Sunday, July 6, 2008

என்றெ கண்முன்னே கதறக் கதற......



இப்போது நினைத்தாலும் நித்திரை கொள்ள கண்கள் மறுக்கிறதய்யா... எங்கடப் பெண்டுப் பிள்ளைகளை சிங்களக் காடையர்கள் இழுத்துச் சென்று கற்பழிக்கிறார்கள். ஆம்பளைப் பசங்களின் ஆண்குறியை ஆர்மிக்காரன் லத்தியால் நசுக்குகிறான். கண் முன்னே நடந்தும் முகம் திருப்பிக் கொண்டு விட்டேன். என்னால் ஏதும் செய்ய இயலவில்லை. நான் கையாலாகாத தமிழனாக இருந்து விட்டேன் ஐயா...'' பல வருட காலமாக கேட்ட ஈழத்தமிழரின் குரல் இல்லை இது.சிங்களப் படையில் வேலைபார்த்த தமிழர் சண்முகநாதனின் குரல்.

கைகளால் முகத்தை இறுக அப்பிக் கொண்டு பெருமூச்சோடு பேச ஆரம்பிக்கிறார் இந்த முன்னாள் சிங்கள போலீஸ் அதிகாரி.

``இலங்கையில் திரிகோணமலைதான் என்னோட சொந்த ஊரு. ஒரு சிங்களப் போலீஸ்காரனா பதினேழு வருஷம் நான் வேலை பார்த்திருக்கேன்.இலங்கை அரசாங்கத்தோட தந்தி ரங்கள் அத்தனையையும் அத்துப்படியாகச் சொல்ல முடியும். சிங்களர்கள் மட்டுமே இலங்கையில வாழணும். மத்தவங்களை முடிஞ்ச வரை சாகடிக்கணும். அரசாங்கத்தோட நோக்கமே இதுதான்.

இன்னைக்கும் அந்தக் கொடுமை தொடருது. தேதி சரியா ஞாபக மில்லே. ஆனா, இப்போ நினைச்சாலும் அந்த சம்பவம் என் மனசை உறுத்திகிட்டே இருக்கு.

ஒரு அழகான தமிழ்க் குடும் பம் அது. ஏதோ கோயிலுக்குப் போறதுக்காக வந்துட்டிருந்தாங்க. வழியிலேயே சிங்கள போலீசு மடக்கிடுச்சு. அப்பா, அம்மாவோடு நின்று கொண்டிருந்த அந்த அப்பாவி இளம்பெண்ணைச் சூழ்ந்து கொண்டு `குட்டி நல்லா இருக்கு தில்லே'னு வக்கிர மாய் சிரித்துக் கொண்டே நெருங்கினார்கள். சோதனை என்கிற பெயரில் அந்த இளம் பெண்ணின் மார்பகங்களை அழுத்திப் பிடித்துக் கொண்டு `என்னடி குண்டு ஏதாவது வைச்சிருக்கியா'னு ஒருத்தன் சிரிக்கிறான். `குண்டு வைச்ச பெல்ட் போட் டிருக்கியா'னு இன்னொரு காடையன் அந்தப் பெண் பிள்ளையின் பாவாடையை அவிழ்க் கிறான். துப்பாக்கி முனை யில் இப்படி எவ்வளவோ சம்பவங்கள் நடக்கின்றன. ஒரு தமிழனா இருந்துகிட்டு அந்தக் கொடுமையை நேர்ல பார்த்தும் ஒண்ணும் செய்ய முடியாத வேதனை இருக்கே... அப்படியே துப்பாக்கிய என் நெஞ்சுல வைச்சு சுட்டுக்கலாம் போல இருந்துச்சு.

1977-ல் ஒரு பெரிய கலவரம் மூண்டது. அப்போ கொழும்புவில் இருக்குற பொருளை ஸ்டேஷன்ல நானும் ஒரு போலீஸ். கண்ணுக்குச் சிக்கின பொண்ணுங்களையெல்லாம் ஒரு கும்பல் துரத்திகிட்டு ஓடுது. ஆனா, எங்களால எதுவுமே செய்ய முடியலை. ஒரு அறைக்குள்ளே எங்களை அடைச்சு வைச்சு பூட்டிட்டாங்க. அப்போ சன்னல் வழியா `நீயெல்லாம் ஒரு தமிழனாடா'ன்னு ஒரு குரல் கேட்டுச்சு. இன்றைய வரைக்கும் அந்தக் குரல் என்னோட காதுல எதிரொலிச்சிகிட்டே இருக்கு.'' சண்முகநாதனின் முகத்தில் கனமான இறுக்கம்.

``வெகு நேரம் கழிச்சு ஒரு பெண்ணையும், பையனையும் எங்காளுங்க கூட்டி வந்தாங்க. அந்தப் பொண்ணு அழுதுகிட்டே இருந்துச்சு. மொதல்ல காரணம் புரியாம இருந்தேன். எதேச்சையா பார்த்தப்பதான் ஒரு கணம் என் இதயமே நின்னு துடிக்க ஆரம்பிச்சது. அந்த இளம்பெண்ணின் பாவாடை முழுக்க ரத்தம். உள்ளுக்குள் இருந்து ரத்தம் ஒழுகுவது நிற்கவேயில்லை. கைது செய்யப் போன அந்த மூன்று சிங்கள போலீஸ்காரர்களும் ஜீப்பில் வைத்து அடுத்தடுத்து அந்த இளம் பெண்ணை நாசப்படுத்தியிருக்கிறார்கள். தூக்கம் தொலைந்து போன இரவு அது.''

புலிகள் மீது பகையென்றால் அவர்களிடம் மட்டும் மோத வேண்டியதுதானே...?

``இலங்கை அரசாங்கம் ஒருபோதும் அப்படி செய்யத் துணியாது. எந்த கோர்ட்டும் அனுமதி தராமல், உயரதிகாரிகள் உத்தரவும் இல்லாமல் தமிழர்களின் வீடுகளில் போலீஸ் நுழையலாம். அங்கே அப்பாவியாகத் தூங் கிக் கொண்டிருப்பவனை விடுதலைப்புலி ஆதரவாளன் என்று கைது செய்யலாம். இதையெல்லாம் நேரடியாகப் பார்த்தவன் நான். அத்தோடு விடமாட்டார்கள். இலங்கையில் பூசா என்றொரு இடம் உண்டு. தமிழர்களைச் சித்ரவதை செய்வதற்கே உருவாக்கப்பட்ட கூடம்னு சொல்லலாம். துணிகளை உருவி விதவிதமா சித்ரவதை செஞ்சு, கடைசியில ஒரு குப்பை வண்டியில நிர்வாணக் குவியலா பிணங்கள் குவிஞ்சு கிடக்கும். இது பற்றி எதுவுமே தெரியாத உலக நாடுகள் இலங்கை அரசை உச்சி மோந்து கை கோர்த்துகிட்டு நிற்கறதைப் பார்க்கும் போது வருத்தம்தான் ஏற்படுது.''

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சார்பில் மக்களுக்கு தற்காப்புப் பயிற்சி கொடுக் கப்படுகிறதாமே?

``வேறு என்ன செய்ய முடியும்? கற்பை காப்பாற்றிக் கொள் வதற்காகவாவது ஒரு பெண் போராட வேண் டாமா?''

பாலசிங்கம், தமிழ்ச் செல்வன் என அடுத்தடுத்து துயரமான இழப்புகள். உண்மையில் புலிகள் இயக்கம் பலவீனமடைந்துவிட்டதா..?

``ஈடு செய்ய முடியாத இழப்பு என்று சொல்லலாம். இதனால் பிரபாகரனுக்கு எந்தத் தளர்ச்சியும் ஏற்படலை. அவரே இறந்து விட்டதாகக் கூட சில சமயங்கள்ல செய்தி பரப்புறாங்க. புத்த பிக்குகள், ஜனதா விமுக்தி பெரமுனா கட்சிகளோட சதி வேலைதான் இது. பிரபாகரன் ஆரோக்யத்தோடதான் இருக்கார். எதையும் கால நேரச் சூழல் பார்த்து செய்வதுதான் அவரின் வழக்கம்.''

பயங்கரவாத அமைப்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்தை உலக நாடுகள் அறிவிப்புச் செய்திருக்கின்றனவே?

``இலங்கையில் என்ன நடக்கிறதென உலக நாடுகளுக்கு இதுவரை தெரிந்ததே இல்லை. கருணா போன்ற சில தமிழ்த் துரோகிகளும் இதற்குக் காரணம். வெளிநாடுகளில் புலிகளின் இயக்கத்தை மோசமாகச் சித்திரித்து துண்டுப் பிரசுரம் விநியோகிப்பதுதான் அவர்களின் வேலை.''

சினிமாவின் மூலம் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு சொல்லிவிட முடியுமா?

``தீர்வு சொல்ல முடியாவிட்டாலும் உலக நாடுகளின் கவனத்திற்காகவாவது கொண்டு செல்லலாம்.''

இரு தரப்பினருக்கும் நடுவே நார்வே சமரசம் செய்கிறது. இது சமாதானத்தில் முடியுமா...?

``வாய்ப்பே இல்லை. எத்தனையோ சமாதானக் கூட் டங்களைப் பார்த்தாயிற்று. எதுவும் நடக்காததுதான் மிச்சம். போர் நிறுத்த ஒப்பந்தத்தில் புலிகள் மிகவும் நாணயமாக இருப்பார்கள். அமைதி காப்பார்கள். சிங்கள அரசாங்கம் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு எந்நேரமும் காத்திருக்கிறது. ரத்தம் சுவைப் பதுதான் அவர்களின் நோக்கம்''.

- மா. மணிவண்ணன்
படங்கள் : சித்ரம் மத்தியாஸ்

2 comments:

Anonymous said...

The owner of this blog has a strong personality because it reflects to the blog that he/she made.

Anonymous said...

Interesting topics could give you more visitors to your site. So Keep up the good work.