தமிழகத்திலிருந்து வெளிவரும் ஜனரஞ்சக இதழான ஆனந்த விகடன், தனது கடந்த இதழில் கருத்துக் கணிப்பொன்றை நடாத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்தக் கருத்துக் கணிப்பை அது தமிழ் நாட்டிலுள்ள மக்கள் பிரிவினரில் யாரிடம் கருத்துக்களைத் திரட்டியது என்றோ, இந்தக் கருத்துக் கணிப்பு எந்த மாதிரியில் (எழுத்து மூலமா, வாய்மொழி மூலமா) நடத்தப்பட்டது என்றோ எந்த விபரத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனந்த விகடன் கருத்துக்கணிப்பு வெளியானவுடன், புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசனும், புலி ஆதரவு ஊடகங்களும் இந்தக் கருத்துக் கணிப்பிற்கு நன்றி தெரிவித்திருப்பதுடன், தமிழகத்தில் தங்களை ஆதரிப்போர் அதிகமெனவும் பிரசாரப்படுத்தத் தொடங்கியுள்ளனர். முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்து, அக்கருத்துக் கணிப்பில் தெரிந்துள்ள பல்வேறு விடயங்களை மறைத்து, தமக்கு அல்லது தமது தலைமைக்குச் சாதகமான விடயங்களைப் புலி ஆதரவுச் சக்திகள் தமது பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி வருவது புலிகளின் அரசியல் பிரசார வங்குரோத்துத் தனத்தையே காட்டுகிறது. அத்துடன் ஆனந்த விகடன் போன்ற ஜனரஞ்சகப் பத்திரிகையின் கருத்துக் கணிப்பே தமிழக மக்களின் நிலைப்பாடு என்ற தோற்றப்பாட்டை உருவாக்குவதையும் அரசியல் சமூக விடயங்களில் அறிவுள்ளோர் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ஆனந்த விகடனில் வெளியாகிய கருத்துக் கணிப்புத் தொடர்பான ஒரு முழுமையான அரசியல் பார்வையை வெளிப்படுத்துவது அவசியமானதாகும்.
இக்கருத்துக் கணிப்பில் பிரதானமாக சில விடயங்கள் முக்கியப் படுத்தப்பட்டிருந்தன.
01. ராஜீவ்காந்தி படுகொலையில் பிரபாகரனை என்ன செய்ய வேண்டும்?
02. இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியா என்ன நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்?
03. புலிகள் தொடர்பான தமிழக மக்களின் நிலைப்பாடு.
04. இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு.
05. இந்தியாவில் புலிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை.
06. புலிகளை ஆதரிக்கும் தமிழக அரசியல் தலைமைகளின் நிலைப்பாடு.
07. புலிகளின் அரசியல் படுகொலைகள் தொடர்பான விடயங்கள் இக்கருத்துக் கணிப்பில் முக்கியத்துவம் பெற்றிருந்தன.
இக்கருத்துக் கணிப்பை வைத்துப் புலிகள் நடாத்துகின்ற அரசியல் பிரசாரத்தை முதலில் பார்ப்போம். மேற்கூறப்பட்ட ஏழு விடயங்களில் தமக்குச் சார்பான இரண்டு விடயங்களையே புலிகள் பெரிதுபடுத்துகின்றனர். உண்மையில் ஒரு கருத்துக் கணிப்பின் இறுதிப் பெறுபேற்றை அனைத்துக் கேள்விகளுக்குமான பதில்களிலிருந்தே பெற்றுக் கொள்ள முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும். தமிழ்நாட்டில் புலிகளை 54 சதவீதமானோர் ஆதரிப்பதாகவும் தமிழீழமே தீர்வு என 55 சதவீதமான மக்கள் தெரிவிப்பதாகவும் புலிகள் பிரசாரப் படுத்துகின்றனர். ஏனைய விடயங்களில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை புலிகள் தமது வசதிகருதி மறைத்து விடுகின்றனர். மேற்கூறப்பட்ட இரண்டு விடயங்களிலும் கூட, புலிகளை ஆதரிக்க முடியாது. ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு முன் ஆதரித்தேன்; & சுயாட்சி அதிகாரமே தீர்வு என்பன தொடர்பான விடயங்கள் மறைக்கப்படுகிறது.
தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தமிழீழம் தீர்வு என்பதை 90 சதவீதமான மக்கள் தமிழ் நாட்டில் ஆதரித்த காலம் ஒன்று உண்டு. புலிகளை மட்டுமல்ல, அனைத்து தமிழ் இயக்கப் போராளிகளையும் முழுமனதாக முற்றுமுழுதாக ஆதரித்த காலமும் தமிழ்நாட்டில் இருந்தது. இந்த ஆதரவையும் தமிழ்நாட்டு மக்களின் ஒருமைப்பாட்டையும் சிதைத்து, நம்பிக்கையீனத்தையும் அரசியல் வெறுப்பையும் ஏற்படுத்தியதற்குப் புலித் தலைமையே காரணமாக இருந்தது.
தமிழ் மக்களின் விடுதலையின் பெயரால் புலிகள் நடாத்திய பின்னடைவின் வெளிப்பாடே தமிழ்நாட்டு மக்களிடம் பிரதிபலிப்பதையே ஆனந்த விகடன் இக்கருத்துக் கணிப்பு வெளிப்படுத்துகிறது. மேற்கூறப்பட்ட இரண்டு விடயங்களில் 50 தொடக்கம் 55 சதவீதமானவர்களின் ஆதரவு என்பது 90 சதவீதமான ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த வீழ்ச்சிதான்.
ஏனைய ஐந்து விடயங்களிலும் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டையே தமிழக மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர். அதில் முக்கியமான இரண்டு விடயங்கள் நமது அதிக கவனத்திற்குரியவை. அதில் ஒன்று ராஜீவ் காந்தியின் படுகொலையில் பிரபாகரன் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும் என்பதும், இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியா தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்பதுமாகும்.
ராஜீவ் காந்தி படுகொலை விவகாரத்தில் பிரபாகரன் கைது செய்யப்பட வேண்டுமென 43 சதவீதமானோர் கருத்து தெரிவித்துள்ளதுடன், 40 சதவீதமானோர் மன்னித்து விடலாம் எனவும் தெரிவிக்கின்றனர். பிரபாகரனை மன்னித்து விடலாம் என கருத்துத் தெரிவிக்கும் 40 சதவீதமானோர் பிரபாகரன் கொலைக்குற்றவாளி, தமது முன்னாள் தேசத் தலைவரை படுகொலை செய்த நபர் என்பதை வெளிப்படுத்தி நிற்கின்றனர். தமிழீழத்திற்கு மாற்றாக சுயாட்சித் தீர்வையும், பிற தீர்வுகளையும் 46 சதவீத மக்கள் ஏற்கின்றனர்.
அடுத்து இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டுமென்ற தமிழ்நாட்டு மக்களின் கருத்து 63 சதவீதமாக உள்ளது. தலையிடக்கூடாது என்கிற நிலைப்பாடு கிட்டத்தட்ட 13 சதவீதமாகவே உள்ளது. இந்தியா பிரச்சினையில் தடையிடக் கூடாது என்பதே புலிகளின் நிலைப்பாடு;.
இந்தியா தான் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை விவகாரத்தில் முன்கை எடுத்து செயற்பட்டால்தான் நீடித்ததும் விரைந்ததுமான அரசியல் தீர்வு ஒன்று ஏற்படும். 1987 இல் அமைதிப்படையாக வந்த இந்தியப் படையை எதிர்ப் படையாகக் கொண்டு யுத்தத்தைத் தொடங்கி, இந்தியாவை பகைத்து, அதன் அரசியல் தலைவரான ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்து இந்த விரோதத்தை வெளிப்படுத்திய புலித் தலைமை, தமிழர் விவகாரத்தில் நியாயமான ஒரு அரசியல் தீர்விற்காக இந்தியா தலையிட வேண்டுமென்ற ஆனந்த விகடன் கருத்துக் கணிப்பைப் பற்றி என்ன கூறுகின்றனர்?
ஆனந்த விகடன் கருத்துக் கணிப்பில் உள்ள பிற விடயங்களான இந்தியாவில் புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து அது நீக்கப்பட வேண்டுமென 47 சதவீதமானோரே கருத்துத் தெரிவிக்கின்றனர். இந்த விவகாரத்தில் 53 சதவீதமானோர் தடையை ஏற்கின்றனர். புலிகள் விவகாரத்தில் தமிழக அரசியல் பிரமுகர்களான வைகோ, ராமதாஸ், திருமாவளவன், நெடுமாறன் போன்றோர் கடைப்பிடிக்கும் நிலைப்பாடு தொடர்பாக 49 சதவீதமானோரே அது சரி என்கின்றனர். ஏனைய 51 சதவீதமானோரும் ஆபத்தான கொள்கை என்றும், வேறு இலாப நோக்கத்திற்கானதும் என்கின்றனர்.
அடுத்ததாக, மாற்று அரசியல் தலைமைகளை புலிகள் படுகொலை செய்வதையிட்டு கருத்து தெரிவித்துள்ளோரில், அக்கொலைகள் தவிர்க்க முடியாது எனச் சொல்லியுள்ளோர் 25 சதவீதமானோர் மட்டுமே. ஏற்றுக் கொள்ளவே முடியாது என 44 சதவீதமானோர் தெரிவிக்க 30 சதவீதமானோர் அங்குள்ள சூழ்நிலை தமக்குத் தெரியாது எனத் தெரிவித்துள்ளனர்.
ஒட்டு மொத்தமாக முழுமையாக இக்கருத்துக் கணிப்பை ஊன்றி வாசிப்போர் உண்மை நிலைவரத்தைப் புரிந்து கொள்வர். ஆனந்த விகடன் கருத்துக் கணிப்புத் தொடர்பாக அறிக்கை விட்ட நடேசன், தமிழக மக்களின் மனஉணர்வுகள் தமக்குச் சார்பாக இருப்பதாகத் தெரிவித்து இருப்பது புலிகள் என்றுமே கொண்டிருக்கும் பிரசார, ஜனநாயக மறுப்பின், உண்மைக்குப் புறம்பான அரசியலின் வெளிப்பாடு தான். எப்போதுமே புலிகள் தமக்குச் சார்பானதைத் தவிர, வேறு எதனையும் கண்டு கொள்வதில்லை. இப்படித்தான் சர்வதேச சமூகமும் இலங்கைத் தமிழ் மக்களும் தம்மை ஆதரிப்பதாக புலிகள் யதார்த்த நிலைமைக்குப் புறம்பாக கருத்து தெரிவித்து வருகின்றனர்…
–பிரசாத்..
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment