Wednesday, August 6, 2008

தமிழ் கூட்டமைப்பினரை தமிழீழ எம்.பி.க்களாக கருதி சார்க் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை

அரசுக்கு நன்றி தெரிவிக்கிறார் சிவாஜிலிங்கம்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களை தமிழீழ எம்.பி.க்களாகக் கருதி சார்க் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்காததையிட்டு அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க் கிழமை நடைபெற்ற இந்திய, இலங்கை அரசுக்கிடையிலான சீபா உடன்படிக்கை தொடர்பான ஒத்திவைப்பு பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் புறக்கணிக்கப்பட்டதுடன், அவமதிக்கப்பட்டுள்ளனர். இது வெளிநாட்டு அமைச்சின் திட்டமிட்ட செயலாகும்.

சேது சமுத்திரத் திட்டத்தின் மூலம் எந்தவொரு நன்மையும் கிடைக்கப்போவதில்லை. ஆனால் முழு கடல் பரப்பும் நமக்கு சொந்தமானது என கூறப்படுகின்றது. தற்போது அனல் மின்சார நிலையம் அமைக்கப்படவுள்ளதாக கூறி சம்பூர் மக்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்படாதுள்ளனர்.

இந்தியாவின் உதவியுடனே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை சுட்டிக்காட்ட வேண்டும்.

இதேவேளை, அம்பாந்தோட்டை துறைமுகத்தை 1 மில்லியன் அமெரிக்க டொலரில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையை வெளிநாடுகளுக்கு தாரைவார்த்து கொடுத்துக்கொண்டு சட்டமூலம் பிரேரிக்கப்பட்டால் இது என்ன நியாயம்?

காடுகளை அழித்து அரசியல்வாதிகள் பணம் சம்பாதித்து வருகின்றனர். வட, கிழக்கில் சிங்கள குடியேற்றங்களை அமைக்க திட்டமிட்டுள்ளதுடன், நிலங்களும் சூறையாடப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.

No comments: