
நாட்டின் பல்வேறு இடங்களுக்குள் ஊடுருவி பொதுமக்களை இலக்கு வைத்து தாக்குதல்களை மேற்கொண்டு வரும் விடுதலைப் புலி உறுப்பினர்களை அவர்கள் மறைந்துள்ள முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலிருந்து விரட்டியடித்து பிரபாகரனை உயிருடன் கைது செய்வதே பிரபாகரனை வன்னி படையெடுப்பின் முக்கிய நோக்கமாகவுள்ளது.
விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை கைது செய்வதுடன் வடக்கில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களை, அவர்களிடமிருந்து மீட்பதும் எமது நோக்கமாகும் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் தொடர்ந்தும் கூறியதாவது:
பிரபாகரன் மறைந்திருக்கும் முல்லைத்தீவிலுள்ள விடுதலைப்புலிகளின் முகாமை படையினர் சுற்றிவளைத்துள்ளனர். இராணுவத்தின் நான்கு பிரதான படையணிகள் இதில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அவ்விடத்தை விட்டு தப்பிச் செல்ல முடியாமல் பிரபாகரன் அடைப்பட்டுள்ளார்.
இராணுவத்தின் 56, 57, 58 மற்றும் 59 ஆம் படையணியினர் முல்லைத்தீவு மாவட்டத்தை கைப்பற்றும் நோக்கில் படையெடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் படையெடுப்புக்களை மேலும் தீவிரப்படுத்துவதற்காக விசேட அதிரடிப்படையின் இரண்டாம் இலக்க படையணியினரும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.
இவ்வாறானதொரு படையெடுப்பின் மூலமாகவே விடுதலைப்புலிகளுக்குச் சொந்தமான 14 பேஸ் முகாம் படையினரால் கைப்பற்றப்பட்டது. இந்திய இராணுவத்தினர் இலங்கைக்கு வருகை தந்தபோது பிரபாகரன் இம்முகாமிலேயே மறைந்திருந்துள்ளார். இந்திய இராணுவத்தினர் நாட்டை வெளியேறிய போதிலும் இலங்கை பாதுகாப்பு படையினருக்கு பயந்து நிலத்தின் கீழ் மறைந்திருந்தாலும் படையினர் அவரை அடையாளம் கண்டுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள வடக்கின் சுமார் 800 கிலோ மீற்றர் பரப்பளவு நிலம் தற்போது படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இன்னும் 21 கிலோ மீற்றரே படையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படவுள்ளது.
பாதுகாப்பு படையினருக்கு நேரடியாக முகம்கொடுத்து யுத்தத்திற்கு வரமுடியாது மறைந்திருக்கும் பிரபாகரன் தெற்கில் வாழும் அப்பாவி பொதுமக்களை மறைந்திருந்து தாக்குதல் நடத்தி வருகின்றார்.
இவரது இந்நிலையை உலகிற்கு எடுத்துக்காட்ட வேண்டும். வன்னிப் படையெடுப்பில் ஈடுபட்டுள்ள படையினர் சிறந்த மன தைரியத்துடனும் விட்டுக்கொடுப்புடனும் தமது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை நாம் பெற்றுள்ள வெற்றிகளுக்கான முக்கிய காரணமாகும்.
No comments:
Post a Comment