Wednesday, June 4, 2008

பாவம் பொது நூலகம்! மீண்டும் தனிமரமாகிவிட்டது


பாவம் பொது நூலகம்! மீண்டும் தனிமரமாகிவிட்டது! : சாம்பலில் இருந்து 27 ஆண்டுகள் :

என் செல்வராஜா ஜூன்1

ஈழத் தமிழர்களின் வாழ்வில் இன்று ஒரு மிக முக்கியமான நாள். 27 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தின் கலாச்சார அறிவியல் மையங்களில் ஒன்றாக நிமிர்ந்து நின்ற யாழ்ப்பாணப் பொது நூலகம் எரியூட்டப்பட்ட அவலம் நடந்தேறிய நாள். யாழ்ப்பாண நூலகத்தோடு சேர்த்து தமிழரின் ஒரேயொரு பத்திரிகையாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ஈழநாடு பத்திரிகை அலுவலகம், பூபாலசிங்கம் புத்தக சாலை ஆகிய மற்றும் இரு அறிவு மூலங்களும் சேர்த்தே திட்டமிட்டு எரித்து அழிக்கப்பட்டன. 1981ம் ஆண்டு மே மாதம் 31ம் நாள் நள்ளிரவின் பின்னர் இலங்கை அரசின் கைக்கூலிகளான காடையர்களாலும் பாதுகாப்புப் படையினராலும் இந்தப் படுபாதகச்செயல் இருளின் பாதுகாப்புடன் செய்து முடிக்கப்பட்டது. ஈழத் தமிழர்களால் மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் அறிவுசார் சமூகங்கள் எதனாலும் மன்னித்து ஒதுக்கிவிட முடியாததொரு படுபாதக நிகழ்வு அது.

நூல்களை எரிப்பதும், நூலகங்களை எரிப்பதும், அறிவுஜீவிகளை அழிப்பதும் தமக்குப் பாதகமானதெனக் கருதும் மாற்றுக் கருத்தை இல்லாமல் செய்வதற்கான வழி முறைகளாக அதிகார வர்க்கங்களினால் நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வந்துள்ளது.

உலக வரலாற்றை நாங்கள் பின்நோக்கிப் பார்த்தோமானால், மடாலயங்களில் சேகரித்து வைக்கப்பெற்ற நூல்களை எதிரிகள் அழித்தார்கள், அலெக்சாந்திரியா நூலகத்தை நிர்மூலமாக்கினார்கள் என்பதெல்லாம் அங்கு வரலாறாகப் படிந்தவிட்டன. பப்பைரஸ் என்னும் பத்திரிகைத்தாளின் முன்னோடியான நாணல் புல்வகையை உலகம் அறிந்திராத அந்நாளில் இருந்த நூல் ஒரு பிரதியோ ஒருசில பிரதிகளோ ஏடுகளிலும், களிமண் தகடுகளிலும், எழுதப்பட்டுப் பேணப்பட்டு வந்திருந்தன. சொற்ப பிரதிகளே உலகில் இருக்கக்கூடிய ஒரு நிலையில், அவற்றை அழிப்பதன் மூலம் அதிகார வர்க்கம் அதிலிருந்த கருத்துக்களை குழி தோண்டிப் புதைப்பதில் ஓரளவு வெற்றி கண்டிருக்கலாம். அன்று மட்டுமல்ல இன்றும்கூட அச்சியந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிற்காலத்திலும் - பல்லாயிரம் பிரதிகள் ஒரு நூலில் உருவாக்கப்படும் இன்றைய காலத்தில் கூட இந்த அழிவுத் தேட்டங்களை எரியூட்டியழிக்கும் நடைமுறையைக் கைக் கொள்வதினால் எதைச்சாதித்து விட்டார்கள் என்று தெரியவில்லை.

கி.மு. 213இல் புராதன சீனாவின் சக்கரவர்த்தி ஷி ஹவாங் டி Shih Huang-ti. இருந்தார். ஓருங்கிணைக்கப்பட்ட பெருஞ்சீனப் பேரரசின் முதலாவது மன்னராகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டவர் இவர். இவர் தான் சீனப் பெருஞ்சுவரைக் கட்டுவிப்பதில் முன்னோடியாயிருந்தவர் என்பதும் வரலாறு. தனது ஆட்சிக்காலத்தில் தான் சீன வரலாறு எழுதப்படவேண்டும் என்ற பேராசை இவருக்கு. இந்தப் பேராசையை செயலுருவாக்கும் வகையில் நோக்கில் விவசாயம், விஞ்ஞானம் மற்றும் எதிர்வு கூறும் சாத்திர நூல்களைத் தவிர்ந்த அனைத்து நூல்களையும் சீனாவில் எங்கிருந்தாலும் எரித்துவிடும்படி உத்தரவிட்டிருந்தார். மாய மந்திரக்கலைகளின் பாலிருந்த இவரது அதீத ஈடுபாட்டுக்கு கன்பூசிய கொள்கையாளர் களினால் தெரிவிக்கப்பட்ட மாற்றுக் கருத்தும் இந்த முடிவுக்குக் காரணம் என வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர். தடைசெய்யப்பட்ட நூல்கள் பற்றிக் கலந்துரையாடுவதே மரண தண்டனைக்குரிய குற்றமாகப் பிரகடனப்படுத்தியிருந்தார். இதன் மூலம் எதிர்பார்த்த நீடித்த ஆட்சி அவருக்குக் கிடைக்கவுமில்லை. பெருஞ்சீன வரலாறு திருத்தி எழுதப்படவுமில்லை. அதே வேளை சீன உளவியல் கருத்துக்கள் உலகப்புகழ்பெறத் தவறவுமில்லை.

மாறாக கி.மு.206 இன் பின் அவரது ஆட்சியைக் கைப்பற்றிய பின்னைய ஆட்சியாளர்களால் சீன இலக்கியம் செழிக்கவைக்கப்பட்டது. ஆவணக்காப்பகங்கள் உருவாகின. பழைய வரலாறு பேண வழிகோலப்பட்டது. இதுவும் வரலாறு.

கிரேக்கத்தில் அலெக்சாந்திரியா நூலகம் கி.மு.283இல் பல்லாயிரம் ஆவணச் சேகரிப்புகளால் பெருமை பெற்றிருந்தன. ஏதென்சின் பலநூறு நாடகப்பிரதிகள் அங்கிருந்தன. அரிஸ்டாட்டிலின் சொந்தச் சேர்க்கைகள் கிரேக்க இலக்கியங்கள் அனைத்தும் பேணப்பட்டு வந்தன. நவீன பொது நூலகச் சிந்தனை இங்கு தான் முதலில் தோற்றம் பெற்றிருந்தது. எதிரிகளின் பல்வேறு படையெடுப்புக்களால் இவை எரித்துச் சேதமாக்கப்பட்ட போதும் கிரேக்க இலக்கியமோ அரிஸ்டாட்டிலின் தத்துவங்களோ இன்றுவரை மறைந்துவிடவில்லை.

தமிழகத்தில் சோழர் கால சாசன ஆவணங்களிலே அடிக்கடி இடம்பெறுகின்ற சரசுவதி பண்டாரகங்கள் என்பது அக்காலத்தில் இருந்த நூலகங்களே என்பது வரலாற்றாய்வாளர் கூற்று. இவை பின்னாளில் சரஸ்வதி மகாலயம் என்றும் குறிக்கப்பட்டு வந்துள்ளன. படையெடுப்புக்களால் தமிழகத்தின் நூலகங்கள் அழிந்த போதிலும் இங்கு பேணப்பட்டு வந்த தமிழ் இலக்கியங்கள், இந்து சமயத் திருமுறைகள் எவையும் அழியாமல் பாதுகாக்கப்பட்டு இன்றும் நிலை பெறுகின்றன.

ஜேர்மனியில் ஹிட்லரின் ஆட்சிக் காலகட்டத்தில் மே 1933இல் இடம்பெற்ற நூல் எரிப்புக் கொண்டாட்டமும் எமக்கு வரலாற்றில் சீன மன்னன் Shih Huang-ti. யின் நடவடிக்கைகளையே நினைவூட்டுகின்றன. அன்று ஹிட்லரின் நாசி ஆதரவாளர்களால் நூல்கள் பலாத்காரமாகப் பறிமுதல் செய்யப்பட்டும் சேகரித்தும் எரிப்பதற்காகப் பொது இடமொன்றில் மலையாகக் குவித்து வைக்கப்பட்டிருந்தது. அந்த அறிவியல் மற்றும் வரலாற்று நூல்களின் முன்னால் நின்று அன்றைய நூல் எரிப்பு வைபவத்தை சம்பிரதாய பூர்வமாகத் தொடக்கி (எரித்து) வைத்துப் பேசும் போது ஜேர்மானிய கொள்கைத்திட்ட மந்திரி ஜோசப் கொயபெல்ஸ் (Joseph Goebbels) கூறிய வாசகங்கள் இவை.

”||அடுத்த 1000 வருடங்களுக்கு ஜேர்மானிய வாழ்க்கை முறையே உலகெங்கும் விதந்து பேசப்படப் போகின்றது. இன்று கொழுந்து விட்டெரியப் போகும் இத்தீயின் சுவாலைகள் ஒரு பழைய சகாப்தத்தின் முடிவைத் தெரிவிப்பதுடன் புதிய சகாப்தத்தின் மலர்வுக்கும் ஒளியூட்டப் போகின்றது. வரலாறு திருத்தி எழுதப்படுகின்றது.|”| இது தான் ஜேர்மானிய கொள்கைத்திட்ட மந்திரி ஜோசப் கொயபெல்ஸ் (Joseph Goebbels) கூறிய வாசகங்கள்.

தமது அதிகார வலிமையைப் பயன்படுத்தியும் கூட, ஜேர்மனியர்களின் பழைய வரலாற்றை இந்த நூல்களின் எரிப்பினால் அவர்களால் துடைத்தெறிந்துவிட முடியவில்லை. மாறாக அந்த எரிப்பின் பின் எஞ்சிய சாம்பல் தான் அந்த மூடர்களின் முகங்களில் கரியாய் நிலைத்தது.

சமகால நிகழ்வுகளை நாம் பார்ப்போமானால், 1981இல் எமது தாயக மண்ணில் தமிழ் இன அழிப்பைத் திட்டமிட்டவர்கள், யாழ்ப்பாண நூலகத்தை எரித்தார்கள். ஈழநாடு பத்திரிகைக் கட்டிடத்தை எரித்தார்கள். அவர்கள் கண்டது என்ன? 27 வருடங்களாகியும் அந்த ரணம் மாறாத நிலையில் உலகளாவிய ரீதியில் யாழ்ப்பாண நூலகம் பேசப்படும் நிலை உருவாகியது. அந்த எரிப்பின் பின் ஈழ விடுதலைப் போராட்டம் பற்றிய தீவிரம் அதில் அது வரையில் அக்கறைப்படாத பல புத்திஜீவிகளையும் அரசியலுக்கு அப்பாலும் கவர்ந்தது. மேலும் பல்லாயிரம் விடுதலைப் போராளிகளை போராட்டம் உள்வாங்கியது. ஈழ விடுதலைப் போராட்டம் பற்றிய செய்தியைää யாழ். நூலக எரிப்பு உலகின் மூலை முடுக்கெல்லாம் எடுத்துச் சென்றது. அன்று அங்கிருந்த ஒரே ஒரு பத்திரிகை ஈழநாடு. ஏரியுண்டதன் பின் என்ன நடந்தது. எத்தனை பத்திரிகைகள் அங்கு முளைவிட்டன. இங்கு புகலிடம் வரை அவை படர்ந்துள்ளன. இது வரலாறு. இவை எல்லாம் 1981 மே 31ம் திகதி ஊரடங்கு நள்ளிரவில் இலங்கை அரசின் காவலர்கள் உரசிய ஒரு தீக்குச்சியின் பலாபலன்.

பொஸ்னியாவில் 1890இல் கட்டப்பெற்று 155 000 அரிய நூல்கள் உள்ளிட்ட ஒன்றரை மில்லியன் நூல்களைக் கொண்டிருந்த தேசிய பல்கலைக்கழக நூலகங்களை சேர்பியர்கள் ஆகஸ்ட் 1992 இல் மூன்று நாட்களாக முயன்று எரித்தார்கள். விளைவு? உலக அரங்கில் பொஸ்னியாவுக்கான ஆதரவுக்கரம் நீட்டப்பட்டது. பல்வேறு நிறுவனங்கள் உலகெங்கிலும் இருந்து பொஸ்னிய ஆவணங்களைச் சேகரிக்கும் இயக்கத்தை ஸ்தாபித்தார்கள். அத்துடன் இலங்கை போலவே பொஸ்னிய-சேர்பிய தகராறும் உலக அரங்கில் வெளிச்சத்துக்கு வந்தது.

2000 மார்ச் 9ம் திகதி கியுபாவின் நூலகங்களின் நண்பர்கள் என்ற அமைப்பு வெளியிட்ட ஒரு அறிக்கையில் ஸ்பெயின் அரசு கலாச்சார உதவித்திட்டத்தின் கீழ்; கியுபா அரசுக்கென அன்பளிப்புச் செய்த நூற்றுக்கணக்கான நூல்கள் கொண்ட பொதிகள் எரிக்கப்பட்டு புதைக்கப்பட்டு மறைக்கப்பட்டு விட்டதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது. கியுபாவின் மோசமான தணிக்கை விதிகளை அறிந்திராத வெளிநாட்டு உதவி நிறுவனங்கள் அனுப்பும் நல்லெண்ண உதவிகள் எதுவும் கியுபாவின் நூலகங்களை பெரும்பாலும் அடைவதே இல்லை என்பதை இந்த அமைப்புக்கள் அறிவதில்லை. இப்படி அழிக்கப்படும் நூல்களில் அரசியல் சித்தாந்தங்களையோ, சர்வதேச மனித உரிமைப் பிரகடனங்களையோ பிரதி பலிக்காத சாதாரண அறிவியல் நூல்களும் சிறுவர் நூல்களும் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சல்மான் ரூஷ்டிக்கு மரண தண்டனை விதித்ததும் ஈரானிய கொமெய்னிகளின் திட்டம் பலித்ததோ என்னவோ ரூஷ்டியின் நாவல்கள் உலக அரங்கில் விறுவிறுப்பாக விலை போயின. சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த ஆண்டியின் கதையாக முடிந்த வரலாறு இது மட்டுமல்ல.

ஜே.கே. ரோலிங் இன் சிறுவர் நாவலான ஹரிபொட்டர் (Harry Potter and the Sorcerer’s Stone ) 1999-2000 இல் சினிமாவாக்கப்பட்டு வெளிவந்ததும், சில கிறிஸ்தவர்கள் பாதிரியார் Jack D Brock என்பவரின் தலைமையில் நியு மெக்சிக்கோவின் கிறிஸ்தவ சமூக தேவாலயமான அலா மொகோர்டோ தேவாலயத்தில் திரண்டெழுந்தனர். அந்த நூல் மாந்திரீக மாயாஜாலங்களுக்கு எதிரான கிறிஸ்தவ இறையியலின் நம்பிக்கையை கேலிக்குள்ளாக்குகின்றதென்பது அவர்களது குற்றச்சாட்டு. இதன் வெளிப்பாடாக அந்த நூலின் பிரதிகளை ஆலயத்தின் உறுப்பினர்கள் எரித்து அழித்தார்கள். விளைவு ஜே.கே.ரோலிங்கை கண்டு கொள்ளாதவர்களெல்லாம் அவரது நூல்களைப்பற்றிய தேடலில் தம்மை ஈடுபடுத்தினர். விளைவு? வறுமையில் உழன்ற அவரை இன்று உலகின் பெரும் பணக்காரர்களின் வரிசையில் வரலாறு இடம்பெற வைத்துள்ளது.

நூல்களையோ நூலகங்களையோ தற்காலிகமாக புவியியல் வரையறைக்கும் அதிகார வரம்புக்கும் உள்ளே வைத்து அழிக்கலாம். ஆனால் நவீன ஊடக வளர்ச்சி மிக்க இந்நாளில் தொடர்ந்தும் எவ்வளவு காலத்துக்குத் தான் இத்தகைய அநாகரீக முறைகளை அதிகாரவர்க்கம் பின்பற்றப் போகின்றது? தாங்கள் விரும்பாத பக்கங்களை கிழித்தெடுத்து அழிப்பதன் முலம் வரலாற்றை ஒரு சிலரின் பார்வையில் இருந்து சில காலங்களுக்கு அப்பறப்படுத்தலாம். அதுவே முழு உலகின் பார்வையையும் அந்தக் கிழிந்த பக்கங்களின்பால் பின்னர் தீவிரமாகச் செலுத்த உதவும் என்பதை அதிகார வர்க்கம் என்றுமே உணரப்போவதில்லை.

1981ம் ஆண்டு ஜுன் 1ம் திகதி ஸ்ரீலங்கா அரசின் அமைச்சர்களின் ஆதரவுடன் காடையர்களால்; எமது யாழ்ப்பாணப் பொது நூலகம் தீயிட்டு அழிக்கப்பட்டது. நள்ளிரவில் கள்வர் போல வந்து எரித்துச் செல்லும் போது அன்றைய இலங்கை (ஜே ஆர்) அரசு அதை வெறும் கட்டிடத் தொகுதியாக மாத்திரம்; காணவில்லை. யாழ்ப்பாணத்து மக்களின் இதயமாகவே அதைக் கண்டார்கள். அந்த இதயம் வெடித்துச் சிதறும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் சொந்தச் சாம்பலிலிருந்து பீனிக்ஸ் பறவை போலப் புது வேகத்துடன் உயிர்த்தெழுந்து சர்வதேசத்தின் கவனத்தையும் அது கவர்ந்து, அதன்மூலம் தன்னைச் சுற்றி ஒரு அரசியல் ஒளிவட்டத்தையும் ஏற்படுத்திக்கொண்டு உலகத்தின் பார்வைக் குவியமாக மாறிவிடும் என்பதனை அன்று ஒரு தீக்குச்சியை உரச ஆணையிடும் அந்தக் கணப்பொழுதில் அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.

81இல் எரியூட்டப்படுவதற்கு முன்னர் யாழ்ப்பாண மாநகரசபை நூலகம் என்ற வகையில் யாழ்ப்பாண மாநகர எல்லைக்குள் வசித்தவர்களின் பாவனைக்கானதொரு நூலகமாகவே அது இனம்காணப்பட்டிருந்தது. பொதுமக்களி;ன் வரிப்பணத்திலிருந்தும், நூலகவாரங்கள், கொடித்தினங்கள் மற்றும் தினகரன் களியாட்ட விழாக்களின் வருமானங்களிலிருந்துமே இந்த நூலகம் வளர்த்தெடுக்கப்பட்டு வந்தது. நூலகம் வளர்ந்து கிளை பரப்பிட முனைந்த வேளையிலே முளையில் கருகியது.

நூலக அழிப்பின் நட்டஈடாக ஒருகோடி ரூபாய் யாழ் மாநகரசபைக்கு இலங்கை அரசு வழங்க வேண்டும் என்று லயனல் பெர்னாண்டோவின் தலைமையில் அமைந்த விசாரணைக்குழவினர் செய்த பரிந்துரைக்கும் ஜே.ஆர் அரசு இணங்கவில்லை. இந்நிலையில் எரிந்த நூலகத்தை உயிர்ப்பிக்க தமிழ்மக்கள் தாங்களாகவே தாயகத்திலும் உலகெங்கிலுமிருந்தும் நிதி திரட்டினர். 1984இல் எரிந்த நூலகம் மீளமைக்கப்பட்டுத் திறக்கப்பட்டது. இப்போது தான் யாழ். மாநகர எல்லைக்குள் உள்ளவர்களுக்கு மாத்திரம் என்றிருந்த நூலகஅங்கத்துவக் கட்டுப்பாடு முழு யாழ்ப்பாண மாவட்டத்துக்கும் என விரிவுபடுத்தப்பட்டது.

தொடர்ந்த ஆயதப் போராட்டச் சூழல் கோட்டை இராணுவத்தின் எறிகணைவீச்சு என்பன யாழ்ப்பாண நூலகத்தை யாழ் மக்கள் அணுகமுடியாத போர்நிலமாக்கியது. எறிகணைகளாலும் குண்டுகளாலும் துளையுண்டு சாம்பல்பூத்த அந்த நூலகக் கட்டிடம்; ஈழத்தமிழரின் போராட்ட அவலத்தின் நினைவுச்சின்னமாக சர்வதேச ஊடகங்களில் காட்சிப்படுத்தப்பட்டது. அதே வேளையில் வசதிக்குறைவாலும் நிதிப்பற்றாக்குறையினாலும் யாழ்ப்பாண நூலகத்தின் சேவைகளின் செயற்பாடுகளும் சிதறிக் கிளைநூலகங்களாக மாத்திரம் தமக்குள் சேவைகளைக் குறுக்கிக்கொள்ளும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது. கல்விவளம் கவனிப்பாரற்று வரண்டுசெல்லத் தொடங்கியது. யாழ்ப்பாண நூலகத்தின் அடிநாதமான செயற்பாடுகள் மக்கள் மனதிலிருந்து வழுவி யாழ்ப்பாணநூலகம் என்ற அரசியல் ஒளிவட்டம் பொருந்திய கட்டிடத்தின் உருவகமே மக்கள் மனதில் வியாபித்தது.

இந்நிலையில் 1995இல் வெண்தாமரை இயக்கம் தொடங்கப்பட்டவேளை 15 வருட கால ஆழ்நிலைத் தூக்கத்திலிருந்த இலங்கை (சந்திரிகா) அரசு திடீரென விழித்துக்கொண்டு புத்தகமும் செங்கல்லும் என்ற பதாதையுடனும் 80கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டுடனும் குடை கொடி ஆலவட்டத்துடனும் பாழடைந்து நினைவுச்சின்னமாகக் கிடந்த யாழ்ப்பாணப் பொது நூலகக்கட்டிடத்;தை மீளக்கட்டி எழுப்பித் தமிழர் நெஞ்சங்களைக் கவர 10.04.1997இல் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைத்து முடிவு செய்தது.

அரசியல் மயப்படுத்தப்பட்ட யாழ்ப்பாண நூலகத்தின் கட்டிடப் புனரமைப்பு ஆரம்பத்திட்டமிடலில் இருக்கும் போதே அரசு (பொதுஜன ஐக்கிய முன்னணி) அவசரமாக யாழ் கச்சேரிக்கு எதிரிலுள்ள வீடமைப்பு அதிகாரசபையின் மூன்றுமாடிக்கட்டிடத்தின் தரைத்தளம் மாத்திரம் திருத்தப்பட்டு 1998 தைப்பொங்கல் நாளில் திறந்து வைக்கப்பட்டது.

பின்னர் படிப்படியாக நூலகக் கட்டட வேலைகள் பிசுபிசுத்துப் போய் அதற்கென ஒதுக்கப்பட்ட நிதியெல்லாம் ஆங்காங்கே கசியவாரம்பித்தது. பின்னர் அரசு கைமாறியதும், யாழ் மக்களின் மனங்களை மீண்டும் வெல்ல தேங்கியிருந்த திருத்த வேலைகள் மீண்டும் உத்வேகம் கொண்டது. யாழ்ப்பாண மாநகரசபையின் ஒரு சிறு பிரிவினரும் யாழ் மக்களும் அந்த நூலகத்தைப் புனரமைப்புச் செய்யாது அப்படியே நினைவுச்சின்னமாக வைத்திருந்து பாதுகாக்க வேண்டும் என்று விடுத்த வேண்டுகோள்கள் செவிடன் காதில் ஊதிய சங்காயிற்று. நினைவுச்சின்னம் மக்கள் முன்னிலையிலேயே படிப்படியாகப் பூசிமெழுகப்பட்டது. கட்டட வேலைகள் மாநகர சபையின் கட்டிடப்பிரிவினரிடம் கையளிக்கப்படாது அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழுவின் நேரடி மேற்பார்வையிலேயே அரச கட்டிடத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு 120கோடி ரூபா வரையில் செலவிடப்பட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. புனரமைப்புப் பணிகளின்போது யாழ்ப்பாண மாநகர சபையினர் வெறும் ஆலோசனை வழங்கும் மட்டத்திலேயே ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தனர். கட்டடம் முற்றாகக் கட்டி முடிக்கப்பட்டதும் யாழ்ப்பாண மாநகர சபையிடம் நூலகம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.

இப்போது யாழ்ப்பாணப் பொது நூலகமும் லண்டன் பிக்பென் மணிக்கூண்டுக் கோபுரம் போல, பாரிஸ் ஐஃபெல் கோபுரம் போல, கனடாவின் சீஎன் கோபுரம் போல, யாழ்ப்பாணத்தின் நினைவுச் சின்னமாகவே எங்களுக்குப் பழக்கமாகிவிட்டது.

அரசாங்கத்தினால் அழிவின் அடையாளமே தெரியாதபடி பூசிமெழுகி மறுசீரமைத்துத் தரப்பட்ட அந்தப் புதிய கட்டிடத்தின் முன் நின்று குடும்பம் குடும்பாக பூரிப்புடனும் பெருமிதத்துடனும் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் புலம்பெயர்ந்தோர் கூட்டமும், அவர்களுக்குத் தீனிவழங்கும் வகையில் தபால் அட்டைகளாக (Picture Postcard) உயர்தரத்தில் நூலகக்கட்டிடத்தின் புகைப்படத்தை அச்சிட்டு விற்று வியாபாரம் செய்யும் வர்த்தகர் கூட்டமும், யாழ் நூலகத்தை காட்சிப்பொருளாக்கியே விட்டார்கள். இலங்கை இந்திய நூல்வெளியீட்டாளர்களும் தத்தமது படைப்புக்களில் சம்பந்தா சம்பந்தமேயில்லாமல் யாழ் நூலகத்தை அட்டைப் படங்களாக்கித் தள்ளுகிறார்கள். இணையத்தளங்களும் தாமும் எதற்கும் சளைத்தவர்களல்ல என்றரீதியில் தமது இணையத்தள வரவேற்புப் பக்கங்களில் பனைமரத்திற்கு அடுத்தபடியாக யாழ்;ப்பாண நூலகத்தை பதிந்து தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். அண்மையில் எனக்குக் கிடைத்ததொரு கடிதத் தலைப்பிலும் யாழ்ப்பாண நூலகம்! இப்பொழுது யாழ்ப்பாண நூலகத்தின் எரிவின் வரலாற்றை பதிவாக்கி வைப்பதாகக் கூறி எரியும் நினைவுகள் என்ற பெயரில் ஒரு முழுநீளத் திரைப்படமும் ஆவணப்படம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிட்டியுள்ளது.

அது சரி, எம்மவரின் மனதில் ஆழமாக இடம்பிடித்துக் கொண்ட இந்த அறிவின் ஊற்று இன்று மாநகரசபை நிர்வாகத்திள்குள் முடங்கி அடிப்படை மின்சார தொலைபேசிப் பாவனைக்கான செலவினத்தைக்கூட ஈடுசெய்வதற்குத் திண்டாடுவதும், போதிய அளவில் பயிற்சி பெற்ற நூலக நிர்வாகிகள் இன்றித் தன் நாளாந்த சேவைகளையும் விரிவாக்க சேவைகளையும் முன்னெடுத்துச் செல்லவியலாத நிலையில் அல்லாடுவதும் எத்தனைபேரின் உள்ளங்களில் உறைத்திருக்கின்றன என்பது நாம் எம்மைக் கேட்டுக்கொள்ளவேண்டிய முக்கிய கேள்விகளுள் ஒன்றாகும்.

புலம்பெயர்ந்த தேசங்களில் செழித்தோங்கும் ஆலய நிர்வாகங்களிடம் யாழ்ப்பாணப் பொதுநூலகத்தின் அபிவிருத்திக்காக முன்னாள் யாழ்ப்பாண மாநகர ஆணையாளர் வே.இராமலிங்கம் அவர்களின் வேண்டுகோளின்பேரில் 2003இல் நிதியுதவிக்காக நெருங்கினோம். பயனில்லை. யாழ்ப்பாணப் பாடசாலைகளின் பழையமணவர் சங்கங்களை அணுகினோம். யாழ்ப்பாணப் பொது நூலகத்தைச் சுற்றியிருந்து அதன் பயனை அன்று அனுபவித்துவிட்டு வந்தவர்கள் அவர்கள். இன்றும் அதை அனுபவித்துவரும் அதே பாடசாலைகளின் மாணவர்களின் நன்மைக்காகவேனும் யாழ்ப்பாண பொது நூலகத்துக்குத் தமது நிதிச்சேகரிப்பின் ஒரு சிறு பங்கையாவது வழங்கும்படி கேட்டோம். பலன் தான் இல்லை. சரி அமைப்புக்கள் தான் கைவிட்டு விட்டார்கள் என்று தனிப்பட்டவர்களின் ஆதரவை எதிர்பார்த்தோம். பெரும்பாலானவர்கள் தமது நிலவறைகளில் தூசுபிடித்துப் போயுள்ள பழைய நூல்களை ஆர்வத்துடன் அங்கு அனுப்பிவைத்துத் தத்தமது வீடுகளை சுத்திகரிப்புச் செய்வதற்குத் தான் விரும்பினார்களேயொழிய அந்த நூலகத்துடன் தொடர்புகொண்டு அவர்களது நியாயமான தேவையறிந்து அதற்கேற்ப காத்திரமான நிதிப்பங்களிப்பினை நல்க எவருமே தயாராகவில்லை. எல்லோருக்கும் வேறு வேறு நோக்கங்கள். பாவம் பொது நூலகம். மீண்டும் தனிமரமாகிவிட்டது.

இங்கு ஈழத் தமிழர்களால் யாழ்ப்பாணப் பொது நூலகம் கைவிடப்பட்டாலும் உலகளாவிய கல்விச சமூகத்தால் அது முற்றாகக் கைவிடப்படவில்லை. சமாதான காலத்தில் தேசம் சஞ்சிகை East London University நிர்வாகத்தினரை அணுகி அவர்களின் நிதியுதவியுடன் யாழ்ப்பாண நூலகத்தின் நூல் பகுப்பாக்கப் பணிக்கு அத்தியாவசியமான 3 பாகங்கள் கொண்ட டூவி தசாம்சப்பகுப்பாக்க நூல்தொகுதியில் (Dewey Decimal Classification) இரண்டு தொகுதிகளையும் AACR 2 என்றழைக்கப்படும் நூலகப் பட்டியலாக்க விதிமுறைத் தொகுப்பில் இரண்டு தொகுதிகளையும் தேசம் சஞ்சிகையின் ஆதரவுடன் கிழக்கிலங்கை பல்கலைக் கழகத்திடம் வாங்கி அனுப்பி வைத்தோம். அதன் பெறுமதி 1000 பவுண்களுக்கு மேல்.

ஸ்கொட்லாந்திலுள்ள Books Abroad என்ற நூல் விநியோக நிறுவனத்தின் அனுசரணையுடன் ஒரு பாரிய கொள்கலன் நிரம்பிய ஆங்கில மருத்துவம் மற்றும் பல்துறை நூல்களையும், சிறுவர் அறிவியல் நூல்களையும் யாழ்ப்பாண நூலக வாசல்வரை கொண்டபோய் கொடுக்க முடிந்தது. அவர்கள் அதை என்ன செய்தார்கள் என்று இன்றுவரை Books Abroad நிறுவனத்திற்கு முறையான தகவல் இல்லை. உலகளாவிய கல்வி நிறுவனங்கள் யாழ்ப்பாணப் பொது நூலகத்துக்கு உதவ இப்போதும் தயாராக இருக்கிறார்கள். இங்கு பிரச்சினை என்னவென்றால் - யாழ்ப்பாணத்திலிருந்து - இந்த நூலகத்திலிருந்து அல்லது மாநகரசபையிடமிருந்து வேண்டுகோள்கள் வரவேண்டும். அதற்கான திட்டங்கள் அங்கிருந்தே தீட்டப்பட வேண்டும். அதை முறையாகச் செய்ய இந்தப் போர்ச் சூழலில் எவரும் முழுமனதோடு முன்வருவதில்லை.

இப்போது கூட ஒன்றும் குடிமுழுகிவிடவில்லை. வெளிநாடுகளிலிருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் செல்பவர்கள் ஒரு சிறுபொழுதை ஒதுக்கி அந்த நூலக நிர்வாகிகளைச் சந்தித்து அவர்களின் சிறு தேவைகளைப் பூர்த்திசெய்யும் பொறுப்பையாவது ஏற்கலாம். புத்தகம் மட்டும்தான் அவர்களின் தேவை அல்ல. இதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். பாரிய நூலகக் கட்டிடத்தை முழுமையாக அரசாங்கம் புனரமைத்துக் கொடுத்துள்ளது. அதன் அன்றாட நிர்வாகச் செலவுகளைச் சமாளிக்கும் பொறுப்பும் மாநகரசபைக்குரியது. பொதுவாகவே பொதுநூலகம் வருமானம் ஈட்டாத துறையென்று அதை ஒரு வெள்ளை யானையாகக் கருதி, கட்டிமேய்க்கும் சுபாவம் நிர்வாகத்தவருடையது.

இன்றைய நிலையில், நூலகத்தின் அடிப்படை நிர்வாகச்செலவு ஈடுசெய்யப்பட வேண்டும். நடமாடும் நூலகசேவைக்கென யுனெஸ்கோ நிறுவனத்தால் வழங்கப்பட்ட பாரிய பஸ்வண்டியொன்று நூலக வாசலே கதியென்று கிடந்தது. அதனை இயங்கவைத்து கிராமங்களை நூல்கள் சென்றடையும் நடமாடும் நூலகசேவைக்கு உயிரூட்டலாம். நூலக ஊழியர்கள் மேலதிக நூலகப் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டிய உதவிகளை வழங்கலாம். யாழ்ப்பாண மாணவர்களுக்கு வேண்டிய நூல்களைப் பெற்றுக்கொள்வதற்கான நிதி வசதியை ஸ்பொன்சர் அடிப்படையில் யாழ். நூலகத்திற்கு வழங்கலாம். யாழ்ப்பாணப் பொது நூலகத்திற்கான பட்டியலை இணையத்தளத்தினூடாகக் கொண்டுவர அவர்களுக்கு உதவலாம். அவர்களிடம் தொழில்நுட்ப வசதி உள்ளது. அவர்களுக்குத் தேவை நிதியுதவியேயாகும்.

வாசலில் நின்று ஞாபகப் புகைப்படங்களை எடுப்பதை புலம்பெயர்ந்து வாழும் நாங்கள் முதலில் நிறுத்தி, யாழ்ப்பாண நூலகத்தை வியாபார நோக்கில் பார்த்து முதலைக் கண்ணீர் வடிக்கும் போக்கை மாற்றி உணர்வுள்ள ஒருசிலர் முதலில் யாழ்ப்பாண நூலகத்துடன் நேரடித் தொடர்பினை ஏற்படுத்தி ஆதரவின்றித் துவண்டு கிடக்கும் அந்த ஊழியர்களுக்கு நம்பிக்கையை ஊட்ட முன்வரவேண்டும். தனிப்பட்டவகையிலோ, தான் சார்ந்த அமைப்பின் உதவியுடனோ எப்படி உதவலாம் என்ற வழிவகைகளை ஆராயவேண்டும். மிகவும் சிக்கலற்றதும் இடைத்தரகர் அற்றதுமான நேரடி நடைமுறை இதுவாகும்.

தற்போது நூலகப் பிரதேசம் அதிஉயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டுள்ளதாக அறிகின்றோம். நூலக ஊழியர்களே அங்கு நாளாந்தம் தீவிர பரிசோதனைக் குட்படுத்தப்பட்டுத்தான் சென்று வருகின்றார்கள். அன்றாட வாசகர்களின் எண்ணிக்கையையும் நிர்வாகம் மட்டுப்படுத்தியுள்ளது. இன்றைய நிலையில் சூழ்நிலையின் கைதியாக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணப் பொதுநூலகம் எதிர்காலத்தில் தன் விரிவான சேவைகளைத் திட்டமிட்டு அதனை புலம்பெயர்ந்த தமிழர்முன் வைக்கவேண்டும்.

அங்கிருந்து வேண்டுகோள்கள் பரவலாகவும் விரிவாகவும் ஆணித்தரமாகவும் வந்தாலே உலகத் தமிழர்களுக்கும் தமிழரல்லாத நலன்விரும்பிகளுக்கும் யாழ்ப்பாணப் பொது நூலகத்தின் உண்மை நிலை புரியும். அங்கு என்ன நடக்கின்றது என்று அடிக்கடி ஊடகங்களின் வாயிலாகத் தெரியப்படுத்தப்படவேண்டும். அதை விடுத்து கட்டிடக் கனவுகளுடனேயே எமது எஞ்சிய சிந்தனைகளை உறைநிலையில் வைத்திருப்பதென்று நாங்கள் முடிவுசெய்தால்ää யாழ்ப்பாண நூலக வளர்ச்சியின் எதிர்காலம் கேள்விக்குரியதாகவே இருக்கும்.

யாழ்ப்பாண நூலகம் காய்த்துக் கனிந்திருந்த வேளையில் வாசகர்களாகவிருந்து அதன் பழங்களை ருசித்தபின் இங்கே புலம்பெயர்ந்து வந்து வாழ்பவர்கள் தம் மனச்சாட்சியைத் தட்டிக்கேட்கும் நாள் இன்று மீண்டும் வந்திருக்கிறது. யாழ்ப்பாணப் பொது நூலகத்தைச் சூழவிருக்கும் கல்விக்கூடங்களின் மாணவர்களாகவிருந்து, பொதுநூலக அங்கத்தவர்களாயிருந்து அதன் வசதியான நிழலிலே நூலக சேவைகளை அனுபவித்த பின், இன்று இங்கே பழையமாணவர் சங்கங்களைத் தோற்றுவித்து தத்தம் கல்லூரிகளின் வளர்ச்சிக்காக இங்கிருந்து கொண்டே உழைக்கும் பழைய மாணவ மணிகளுக்கும் இந்த வேண்டுகோள்; பொருந்தும் என்று கருதுகின்றேன். நீங்கள் விட்டு நீங்கி வந்த அந்தப் பாடசாலைகளின் தற்போதைய மாணவர்கள் யாழ்ப்பாண நூலகத்தைப் பயன்படுத்த இன்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் பெற்ற அந்த வாய்ப்பை அல்லது நீங்கள் பெறத்தவறிய அந்த வாய்ப்பை தாயகத்தில் உங்கள் உறவுகளுக்கு அளிக்க முன்வாருங்கள். யாழ்ப்பாண நூலகத்தின் கட்டுக்கடங்காமல் செல்லும் நிர்வாகச் செலவுக்கு முகம்கொடுக்க முடியாது திணரும் நிர்வாகத்துக்கு உங்கள் தனிப்பட்ட நிதி உதவியை வழங்க முன்வாருங்கள். நீங்கள் சார்ந்துள்ள பழையமாணவர் சங்கத்தின் நிதி உதவியைப் பெற்றுத்தந்து, யாழ்ப்பாண நூலகம் அந்நியரிடம் கையேந்தும் நிலையை மறுத்து அதன் வளமான இயங்குதலுக்கு எவ்வித இடைத்தரகருமின்றி நேரில் உதவிவழங்க முன்வாருங்கள். ஈழத்தமிழரின் பலம் அவர்களது கல்வியில் தங்கியிருந்ததென்பதை நாம் மீண்டும் நிலைநிறுத்த வேண்டுமானால் அந்தக் கல்வி வளத்தை யாழ்ப்பாணப் பொது நூலகத்தின் மூலமாக பெருக்கித்தருவோம். கைநழுவிப்போக விடமாட்டோம் என்று இன்றைய நாளில் உறுதிபூணுவோம்.

தேசம் இணையம்

No comments: