ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் மூன்று தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் நேற்று வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ். - பத்மநாபா) சிரேஷ்ட முக்கியஸ்தர் என்.ஷ்ரீதரன் ஆகியோரே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
சுமார் இரண்டு மணிநேரம் நடைபெற்ற இச்சந்திப்பின்போது பல்வேறு விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டதாக புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
வவுனியா, மன்னார் பிரதேசங்களுக்கான போக்குவரத்து மதவாச்சி வரை தடைப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் மிகப்பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
எனவே இது தொடர்பாக மறுபரிசீலனை செய்து வவுனியா வரை ரயில் சேவையை நடத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ளவேண்டும்.
அவசர நோயாளிகள், அத்தியாவசியத் தேவைகளுக்காக கொழும்பு உட்பட தென்னிலங்கைக்குச் செல்வோர் இந்த நடவடிக்கையால் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதுடன் பெருமளவு நிதிச்செலவையும் எதிர்கொள்கின்றனர். இதனைவிட மீன்பிடித் தொழிலையே மிகப் பிரதானமாகக் கொண்டுள்ள மன்னார் மாவட்ட மீனவர்கள் தமது கடலுணவுப் பொருட்களை தென்னிலங்கைக்குச் சந்தைப்படுத்த முடியாமல் மிக மோசமான துயர நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
அத்துடன் மன்னார் மாவட்டத்தில் அறுவடை செய்யவேண்டிய பல்லாயிரக்கணக்கான வயல்களில் அறுவடை செய்தவற்கு வெளிமாவட்டத் தொழிலாளர்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் பெரும்போக நெற்செய்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் வன்முறைகள் எதுவுமின்றி ஜனநாயகரீதியாக நடைபெறுவதற்கான பாதுகாப்புச் சூழலை ஏற்படுத்த வேண்டுமென்றும் ஜனாதிபதியுடனான நேற்றைய சந்திப்பில் கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாதுகாப்பு உயரதிகாரிகளை சந்தித்து துரித நடவடிக்கையெடுப்பதாக ஜனாதிபதி இந்தச் சந்திப்பின்போது உறுதியளித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment