Monday, March 31, 2008

14 ஆண்டுகள் கோர்ட்டுக்கு நடந்தவர் விடுதலை

மும்பையில் எண்ணெய் கேன் திருடியதாக வழக்கு 14 ஆண்டுகள் கோர்ட்டுக்கு நடந்தவர் விடுதலை

மும்பை :மும்பை கலவரத்தின்போது, எண்ணெய் கேன் திருடியதாக வழக்கு போடப்பட்டு, திருட்டை நிரூபிக்க முடியாததால், ஒரு அப்பாவி விடுவிக்கப்பட்டார். இதற்கு, 14 ஆண்டுகள் ஆனது. கலவரத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட விசேஷ கோர்ட் தான், இவ்வளவு "சீக்கிரமாய்' வழக்கை நடத்தியது.

மும்பையில், 1992ம் ஆண்டு மதக் கலவரம் வெடித்தது. இதில், ஆயிரம் அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இது தொடர்பாக 536 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவர் அப்துல் கபார். கலவரத்தின்போது சர்ச்சையில் சிக்கிய கபார், சுலைமான் பேக்கரி அருகே ஜூஸ் கடை நடத்தி வந்தார் . கலவர தினத்தன்று, கடைக்குச் செல்ல, வீட்டிலிருந்து வெளியே வந்தபோது, கைது செய்யப்பட்டார். எண்ணெய் கிடங்கிலிருந்து இரண்டு எண்ணெய் கேன்களைத் திருடியதாக, இவர் மீது, இந்திய தண்டனைச் சட்டம் 380 (திருட்டு) மற்றும் 454 (அத்துமீறல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது குறித்து கபார் கூறுகையில், "கலவர நாட்களில், என்னுடன் பலரும் கைது செய்யப்பட்டனர். வெறும் தோற்றத்தை வைத்து, எங்களைக் கைது செய்த போலீசார், திருட்டு முதல் கொலை வரை பல வழக்குகளின் கீழ், இரண்டரை மாதம் போலீஸ் காவலில் வைத்தனர். அந்த நாட்களில், வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு என்னை கொடுமைப்படுத்தினர்' என்றார்.

வழக்கு விசாரணை, மஜ்கோன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்தது. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை, கோர்ட்டுக்குச் செல்ல வேண்டும். காலை முதல் மாலை வரை காத்திருந்தால், வழக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவித்து, இவரிடம் கையெழுத்து வாங்கி, அனுப்பி விடுவர். கிட்டத்தட்ட, 12 ஆண்டுகளாக இதே நிலை நீடித்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, விசாரணையே நடக்கவில்லை.

இதற்கிடையில், வழக்குகளை "விரைந்து' விசாரிக்க, கடந்த ஆண்டு, விசேஷ கோர்ட்டுகள் அமைக்கப்பட்டன. மும்பை செங்கோட்டை அருகே அமைக்கப்பட்ட புதிய கோர்ட்டில், "முக்கிய வழக்குகள்' பட்டியலில், இவர் வழக்கு தான் முதலில் விசாரிக்கப்பட்டது. இவர் தரப்பில் வாதாட வக்கீல்கள் யாரும் இல்லாத நிலையில், மனித உரிமைகள் அமைப்பைச் சேர்ந்த ஷகீல் அகமது என்ற வக்கீல், கைது செய்யப்பட்ட அப்பாவி மக்களுக்காக வாதாடினார். குற்றத்தை நிரூபிக்க சாட்சி ஏதும் இல்லாததால், கடந்த செவ்வாய் அன்று, கபார் விடுதலை செய்யப்பட்டார்.வக்கீல் அகமது கூறுகையில், "உண்மையான குற்றவாளிகளான அரசியல்வாதிகளும், போலீசாரும் வழக்கிலிருந்து தப்பித்து விட்டனர். கபார் போன்ற அப்பாவி மக்களை, 14 ஆண்டுகள் கோர்ட்டுக்கு அலைக்கழித்து இம்சைபடுத்தப்பட்டது தான் வேதனை' என்றார்.

Dinamalar

No comments: