Tuesday, April 15, 2008

தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டுமென இந்திய அரசு கூறுவது வெறும் வாய்ச்சொற்கள் மட்டுமே

விடுதலைப் புலிகள் குற்றச்சாட்டு

"இலங்கை தமிழரின் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்" என்று இந்திய அரசு கூறுவது வெறும் வாய்ச்சொற்கள் மட்டுமேயென என்று விடுதலைப் புலிகள் சாடியுள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை வெளியான "விடுதலைப்புலிகள்" ஏட்டின் 140 ஆவது இதழின் ஆசிரியர் தலையங்கத்தில் இது தொடர்பில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் அரசியல் தீர்வுகாண இலங்கை அரசு விரும்பவில்லை என்ற உண்மையையும், இராணுவத்தீர்வு மூலம் தமிழினத்தை அடிமைப்படுத்த அது முயல்கிறது என்ற யதார்த்தத்தையும் இப்போது, சர்வதேச நாடுகள் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளன.

போர் வெறிகொண்ட "கடும் போக்காளர்கள்" "சமாதான வழியில் நாட்டமில்லாதவர்கள்" என்றவாறாகப் புலிகள் மீது அரசு தொடுத்து வந்த அரசியல் குற்றச்சாட்டுகளுக்கு உண்மையில் உரித்துடையவர்கள் இலங்கை ஆட்சியாளர்கள்தான் என்ற உண்மையையும் உலகம் உணரதொடங்கியுள்ளது.

இவற்றின் விளைவாக இலங்கை அரசுடனான சர்வதேச உறவிலும் நெருக்கடிகள் ஏற்படத்தொடங்கியுள்ளன.

இலங்கை அரசிற்கான போராயுதங்களையும், பொருண்மிய உதவிகளையும், போருக்கான அரசியல் ஆதரவுகளையும் முன்னர் வழங்கி வந்த உலகப் பெருநாடுகள் தமது பொருள் உதவிகளையும், தார்மீக ஆதரவுகளையும் படிப்படியாக நிறுத்தி வருகின்றன.

இதனால் இலங்கை அரசின் போர் இயந்திரம் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. இந்த நெருக்கடி நிலையைச் சமாளிக்க முடியாமல் அரசு தத்தளித்துக் கொண்டிருக்கும் இத்தகைய அரசியல், இராணுவச் சூழலில் இலங்கையில் இன அழிப்புப் போருக்கு இராணுவ உதவிகள் புரிந்து அரசியல் ஆதரவு கொடுக்க முற்படும் இந்திய அரசின் செயல் தமிழ் மக்களைக் கோபத்திற்குள்ளாக்கியுள்ளதுடன் சர்வதேச சமூகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இலங்கை அரச படைகள் போரில் இழப்புக்களையும் பின்னடைவுகளையும் சந்திக்கும் போதெல்லாம் தளபதிகள் அவசர அவசரமாக இந்தியப் பயணம் செய்வதும், அங்கே அரச தலைவர்களையும், இராணுவத் தளபதிகளையும் சந்திப்பதும் வழமையாக உள்ளது.

தமிழரை இன அழிப்பிற்குள்ளாக்குவதில் பொறுப்பாக நின்று செயற்படும் அந்த தளபதிகளுக்கு செங்கம்பள வரவேற்பளிப்பதில் இந்திய ஆட்சிபீடம் அக்கறை காட்டுவதையும் உலகம் அவதானித்த படியே உள்ளது.

இலங்கை அரசின் போர் நடவடிக்கையுடன் இந்தியத் தேசிய நலனை இணைத்து அதிகாரிகள் வெளியிடும் உத்தியோகபூர்வ கருத்துக்கள் தமிழ் மக்களைப் புண்படுத்தி வருகின்றன.

இலங்கைக்கு வேறு நாடுகளின் ஆயுதங்களால் இந்தியாவுக்கு ஆபத்து என்ற இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரின் கருத்தும். இலங்கைப் படைகள் சோர்ந்து போவதை இந்தியா விரும்பவில்லை என்ற இந்திய இராணுவப் பேச்சாளரின் கருத்தும் இலங்கை அரசிற்கு இராணுவ உதவிகள் புரிந்துவரும் இந்திய அரசின் நிலைப்பாட்டை நியாயப்படுத்த முனைகின்றன.

இலங்கை அரசின் போரிற்கு உதவிகள் புரிந்து, ஒத்தாசையாக இருக்கும் அதேசமயம், அது ஆக்கிரமித்த தமிழர் நிலப்பகுதிகளில் பொருண்மிய நன்மைகளைப் பெற முயலும் சிறுமைத்தனத்திலும் இந்திய அரசு அக்கறை காட்டி வருகின்றது.

திருகோணமலை மாவட்டத்தில் சம்பூர் பகுதியை படைகள் ஆக்கிரமித்த பின்னர் அங்கே ஒரு அனல் மின்நிலையத்தை இலங்கை அரசுடன் இணைந்து நிறுவும் முயற்சிக்கு இந்திய அரசும் உடன்பட்டுள்ளது.

இதுபோன்று, இந்தியாவில் உள்ள மின் பிறப்பாக்கி நிலையம் ஒன்றிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தை படையின் ஆக்கிரமிப்பில் உள்ள தமிழர் நிலம் தலைமன்னார் வழியாக அனுராதபுரம் வரை எடுத்துச் சென்று விற்கும் ஒரு வர்த்தக ஒப்பந்தத்திலும் கைச்சாத்திடும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இலங்கை அரசின் நில ஆக்கிரமிப்பிற்கு சர்வதேச அங்கீகாரம் கொடுக்க முனையும் ஒரு அரசியல் நடவடிக்கையாகவே இந்திய அரசின் இந்த வர்த்தக முயற்சிகள் அமைந்திருக்கின்றன.

இவ்விதம் தமிழரை இனக்கொலை செய்யும் இலங்கை அரசுக்கு இராணுவ, அரசியல், பொருண்மிய உதவிகளை இந்திய அரசு நல்கிவருகின்றது.

இதனால் தான் இந்திய அரசின் அனைத்து வகை ஆதரவுடனும் இலங்கை அரசு செய்யும் தமிழ் இனப் படுகொலைக்கு இந்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று புலிகள் இயக்கம் குற்றம் சாட்டியிருந்தது.

"இலங்கை போர் நிறுத்தப்பட வேண்டும், தமிழரின் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வே காணப்பட வேண்டும்" என்று இந்திய அரசு விடுக்கும் அறிக்கைகளை வெறும் வாய்ச்சொற்களாகவே தமிழ் மக்கள் பார்க்கின்றனர்.

Thinakkural[15 - April - 2008]

No comments: