ரத்த தானம், கண் தானம் போல, இப்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, "விந்து'தானம்! பெங்களூரு உட்பட, சில நகரங்களில் இதற்கான பிரசாரம் நடக்கிறது; ஆனால், விந்து தானம் தர, பெரும்பாலானவர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
எப்போதும் கம்ப்யூட்டர் முன் அமர்ந்திருப்பது, சரியான தூக்கமின்மை, சத்தான உணவின்மை, சுகாதார பாதிப்பு போன்ற காரணங்களால், இப்போதுள்ள இளைய தலைமுறையினரில் கணிசமான பேருக்கு விந்துவில் போதுமான அளவு உயிரணுக்கள் இல்லை. இதனால் ஆண்களிடையே மலட்டுத்தன்மை அதிகரித்து வருகிறது. இவர்களின் குறையை போக்க, விந்து தானம் கைகொடுக்கிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில், விந்து தான மையங்கள் செயல்படுகின்றன.
கண், ரத்தம் தானம் தருவதை போல, விந்து தானம் செய்வோரும் உண்டு. அவர்கள் அடிக்கடி, விந்து தான மையத்தில் தங்கள் விந்து மாதிரியை தருவர். அதை, உயிரணுக்கள் போதாக்குறையாக உள்ள ஆண்களுக்கு பயன்படுத்திக் கொள்வர், டாக்டர்கள்.
இந்த முறை, இந்தியாவில் இப்போது பரவ ஆரம்பித்துள்ளது. பெங்களூரு நகரில் சில தனியார் மையங்கள், விந்து தானத்தை பிரசாரம் செய்து வருகின்றன. இந்த நிறுவனங்களில் இப்போது மாணவர்கள் தான் அதிக அளவில் விந்து தானம் தருகின்றனர். சாப்ட்வேர் உட்பட பல இடங்களில் பணியாற்றுவோர், விந்து தானம் தர தயங்குகின்றனர்.
விந்து தானம் பற்றி பிரசாரம் செய்யும் தனியார் அமைப்பின் தலைவர் வீணா ராவ் கூறுகையில், "விந்து தானம் பற்றி இந்தியாவில் இன்னும் விழிப்புணர்வு வரவில்லை. ஆண்கள் மலட்டுத் தன்மை போக்க, விந்து தானம் மிகவும் பலன் உள்ளது. இப்போது மாணவர்கள் தான் எங்களிடம் விந்து தானம் தருகின்றனர். மாதத்துக்கு 70 பேர் விந்து தானம் செய்கின்றனர்; அவர்களின் விந்து மாதிரியை வைத்து, செயற்கை கருவூட்டலுக்கு உதவி வருகிறோம்' என்றார்.
"குழந்தை பிறப்பதற்கு பயன்படும் விந்தை தானம் செய்வது என்பது , குடும்பத்தை மீறிய தவறான செயல் என்ற தவறான எண்ணம் பலரிடம் உள்ளது. குடும்பத்தினருக்கு, குறிப்பாக மனைவிக்கு செய்யும் துரோகம் என்றும் நினைக்கின்றனர்' என்றும் வீணா ராவ் வருத்தப்பட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment