Sunday, August 3, 2008

ராமேஸ்வரம் அருகே விடுதலைப் புலி கைது

ராமேஸ்வரம்: மண்டபம் அருகே விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் இலங்கை நபர் கைது செய்யப்பட்டார்.

மண்டபம் கடற்பகுதியில், நேற்று மாலை பைபர் கிளாஸ் படகு ஒன்று அனாதரமாக கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்தப் படகை போலீஸார் கைப்பற்றினர். இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த போலீஸார், இன்று மண்டபத்தில் முரளிதரன் (39) என்பவரைக் கைது செய்தனர்.

இவர் மண்டபத்திற்கு வருவதற்கு ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு முன்பே கடலில் குதித்து நீந்தி மண்டபத்தை அடைந்துள்ளார் முரளிதரன். இவர் எதற்காக ரகசியமாக மண்டபம் வந்தார், ஆயுதம் வாங்க வந்தாரா அல்லது அகதியாக வந்தாரா என்பது குறித்து கியூ பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

முரளிதரன் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.

சமீபத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய நிர்வாகியான தம்பி அண்ணா என்கிற டேணியலை கியூ பிரிவு போலீஸார் சென்னையில் கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக முரளிதரன் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: