Sunday, June 1, 2008

ரணில் விக்ரமசிங்காவின் உயிர் காக்குமா எருமைக்கன்று?

இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்காவின் மனைவி மைத்ரேயா, ஏடு ஜோதிடப்படி கணவனின் உயிரைப் பாதுகாக்க தமிழகத்தில் உள்ள குச்சனூர் சனி பகவான் கோவிலில் எருமைக்கன்று தானம் வழங்கி உள்ளார்.இலங்கையில் யுத்தம் வலுத்து வரும் வேளையில் அங்குள்ள முக்கிய வி.ஐ.பி.,க்களின் உயிருக்குப் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. இதில், இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், ஏடு ஜோதிடம் பார்த்து கணவனின் உயிரைக் காப்பாற்ற அவரது மனைவி மைத்ரேயா முடிவு செய்தார்.


சென்னை அருகேயுள்ள அச்சரபாக்கம் வந்த அவர், தனது கணவரின் எதிர்காலம், ஆயுள் குறித்து ஏடு பார்த்துள்ளார். அதில், ரணிலுக்கு சனி திசை நடப்பதாகவும், முன்னோர்களின் பாவ வினைகளின் படி சில பரிகாரங்களைச் செய்ய வேண்டும் என்றும் ஏடு ஜோதிடர்கள் கூறி உள்ளனர்.இதையடுத்து, ரணிலின் உயிருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தைப் போக்க, பரிகாரம் செய்ய அவரது மனைவி முடிவு செய்தார். குச்சனூரில் உள்ள சனி பகவான் கோவிலுக்கு எருமைக்கன்று வழங்கி பரிகாரம் மேற்கொள்ள வேண்டும் என்ற ஜோதிடர்களின் ஆலோசனையை ஏற்று, கடந்த வாரம் இதற்காக குச்சனூர் கோவிலுக்கு மைத்ரேயா வந்தார். குச்சனூர் கோவிலுக்கு நேர்த்திக்கடனாக வழங்க எருமைக்கன்று வாங்கிய மைத்ரேயா, இளம் கன்றின் கழுத்தில் 19 துணிகள் கட்டி, கோவிலில் வலம் வந்து பூசாரியிடம் வழங்கினார். முன்னதாக, ஏட்டில் அறிவுறுத்தப்பட்டிருந்த பரிகாரப்படி 27 எள் விளக்குகளையும், காக்கை பொம்மைகளையும் செலுத்தி வழிபட்டார். இறுதியாக, 50 பேருக்கு அங்குள்ள ஓட்டல் ஒன்றில் டோக்கன்கள் வாங்கி கொடுத்து அன்னதானம் செய்து புறப்பட்டுச் சென்றார். இது குறித்து, ஜோதிடர்கள் சிலர் கூறுகையில், "ஒரு சிலருக்கு மட்டுமே கன்று வழங்கி பரிகாரம் செய்யும்படி அமையும். உயிரைப் பறிக்கும் எமதர்மராஜனின் சகோதரர் சனிக்கு வழங்க அதன் பாதிப்பு விலகும். எனவே, மைத்ரேயா இந்த வகை பரிகாரம் செய்துள்ளார்' என தெரிவித்தனர்.

No comments: