Thursday, July 31, 2008

கண்களை விற்று சித்திரம் வாங்க முடியாது

இன்று ஈழத் தமிழர் சமூகம் மிகப் பாரிய மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்நோக்கி நிற்கிறது. தொடர்ச்சியானதும், வேகமானதுமான யுத்த சூழ்நிலையில் லட்சக்கணக்கான மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களில் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நாட்டின் 30 வருட அவலத்தில் பல தடவைகள் இடம்பெயர்ந்த குடும்பங்களும் இருக்கின்றன. இந்தியாவிலும் இலங்கையிலும் 1983ம் ஆண்டிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள்கூட அகதி முகாம்களில் வாழ்கின்றனர். 1990 இல் புலிகளால் யாழ்ப்பாணத்திலிருந்தும், ஏனை வட பகுதியிலிருந்தும் வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்கள் பெருவாரியாக புத்தளத்திலும், அனுராதபுரத்திலும் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கடந்த மூன்று தசாப்தங்களில் 12 லட்சத்துக்கு மேற்பட்ட எமது மக்கள் வடக்கு கிழக்குப் பிரதேசங்களை விட்டுச் சென்றிருக்கிறார்கள். இந்த 30 வருட யுத்தத்தில் 75,000 மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள் என்று வழமையாக கூறப்படுகிறது. ஆனால் இரண்டரை லட்சம் பேர்வரை உயிரிழந்திருக்கலாம் என்ற ஒரு புதிய தகவல் தெரிவிக்கிறது. 1980 களின் இறுதிவாக்கில் 40 இலிருந்து 60 அயிரம் வரையிலான சிங்கள மக்கள் கொல்லப்பட்டார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 30 வருடங்களில் வடக்கு கிழக்கு தமிழர்களின் 90 வீதத்துக்கு மேற்பட்டவர்கள் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் அகதிகளாகி இருக்கிறார்கள்.

தற்போது நிகழும் யுத்தத்தால் சண்டை நடக்கும், மன்னார், முல்லைத்தீவு, வவுனியா வடக்கு பிரதேசங்களில் இருந்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாகி இருக்கிறார்கள். இவர்களில் பலர் பலதடவைகள் இடம் பெயர்ந்திருக்கிறார்கள்.

பிள்ளைகளை யுத்தத்திற்கு பலாத்காரமாக பலி கொடுத்தல், எறிகணை வீச்சு, விமானக் குண்டு வீச்சு, கிளேமோர் கண்ணி வெடிகளில் பலி கொடுத்தல் என எமது மக்கள் இழப்புக்களையே சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். பல பிரதேசங்களில் பிள்ளைகள் பாடசாலை சென்று பல மாதங்களாகின்றன. இதுவொன்றும் சாதாரணமாக ஒரு வரியில் கூறிவிடுகின்ற விடயமல்ல.

மறுபுறம் ஒரு மாதத்தில் இரண்டோ, மூன்று தடவை சாதாரண மக்கள் பஸ், ரயில் குண்டு வெடிப்புக்களில் பலி கொள்ளப்படும் அவலம் தென்னிலங்கையில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

1977, 80, 83 இல் தென்னிலங்கையில் கொல்லப்பட்டவர்களுக்கோ, அவர்களுக்கு நேர்ந்தஏனைய பொருளாதாரம் சார்ந்த இதர இழப்புக்களுக்கோ எதுவித தீர்வும் காணப்படவில்லை. அதைப் பற்றி யாரும் அலட்டிக் கொள்ளவும் இல்லை.

புலிகள் ஒரு பாசிச இயக்கம் என்பதும் அவர்கள் தமிழ் சமூகத்திற்கு கிடைத்த வாய்ப்புக்களையெலலாம் துஷ்பிரயோகம் செய்தார்கள், நாசம் செய்தார்கள் தமிழ் சமூகத்தை தெருவுக்கு கந்தலாண்டிகளாக கொண்டுவந்தார்கள் என்பதில் மறுபேச்சுக்கே இடமில்லை.

அதேவேளை தமிழ் மக்களின் வாழ்வையும், வாழ்வாதாரங்களையும் அழித்தொழிக்கும் விதமாக பேரினவாதம் கடந்த 60 ஆண்டுகளாக திட்டமிட்டு செயற்பட்டு வந்திருக்கிறது என்பதும் இங்கு குறித்துரைக்கப்பட வேண்டியது.

எல்லாவற்றையும் விட இன்று அகதிகளாகியுள்ள மக்களின் வாழ்வு முக்கியம். உணவு, இருப்பிடம், சுகாதாரம், பிள்ளைகளின் கல்வி தொடர்பாக அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண்பதற்கான வழிவகைகள் கண்டறியப்பட வேண்டும். யுத்தம் இல்லாத பாதுகாப்பான பிரதேசங்களுக்கு அவர்கள் சென்றடைவதற்கு அல்லது ஜீவாதாரத் தேவைகள் அவர்களை சென்றடைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது யாழ்ப்பாணத்திலும் மட்டு, திருமலை, அம்பாறையிலும், மன்னார் வவுனியாவிலும் ஏதொவொரு விதத்தில் வன்முறை அலலது இராணுவமயப்பட்ட சூழலில் வாழ்வதற்கு மக்கள் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள்.

தெற்கிலும் கைதுகள், கடத்தல், காணாமல் போதல், சந்தேகப் பேர்வழிகளாக பார்க்கப்படுதல் என்ற நிலையிலேயே தமிழர்கள் வாழ்கிறார்கள். இத்தகைய சூழலுக்கு பேரினவாத சக்திகள் மாத்திரமல்ல தமிழ் புலிகளின் பாசிசமும் பங்களித்திருக்கிறது.

ஜனநாயக அரசியல் சிந்தனையுடன் வௌ;வேறு கருத்து நிலைகளுடன் தமிழர்கள் வடக்கு கிழக்கிலோ அல்லது தெற்கிலோ வாழ முடியாத நிலைமையை புலிகள் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

சுதந்திரமான சிந்தனையுள்ளவர்கள் சுதந்திரமாக வாழமுடியாதென்ற அவல நிலை இலங்கையில் கடந்த 20க்கு மேற்பட்ட ஆண்டுகளாக நிலவுகிறது.

எனவே ஆக்கபூர்வமானவை எவையும் எமது சமூகத்தில் நிகழ்வதற்கான வாய்ப்புக்கள் மிக மிக அரிதாகவே காணப்படுகின்றன.

தமிழ் பாசிசம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதில் எமக்கு இரு வேறு கருத்தில்லை.

ஆனால் தமிழ் மக்களின் வாழ்வு இருப்பு இந்த நாட்டில் கேள்விக்குறியாக்கப்படுவதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எல்லாவற்றையும் விட மக்களின் வாழ்வு முக்கியமானது. அவர்களின் ஜீவாதாரத் தேவைகள் முக்கியமானவை. அவர்களின் சுதந்திரம் முக்கியமானவை.

அவர்கள் தமிழர்களாகவும், முஸ்லீம்களாகவும் பிறந்து விட்டார்கள் என்பதற்காக அவர்கள் தற்போதைய வன்முறை அவலச் சூழ்நிலையில் எல்லாச் சுமைகளையும் சுமக்க முடியாது. இலங்கையின் சகல சமூகங்களும் பல்வேறுவிதமான நெருக்கடிகளை எதிர்நோக்கினும் குறிப்பாக தமிழ், முஸ்லீம் சமூகங்கள் அனுபவிக்கும் துன்பங்கள், வேதனைகள் குறிப்பிடத்தகுந்தவையும், பாரியளவிலானவையுமாகும். குணாம்ச ரீதியாக வேறுபட்டவையுமாகும்.

“தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” என்றார் சுதந்திர கவி பாரதி.

இங்கு அவர் குறிப்பிடுவது பாராபட்சமற்ற, அநீதி இழைக்கப்படாத, மனித குலத்தின் வாழ்வு பற்றியது.

எமது கனவெல்லாம் இதுதான். எமது மக்கள் கௌரவமாகவும், சுயமரியாதையாகவும் யாரும் வெறுப்பையும், குரோதத்தையும் உமிழாத வகையிலும், சதா சந்தேக பிராணிகளாக பார்க்கப்படாத வகையிலும் பயபீதியின்றி கூனிக்குறுகலின்றி, வேதனைகளின்றி நிமிர்ந்த, மகிழ்ச்சியான வாழ்வு வாழ வேண்டும் என்பதுவே.

அதற்கு வன்முறையின் மனநோயாளிகள் காழ்ப்புணர்வையும். விரோதத்தையும் விதைப்பவர்கள் தத்தமது மேலாண்மையை சமூகங்கள் மீது திணிக்க முயல்பவர்கள் தோற்கடிக்கப்படுவதும், தனிமைப்படுவதும் அவசியமானதாகும்.

இத்தகையவர்கள் மனம் மாறுவார்களா என்ற நப்பாசையும் எமக்கு இருக்கிறது.

எல்லோரும் இன்புற்றிருக்கவே இவ்வுலகு. மனித குலத்தின் மகத்தான வாழ்வைவிட இங்கு பெரிய விடயமென்று எதுவும் கிடையாது.

அகதிகளாகவும், கைதிகள் போன்றும் எத்தனை காலந்தான் வாழ்வது. அடித்து, துவைத்து நொந்து நூலாகிப் போன எமது சமூக வாழ்வில் வெளிச்சம் வேண்டும். சிறு ஒளியாவது இக்காரிருளில் தோன்ற வேண்டும்.

மனித குலத்தின்மீது அன்பு கொண்டோர் வன்முறையில் நம்பி;க்கையற்றோர் வாழ்வின் மீது பிடிப்புக் கொண்டோர் எம் சமூகத்தில் மாத்திரமல்ல இலங்கையின் சகல சமூகங்களிலும் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து இலங்கையில் வாழ்வின் மீதான நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு முன் வர வேண்டும்.

அகதி தமிழன்

No comments: