்பு அடிக்கடி கூறுவார். அதன்படி பார்த்தால் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடைபெறும் தாக்குதல்களுக்கும் அரசாங்கம் பதில் கூறத் தேவையில்லையல்லவா?

இந்த தாக்குதல்களை புலிகளோ அரசாங்கமோ நடாத்தவில்லையென்றால் வேறு எதாவது மூன்றாவது சக்தி செய்கின்றதா? அதாவது இன்னமும் புலிகளோடு ஒட்டிக் கொண்டு மறைந்திருக்கும் மாத்தையாவின் ஆட்கள் அல்லது பிரபாகரனுடன் முரண்பட்டு நிற்கும் கடல்தளபதி சூசையின் ஆட்கள் செய்கின்றனரா? புலிகள் தமது நாசகார படையணிகளான தற்கொலைக் குண்டுதாரிகள், பிஸ்டல் குழுவினர், புலனாய்வுப் பிரிவினர், கரும்புலிகள் போன்றோரைக் கலைத்துவிட்டு நேர்மையான முறையில் ஜனநாயக அரசியலுக்கு திரும்பாத வரை, அவர்கள் கொடுப்பதை வட்டியும் முதலுமாகத் திரும்பப் பெற வேண்டிவரும் என்பதே தர்க்க ரீதியான உண்மையாகும்….

முல்லை ஈஸ்வரன்

Thanks.. THENEE.COM

No comments: