தமிழீழம் எட்டு மாவட்டங்களைக் கொண்டது. அவை:
யாழ்ப்பாணம் (சப்த தீவுகள் உட்பட)
மன்னார்
முல்லைத்தீவு
கிளிநொச்சி
வவுனியா
திருக்கோணமலை
மட்டக்களப்பு
அம்பாறை
புத்தளம்
இன்னமும் பெரும்பகுதி இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் திருக்கோணமலை தமிழீழத்தின் தலைநகராகக் கருதப்படுகிறது.
சுயநிர்ணய உரிமைப் போர்
தமிழீழத்தின் சுயநிர்ணய உரிமையை அல்லது தனிநாட்டுப் பிரிவினையை வேண்டி கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் உள்நாட்டுப் போர் ஆயுதம் தாங்கிய தமிழ்ப் போராளிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நடைபெறுகின்றது. அரசியல் ரீதியான கோரிக்கைகளும் சாத்வீகப் போராட்டங்களும் 1956ம் ஆண்டளவிலேயே தொடங்கிவிட்டன.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமையில் ஆயுதப் போராட்டம்
இந்திய நலன்களுக்கும் மேலாதிக்க சக்திகளுக்கும் சார்பாக இருத்தல் தொடர்பான உட்சந்தேகங்கள் அதிகாரப்போட்டிகள் சகோதரக் கொன்றொழிப்புக்கள் போன்ற நிகழ்வுகளைத்தொடர்ந்து இப்போராட்டத்தை தொடக்கிய கொண்டு நடத்திய தமிழ்ப் போராளி இயக்கங்கள் பல அழித்தொழிக்கப்பட்டும் பின்தள்ளப்பட்டும் போக அவற்றுள் வலுவான இயக்கமாக தன்னை நிலைப்படுத்திக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மட்டுமே தற்போது தமிழீழ விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தை நடத்திவருகிறது.
தற்போது தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசமான வன்னிப்பகுதி தமிழீழம் என அழைக்கப்படுவதோடு அப்பகுதி விடுதலைப்புலிகள் இயக்கத்தினால் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டுவரும் தனியான காவல் துறை நீதித்துறை அரசியல் அமைப்புக்கள் இராணுவம் வைப்பகம் பொருளாதாரக் கட்டுமானங்கள் திட்டமிடல் வரி போன்றவற்றோடு பன்னாட்டுச் சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத தனித்தேசமாகவே இயங்கிவருகிறது.
சமாதான நடவடிக்கைகள்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் நோர்வே அரசின் உதவியுடன் மாசி 2002ல் ஒப்புக் கொள்ளப்பட்டடு போர் நிறுத்த உடன்படிக்கை 2006 வரை இருந்தது 2006 ம் ஆண்டு இது சிங்கள இராணுவத்தால் முறியடிக்கப்பட்டு விட்டது
தமிழீழ போராட்டத்துடன் தொடர்புடைய ஈழஇயக்கங்கள்
தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE)
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP)
தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP)
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி (EPRLF)
தமிழர் மக்கள் விடுதலைக் முன்னனி (PLOT)
தமிழீழ விடுதலை இயக்கம் (TELO)
தமிழர் விடுதலைக் கூட்டனி (அரசியல் கட்சி)
ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் (EROS)
இந்திய இலங்கை இணைப்பு இயக்கம் (ICMM - 1971-1980)
தமிழர் விடுதலை இயக்கம் (TLO - 1974-1978)
தமிழ் புதிய புலிகள் (TNT - 1972-1978)
தமிழீழ விடுதலை இராணுவம் (TELA)
தமிழீழத்தில் முஸ்லீம்கள்
தமிழீழப் பிரதேசத்தை தமது தாயகப் பிரதேசமாக இலங்கை முஸ்லீம்கள் கருதுகின்றனர். இவர்களில் பெரும்பாலனவர்கள் தமிழையே தமது தாய் மொழியாகக் கொண்டிருந்தாலும் தனித்துவமான ஒரு முஸ்லீம் அரசியல் சமய அடையாளத்தை முன்னிறுத்துகின்றனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் அம்பாறை, மன்னார், புத்தளம், மட்டக்களப்பு, திருக்கோணமலை ஆகிய பிரதேசங்களில் வாழ்கின்றனர்.
யாழ் மாவட்டத்தில் கணிசமான முஸ்லீம்கள் வாழ்ந்து வந்தார்கள். தமிழீழ விடுதலைப்புலிகள் 90களில் அவர்களைத் தீடீர் கட்டளையின் கீழ் வெளியே செல்லும்படி பணித்தனர். இந்நிகழ்வு தமிழீழப் போராட்ட வரலாற்றிலும், தமிழீழ விடுதலைப்புலிகளின் வரலாற்றிலும் அழிக்கமுடியாத ஒரு கறையாகக் கணிக்கப்படுகின்றது. தமிழீழ விடுதலைப்புலிகள் பின்னர் அந்நிகழ்வு மட்டில் முஸ்லீம்களிடம் மன்னிப்புக் கோரியதுடன் அவர்களை மீண்டும் யாழில் குடியமர அழைத்தார்கள்.
தமிழீழத்தில் சிங்களவர்
ஈழப்போராட்டத்தின் முன்னர் தமிழீழப் பிரதேசங்களில் அங்காங்கே பல சிங்களக் குடும்பங்கள் வசித்து வந்தன. போராட்டம் தொடங்கப்பட்ட பின்னர் வட மாகாணத்தில் இருந்து பெரும்பாலான சிங்களப் பொதுமக்கள் வெளியேறி விட்டார்கள்.
தமிழர்களின் தமிழீழத் தாயகக் கோரிக்கையைச் சிதைக்கும் நோக்குடன் இலங்கை அரசு பல சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டனர். இவற்றுள் வடக்கையும் கிழக்கையும் பிரிக்கும் மணலாற்றுச் சிங்களக் குடியேற்றங்கள் குறிப்பிடத்தக்கவை.
கிழக்கு மாகாணத்தில் தார்மீக ரீதியாகவும் திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்றங்களினாலும் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு சிங்களவர்களே வசிக்கின்றார்கள். குறிப்பாக தமிழீழத்தின் தலைநகராகக் கருதப்படும் திருகோணமலையில் மூன்றில் ஒரு பங்கு சிங்கள மக்களே வசிக்கின்றார்கள்.
தமிழீழத்தில் மலையக தமிழர்களின் நிலை
இந்தியாவில் இருந்து பிரித்தானிய காலனித்துவ அரசால் தேயிலைத்தோட்டங்களில் வேலை செய்வதற்காக வருவிக்கப்பட்ட இந்தியத் தமிழ் மக்களை மலையக தமிழர் அல்லது இந்திய வம்சாவழித் தமிழர் என்று அழைப்பர். இவர்களில் கணிசமானவர்கள் வடக்கு - கிழக்கில் பல்வேறு காலகட்டங்களில் குடியமர்ந்தனர். பொதுவாகஇ வசதி படைத்த இலங்கைத் தமிழர்களின் வீடுகளில் கூலி வேலை செய்வதே இவர்களின் முதன்மைத் தொழில் மார்க்கமாக இருந்தது.
சமூக அமைப்பு
தமிழீழச் சமூகம் ஒரு சாதிய படிநிலை அடுக்கமைவு கொண்ட சமூகம். வெள்ளாளர் எனப்படும் பெரும்பான்மை வேளாண்மை நில உடமைச் சமூகமே ஆதிக்கமிக்க சாதியாகும். பிராமணர்களிடம் ஆதிக்கமிக்க சாதியாகத் திகழக்கூடிய அளவுக்குக் சனத்தொகை இல்லை. தாழ்த்தப்பட்டோர் சமூகத்தின் தொடர் போராட்டம் காரணமாகவும்இ ஈழப்போராட்டம் காரணமாகவும் சாதிய அமைப்பு பெரும்பாலும் பலம் இழந்து இருக்கின்றது. எனினும் திருமணத்தின் ஊடாக தொடர்ந்து சாதிய அமைப்புப் பேணப்பட்டே வருகின்றது
தமிழீழ மொழிகள்
தமிழீழத்தில் தமிழே அனைத்து மட்டங்களிலும் (நிர்வாகம், கல்வி, வர்த்தகம்)பயன்படுகின்ற மொழியாக இருக்கின்றது. ஆங்கிலம் உலக மொழி போன்று செயல்படுவதால் ஆங்கிலம் பிரதான வெளி தொடர்பு மொழியாக இயங்குகின்றது. ஆங்கில பெயர்பலகைகள், வழிகாட்டல் ஆவணங்கள், கல்லூரிகள்,மேல்நிலைக் கல்வி ஆகியவை ஆங்கிலத்தின் தேவையை நன்கு உணர்த்தி நிற்கின்றன. சிங்கள மக்களும், அவர்களுடையான வர்த்தக பண்பாட்டு அரசியல் தொடர்புகளும் தமிழீழத்தின் இருப்பிற்கு அருகிலானவை, இயல்பானவை, இன்றியமையாதவை. எனவே சிங்களமும் ஒரு முக்கிய மொழியாக தமிழீழத்தில் பயன்படும். மேலும், புலம்பெயர் தமிழர்கள் பல மொழி தளங்களில் இயங்குகின்றார்கள், அவர்களை உள்வாங்குவதற்கு ஒரு பல்மொழி அணுகுமுறையும் தேவையாக இருக்கும்.
தமிழீழத்தில் சமயங்கள்
தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் சைவ இந்துக்கள் ஆவர். முருகன், ஐயனார், சிவன், அம்மன், பிள்ளையார் போன்ற கடவுளர் பெரும்பாலும் வழிபடப்படுகின்றனர். தமிழர்களில் கணிசமான தொகையினர் கிறிஸ்தவ சமயத்தைப் பின்பற்றுகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்தோ கல்வி காலனித்துவ அரச சலுகைகள் காரணமாகவோ சமயம் மாறியவர்கள் ஆவர். தமிழ்க் கிறிஸ்தவர்களின் ஈழப் போராட்டத்துக்கான பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தமிழீழத்தில் இஸ்லாம் மற்றும் பொளத்தம் முஸ்லீம் மற்றும் சிங்கள மக்களால் பின்பற்றப்படுகின்றன.
கல்வி
தமிழீழ மக்கள் கல்விக்கு மிக முக்கித்துவம் தருகின்றார்கள். இவர்களின் கல்வியறிவு 90% இற்கும் மேலானது. பல தரமான கல்லூரிகளைத் தமிழீழம் கொண்டுள்ளது. யாழ் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம் ஆகியவை இங்கு இயங்கும் இரு பல்கலைக்கழகங்கள் ஆகும்.
பொருளாதாரம்
தமிழீழ மக்கள் பெரும்பாலும் உழவையும், மீன்பிடித்தலையுமே பிரதானமாக மேற்கொள்கின்றனர். தற்சமயம் ஈழப்போராட்டம் காரணமாக புலம்பெயர்ந்த மக்கள் அனுப்பும் பணமும் தமிழீழ பொருளாதாரத்துக்கு மிக முக்கியமாகின்றது. இங்குப் பொருள் உற்பத்தித் துறை, உயர் தொழிநுட்பத் துறை போன்றவை மந்தமாகவே பங்களிக்கின்றன.
எதிர்காலம்
தமிழீழத்தின் எதிர்காலம் அதன் அரசியல் நிலைமைகளிலேயே தங்கியுள்ளது. இனப்பிரச்சினைக்கு ஒரு சுமூகமான தீர்வு கிடைத்தால் தமிழீழம் ஒரு வளர்ச்சிமிக்க சமூகமாக பரிணாமிக்க சந்தர்ப்பம் உண்டு. எவ்வித தீர்வும் இல்லாமல் இழுப்பறி நிலை தொடர்ந்தாலோ போர் மீண்டும் தொடங்கினாலோ தமிழீழம் பல்வேறு பின்னடைவுகளைச் சந்திக்க வேண்டிவரும்.
No comments:
Post a Comment