Sunday, October 26, 2008

“இன்று இலங்கை தமிழ் மக்களுக்கு வேண்டியவையெல்லாம் தம்மை மீட்டுத் தருவோம் எனக் கூறிய விடுதலைப் புலிகளிடமிருந்து அவர்களை மீட்டெடுப்பதே.

டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள்
தமிழக முதலமைச்சர்
தமிழ்நாடு

மதிப்புக்குரிய ஐயா அவர்கட்கு,

தமிழ்நாடு இலங்கையின் இனப்பிரச்சினையில் அக்கறைகொள்ள ஆரம்பித்துள்ளமை மகிழ்ச்சி தருகின்ற போதும் தற்போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அகப்பட்டுள்ள தமிழ் மக்கள் மீது அக்கறை கொள்ளாமை ஏமாற்றத்தை தருகின்றது. தம்மை பாதுகாப்பதற்காக விடுதலைப் புலிகள் அவர்களை ஓர் மனித கேடயமாக பாவிக்கின்றனர். இலங்கை தமிழ் மக்கள் ஞாபகத்துக்கெட்டாத புராதானகாலம் தொட்டு பெரும்பான்மை சிங்கள மக்களுடன் வாழ்ந்தும், தொடர்ந்தும் வாழ வேண்டிய நிலையில் தமிழ் நாடு காட்டும் உற்சாகம் பெரும்பான்மை மக்களுடன் முரண்பாட்டை ஏற்படுத்தக்கூடிய போக்கை உருவாக்குவது போல் தோன்றுவதாக குழப்பமும் பயமும் அடைகின்றனர். தான் படுகொலை செய்யப்படுவதற்கு முன்பே இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே சச்சரவு ஏதும் இருக்க முடியாதென மகாத்மா காந்தி அவர்கள் எச்சரித்திருந்தார்கள். அதிலும் மேலாக இலங்கையும் தமிழ்நாடும் தமக்கிடையில் நல்லுறவை வளர்க்க வேண்டியது மிக அவசியமாகும்.

உங்கள் தமிழ்நாட்டு ‘கியூ’ பிரிவைச் சேர்ந்த பொலிசாரும் இந்திய கடற்படையினரும் இணைந்து பல தொன் எடையுள்ள கைக்குண்டு, கிளேமோர் குண்டு;, நிலக்கண்ணிவெடி ஆகிய ஆயுதங்கள் தயாரிக்க உபயோகிக்கப்படும் வெடிமருந்து, உருக்கு அலுமீனிய கட்டிகள், போல் பியரிங் ஆகியவற்றை தமிழ் நாட்டில் கைப்பற்றியமையை இலங்கை மக்களாகிய நாம் நன்றியுடன் நினைவு கூர்கிறோம். இத்தகைய பொருட்களை கைப்பற்றிய பெருமை உங்கள் தமிழ் நாட்டுப் பொலிசாருக்கும் இந்திய கடற்படையினருக்குமே உரியதாகும். இப் பொருட்கள் கைப்பற்றப்படாது போயிருந்தால் நம் இரு நாடுகளுக்கும் எத்தகைய கதி ஏற்பட்டிருக்கும் என்பதை இறைவன்தான் அறிவார். தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டால் எமது நாட்டுக்கு என்ன நடக்கும் என்பதும் நாம் அறியாததல்ல. இதன் காரணமாகவே நான் இவ்விரு நாடுகளும் நல்லுறவை பேணி நடக்க வேண்டுமென வற்புறுத்தி வருகின்றேன். மதிப்புக்குரிய ராஜீவ்காந்தி அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை நாம் மறக்க முடியாது. தமிழ் நாட்டில் விடுதலைப் புலிகள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டால் மீண்டும் இத்தகையதோர் சம்பவம் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தயவு செய்து தமிழ் நாட்டில் ஒர் யாழ்ப்பாணம் உருவாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

சர்வகட்சி மாநாட்டில் இலங்கை இனப்பிரச்சினை தீர்வுக்கு உதவுமாறு மத்திய அரசை வேண்டியது நன்றே ஆனால் அதுவல்ல நமது உடனடிப் பிரச்சினை. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் கட்டாயப்படுத்தி விடுதலைப் புலிகள் அப்பாவி மக்களை தடுத்து வைத்துள்ளமையால் அந்த மக்களை விடுவிக்குமாறு விடுதலைப் புலிகளுக்கு மத்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை விட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். மத்திய அரசுக்கு இருவார கெடு விடுத்தமை இலங்கையில் சில கடும் போக்காளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள புரளி இந்தியாவுடன் நட்புறவு நீடிக்க வேண்டுமென எண்ணும் அரசுக்கு சங்கடத்தை உண்டு பண்ணியுள்ளது.

தற்போது பிரச்சாரத்தின் முன்னணியில் செயற்படுபவர்களில் எவரேனும் இலங்கையில் நடப்பவை எதைப்பற்றியும் தெரியாதவர்கள் என்பதை தாங்கள் ஒத்துக் கொள்வீர்கள். விடுதலைப் புலி ஆதரவாளர்கள் எனக் கூறிக்கொள்பவர்களிடமிருந்தே சில தகவல்களை பெறுகிறார்கள். ஆனால் அவ்வாறு தகவல் கொடுப்பவர்களுக்குமே எதுவும் தெரியாது. அவர்கள் எவரேனும் உண்மை நிலையை அறிய என்றும் முயற்சிக்கவில்லை. விடுதலைப் புலிகளின் ஆயுத பலத்தால் மோசடி மூலம் தெரிவாகி புலிகளின் பினாமிகளாகவே செயற்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைகளுக்கேற்ப நடப்பது பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்கள் எப்போதும் விடுதலைப்புலிகளின் கட்டளைக்கேற்பவே செயற்படுகின்றனர். இலங்கைக்கு விஜயம் செய்து உண்மையை அறிய அவர்கள் எவரும் அக்கறை கொள்ளவில்லை. இலங்கையின் ஏதாவது ஒரு பகுதியில் தினமும் நடைபெறும் கிளேமோர் குண்டு வெடிப்பு, நிலக்கண்ணி வெடி, கைக்குண்டுத் தாக்குதல்களால் இலங்கை வாழ் மக்கள் தொடர்ச்சியாக பயத்துடனும் பீதியுடனுமே வாழ்கின்றனர். எத்தனையோ அப்பாவி சிங்கள, தமிழ், முஸ்லீம் உயிர்களை அவர்கள் எடுத்துள்ளனர். இக் காரணத்தால் போலும் எவரும் தமிழ் நாட்டிலிருந்து உண்மை உணர்த்தும் குழு எதிலும் இலங்கை வரவில்லை. மக்களை இப்பயங்கரத்திலிருந்து விடுவிக்கவே நாம் முயற்சிக்கிறோம்.

தங்களுக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்பு 1976ம் ஆண்டு எமது முதற் சந்திப்பு ஞாபகமாக இருக்குமென நம்புகிறேன். நாம் ஏன் சந்தித்தோம் என்பது இப்போது அவசியமில்லை. அப்போது நான் கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தேன். என்னுடன் பல ஆண்டுகள் கூடி வாழ்ந்த மக்கள் இன்று சகல உரிமைகளும் பறிக்கப்பட்டு கால் நூற்றாண்டுக்கு மேல் தடுத்து வைக்கப்பட்டு அடக்கி ஆளப்படுவது எனக்கு எத்தகைய உணர்வைத் தரும் என்பதை கற்பனை பண்ணி பாருங்கள். தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீராமல் உண்ண, உறங்க முடியவில்லை என கூறுகிறீர்கள். அப்படியானால் என்னால் எப்படி ஐயா சமாதானமாக இருக்க முடியும்?

இங்கே தினம், தினம் நிலைமை மோசமாகிக் கொண்டே வருகிறது. ஆனால் விடுதலைப் புலிகளின் முகவர்களது பொய் பிரச்சாரத்தால் அப்பாவி மக்கள் திரைக்கலைஞர்கள் தமிழ்நாடு பல்கலைகழக மாணவர்கள் ஆகியோர் விடுதலைப் புலிகளை சுத்த வீரர்களாக கருதுகிறார்கள். விளைவுகளை பொருட்படுத்தாது தமிழ் நாட்டில் ஓர் யாழ்ப்பாணத்தை உருவாக்க விரும்பினால் தமிழ் நாட்டை ஆண்டவனே காப்பாற்ற வேண்டும். விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுதாரிகள் கிளேமோர் தாக்குதல் போன்ற அச்சுறுத்தலை இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கும் ஏற்படுத்துவது நியாயமாகுமா? விடுதலைப் புலி தலைவர்கள் பிற நாடுகளில் தம் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை அளிக்கின்றனர். அவ்வாறே தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்களின் குடும்பத்தினர் கூட பிற நாட்டில். ஆனால் ஏழைப் பெற்றோரின் பிள்ளைகள் மட்டும் தற்கொலை குண்டுதாரிகளாகவும். போர் வீரர்களாக போர் முனையிலும் பலிக்கடாக்களாக அனுப்பப்படுகிறார்கள். அவர்கள் இந்திய நாட்டின் முன்னாள் பிரதமரை தமிழ்நாட்டில் வைத்து கொன்றுள்ளனர். பல தலைமுறைகளாக எம்முடன் வாழ்ந்த தமிழ் மொழியே பேசும் இஸ்லாமிய சகோதரர்களை அவர்களின் சகல உடைமைகளையும் பறித்துவிட்டு வெறும் 500 ரூபாவுடன் வெளியேற்றினர். அவர்கள் இன்றும் 17 ஆண்டுகளாக தென்னிலங்கையில் சிங்கள சகோதரர்கள் மத்தியில் அகதி முகாம்களில் பல துன்பங்கள் மத்தியில் வாழ்கின்றார்கள். எமது கலாச்சாரம், நாகரீகம் எல்லாம் தொலைந்து விட்டது. எமது பிள்ளைகளின் கல்வி குட்டிச்சுவராகி விட்டது. அண்மைய பத்திரிகை செய்தி ஒன்றின்படி கிழக்கு மாகாணத்தில் வாழும் 6000 பிள்ளைகளுக்கு அரிசுவடியே தெரியாதாம்.

என்னால் இந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன்சிங் அவர்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான்-கீ-மூன் அவர்களுக்கும் எழுதிய கடிதங்களின் ஒரு பகுதியை இங்கே தருகிறேன். : 16-01-2006 இல் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில்

“இன்று இலங்கை தமிழ் மக்களுக்கு வேண்டியவையெல்லாம் தம்மை மீட்டுத் தருவோம் எனக் கூறிய விடுதலைப் புலிகளிடமிருந்து அவர்களை மீட்டெடுப்பதே. மிகவும் துரதிஷ்டமான நிலை என்னவெனில் வடக்கிலும் தெற்கிலும் உள்ள உண்மையான நிலைமையை பற்றி அறியாமலும் பிரச்சினை என்னவென சரியாக தெரியாமலும் சில தமிழ் நாட்டு தலைவர்கள் பாராளுமன்றத்தில் தமக்குள்ள பலததை வைத்து இந்த அரசை பணியவைக்க முயற்சிக்கின்றனர். அரசுடன் கூட்டுச் சேர்ந்துள்ள அரசியற் கட்சிகள் தமது மறைமுகமான மிரட்டலை விட்டுவிட்டு உண்மையான நிலைமையை அறிந்து ஓர் நல்ல தீர்வை பெற உதவ வேண்டும். அன்றேல் நல்லதோர் தீர்வை அடைய இலங்கை அரசுக்கு உதவும் வகையில் இந்திய அரசிடமே பொறுப்பை கையளிக்க வேண்டும்.

என்னால் 03-10-2008 இல் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்துக்கு எழுதப்பட்ட கடிதத்தில் :-

“நான் இக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவைக்கு முழுப் பொறுப்பையும் ஏற்கிறேன். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழும் மக்கள் போதியளவு தியாகத்தை செய்து விட்டனர். அவர்கள் இதுவரை செய்த தியாகங்களும் கடைப்பிடித்த பொறுமையும் பட்ட கஷ்டங்களும் தம் பிள்ளைகளின் நன்மை கருதியே.. தற்போது விடுதலைப் புலிகள் வீட்டுக்கொரு பி;ள்ளையை தருமாறு அடம் பிடிப்பதால் அவர்கள் புலிகளின் கட்டளையை மீறி புரட்சி செய்ய தயாராக உள்ளனர். நட்புடன் செயல்படக்கூடிய ஒரு இராணுவம் தமது பணியில் எத்தகைய கஷ்டம் ஏற்பட்டாலும் பொருட்படுத்தாது மக்களின் உடைமைகளுக்கும் உயிருக்கும் பங்கம் ஏற்படாது தம்மை விடுவிப்பார்களேயானால் அந்த இராணுவத்துக்கு பூரண ஒத்துழைப்புத் தர தயாராக உள்ளனர்”

தங்களுக்கு திருவாளர்கள் வை.கோ, நெடுமாறன் ஆகியோருடன் நெருங்கிய நட்பிருந்தவேளை 08-10-2005 இல் நான் தங்களுக்கு எழுதிய கடிதத்தில் :-

“இலங்கை தமிழரின் நன்மை கருதி தமிழ்நாட்டு தலைவர்கள் தமது அரசியல் பேதங்களை மறந்து ஒன்றிணைந்து இனப்பிரச்சினைக்கோர் தீர்வு காண வேண்டும். நான் பல சிங்கள அரசியற் கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். அவர்களில் அநேகர் இந்திய அரகாரப் பகிர்வை ஒத்ததோர் தீர்வை வரவேற்கின்றனர். இத்தகையதோர் தீர்விற்கு ஒரு எதிர்ப்பும் இருக்காது என நம்புகிறேன். இலங்கையில் தனிநாடு அமைவது பற்றி இந்தியா எத்தகைய கருத்துக் கொண்டுள்ளது என்பதை அறிந்தவனாகையால் இலங்கை தமிழராகிய நாம் இதற்கு மேலாக எதையும் எதிர்ப்பாக்க முடியாது. மாறி மாறி ஆட்சி புரிந்தவர்கள் பிரிவினையை அங்கீகரிக்கோம் என மிகத் தெளிவாக கூறி வந்துள்ளமையால் இலங்கை தமிழ் மக்கள் இந்திய அரசுடன் இந்த விடயத்தில் முரண்பட முடியாது. மேலும்,

“விடுதலைப் புலிகளின் ஆளுமைக்குட்பட்டு அவர்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு தாங்கள் பெரிய சேவை செய்ததாக கணிக்கப்படுவீர்கள். இந்திய முறையிலான அதிகாரப் பகிர்வை கொண்ட ஓர் தீர்வை விரைவில் ஏற்படுத்;;த வேண்டிய அவசியத்தை திருவாளர்கள் வை.கோ, நெடுமாறன் ஆகியோரை ஏற்க வைக்கக்கூடிய ஆற்றல் தங்களுக்கு உண்டு என்பதை நான் முழுமையாக நம்புகிறேன். அத்தகைய ஓர் தீர்வு சிங்கள, தமிழ், இஸ்லாமிய சகோதரர்களுக்கு ஏற்புடையதாக இருக்கும். தமிழ்நாட்டு தலைவர்களை ஏற்க வைத்த பின்பு தாங்கள் டெல்லி அரசு மூலமாக இலங்கை அரசுடன் இப் பிரச்சினையை எடுக்க வேண்டும். தாங்கள் இந்த வகையாக எடுக்கும் முயற்சி நிச்சயமாக வெற்றி தரும் என்பது மட்டுமல்ல சர்வதேச சமூகமும் இதை வரவேற்கும். இத்தைகய தீர்வை யாரும் நிராகரிக்கமாட்டார்கள். நீண்டகால பிரச்சினை ஒன்றுக்கு தீர்வு காண தமது பங்களிப்பும் உதவியது என தமிழ் நாட்டு தலைவர்களும் மகிழ்ச்சி அடைவர்.

ஐயா! நாம் கடந்த 2005ம ஆண்டு அக்டோபர் மாதம் தங்களுக்கு கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை உபயோகித்து இலகுவாக தீர்க்க இருந்த வாய்ப்பை இழந்து விட்டீர்கள். விடுதலைப் புலிகளின் பினாமிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பி.ரி.ஐ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ஐக்கிய இலங்கைக்குள் ஓர் தீர்வை ஏற்பதாக கூறியுள்ளனர். இவர்களின் இந்த நிலைப்பாடு இலகுவாக பிரச்சினையை தீர்ப்பதற்கு வழி வகுக்கும் தயது செய்து தாமதிக்காது உடன் செயற்படவும்.

நன்றி

தங்கள் உண்மையுள்ள

வீ. ஆனந்தசங்கரி
தலைவர்- த.வி.கூ

1 comment:

sivam said...

ரேவதி என்னைத் தொலைபேசியில் அழைத்திருந்தாள் - ஒன்பதாவது கதையில் வந்திருந்த ரேவதி. அதீதனின் சொல்லியுள்ளது ஒருபக்கச் சார்ப்பானது, அவனுக்குச் சாதகமானவற்றை மட்டுமே சொல்லியிருக்கிறான் என்றாள். அவள் பக்கத்தையும் கேட்டு எழுதச் சொன்னாள்.