Saturday, April 19, 2008

பிரியங்கா- நளினி சந்திப்பு கூறும் செய்தி என்ன ?

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு தமிழகத்தின் வேலூரில் மத்திய சிறையில் ஆயுட் காலச் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நளினி ஷ்ரீஹரனுக்கும் ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா வடேராவுக்கும் இடையே கடந்த மாதம் 19 ஆம் திகதி மிகவும் இரகசியமாக நடந்த சந்திப்பு தற்போது அம்பலமாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வேலூரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் ஷ்ரீலக்ஷ்மி நாராயணி பொற்கோயிலைத் தரிசிப்பதற்காகத்தான் பிரியங்கா கடந்த மாதம் தமிழகம் வந்ததாக ஆரம்பத்தில் கூறப்பட்டது. தமிழக விஜயத்தின் போது அவரது நடமாட்டம் குறித்து மாநில அரசாங்கத்தின் உயரதிகாரிகளுக்கே தெரியாத அளவுக்கு பேணப்பட்ட இரகசியத்தன்மையின் புதிரை இப்போது புரிந்துகொள்ள முடிகிறது. பிரியங்காவின் வேலூர்ச் சிறை விஜயம் அரசியல் விவாதத்துக்கும் ஊகங்களுக்கும் உரிய விவகாரமாக மாறியிருக்கிறது. இந்தியாவின் முதன்மையான அரசியல் குடும்பமொன்றின் உறுப்பினரான பிரியங்கா தனது தந்தையாரின் கொலை வழக்கின் குற்றவாளியொருவரைச் சந்தித்துப் பேசிய செயல் இந்தியாவில் மாத்திரமல்ல இலங்கையிலும் பெரும் ஆர்வத்தையும் அக்கறையையும் தூண்டியிருக்கிறது.

நளினியைச் சந்தித்துவிட்டு பிரியங்கா புதுடில்லி திரும்பிய பின்னரும் கிட்டத்தட்ட ஒருமாதகாலமாக இரகசியம் பேணப்பட்டுவந்திருக்கிறது. தகவல் அறிவதற்கான உரிமை தொடர்பாக சென்னை வழக்கறிஞர் ஒருவர் மனுத்தாக்கல் செய்த பின்னர்தான் உண்மை வெளியாகியிருக்கிறது. செய்திகள் வெளியானதும் நளினியைச் சந்தித்ததை ஒப்புக்கொண்ட பிரியங்கா இதில் பகையோ, பழி உணர்வோ, குரோதமோ, கோபமோ இல்லையென்றும் தன்னுடைய தனிப்பட்ட முயற்சி காரணமாகவே இச்சந்திப்பு இடம்பெற்றது என்றும் வன்முறையில் தந்தையாரைப் பறிகொடுத்த தனக்கு ஆறுதல் தேடுவதற்கான ஒரு வழிமுறையாகவே சந்திப்பு அமைந்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார். பகை எண்ணம், பழி உணர்வில் தனக்கு நம்பிக்கை இல்லையென்றும் அந்த உணர்வுகள் தன்னை ஆட்கொள்ள அனுமதிக்கப்போவதில்லையென்றும் தெரிவித்திருக்கும் பிரியங்கா, நளினியின் தூக்குத் தண்டனையை தனது தாயாரும் காங்கிரஸ் கட்சியின் தலைவியுமான திருமதி சோனியா காந்தி தலையிட்டு ஆயுட்காலச் சிறைத்தண்டனையாக மாற்றுவதற்கு வழிசெய்திருந்ததையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். இச்சந்திப்புக் குறித்து சோனியா காந்தியிடமிருந்து இதுவரை எந்தவிதமான கருத்தும் வெளிவரவில்லை. ஆனால், பிரியங்காவின் சகோதரரும் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ராகுல் காந்தியிடம் `உங்கள் சகோதரியைப் போன்று நீங்களும் நளினியைச் சந்திப்பீர்களா' என்று செய்தியாளர்கள் கேட்டபோது, `இந்த விடயங்களை நான் வேறு கோணத்தில் பார்க்கிறேன். இதில் எனக்கு எந்தவித பிரச்சினையுமே இல்லை. எனது தந்தையின் கொலையாளியைப் பார்க்க வேண்டுமென்று பிரியங்கா விரும்பினார். கொஞ்ச நாட்களாகவே அவருக்கு இந்த எண்ணம் இருந்துவந்தது' என்று பதிலளித்திருக்கிறார். காங்கிரஸ் கட்சி இந்த விவகாரம் தொடர்பில் கருத்துக் கூறுவதற்கு மறுத்திருக்கின்றமை கவனிக்கத் தக்கதாகும்.

நளினியை பிரியங்கா சந்தித்து சுமார் ஒரு மணித்தியாலமாக பேசியமை உண்மையிலேயே அவர் தரப்பிலான ஒரு நல்லெண்ண வெளிப்பாடு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், தந்தையார் படுகொலை செய்யப்பட்டு 17 வருடங்களுக்குப் பிறகு குற்றவாளிகளில் ஒருவரை சந்திப்பதற்கு மகள் விரும்பியமையும் சந்திப்பு இடம்பெற்று சுமார் ஒரு மாத காலத்துக்குப் பின்னர் ஊடகங்கள் மூலமாக செய்தி கசிய விடப்பட்டமையும் காந்தி குடும்பத்துக்கும் காங்கிரஸுக்கும் ஆதரவையும் அனுதாபத்தையும் தோற்றுவிப்பதற்கான ஒரு பிரசாரத் தந்திர செயற்பாடோ என்று சந்தேகிப்பவர்கள் ஏராளம். ராஜீவ்காந்தி கொலை விசாரணைகளுக்கு தலைமை தாங்கிய இந்திய மத்திய புலனாய்வுப் பணியகத்தின் (சி.பி.ஐ.) முன்னாள் இயக்குநர் டி.ஆர்.கார்த்திகேயன் நளினி- பிரியங்கா சந்திப்பை `ஒரு அனுகூலமான நிகழ்வு' என்று வர்ணித்திருக்கிறார். பிரியங்காவின் விஜயம் எனக்கு ஆச்சரியத்தைத்தரவில்லை. சதாகாலமும் நாம் வெறுப்புணர்வுடன் வாழ முடியாது. நளினியின் தூக்குத் தண்டனையை ஆயுட் காலச் சிறைத் தண்டனையாக மாற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டவர் பிரியங்காவின் தாயார் சோனியா காந்திதான். இத்தகைய நிகழ்வுகளை நான் சாதகமான கோணத்திலேயே நோக்குகிறேன் என்று கார்த்திகேயன் குறிப்பிட்டிருக்கிறார். ஒரு விசித்திரமான அம்சம் என்னவென்றால் இச் சந்திப்பு குறித்து தமிழகத்தின் முக்கியமான தலைவர்களிடமிருந்து பிரதிபலிப்பு எதுவும் இதுவரை வெளிவராதமையாகும்.

பிரியங்காவின் செயல் அவரது ஆளுமை மீது சாதகமான ஒளியைப் பாய்ச்சுகிறது என்று வர்ணிக்கப்படுகின்ற போதிலும், அதை முன்னென்றும் இல்லாதது என்று சொல்லிவிட முடியாது. மகாத்மா காந்தியைக் கொலை செய்த கோட்சேயை காந்தியடிகளின் மகன் தேவதாஸ் காந்தி சிறையில் சந்தித்துப் பேசிய சம்பவம் சரித்திரத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பிரியங்கா செய்ததைப் போன்று இரகசியமாகச் செல்லாமல் தேவதாஸ் காந்தி முறைப்படி சிறை அதிகாரிகளிடம் பகிரங்கமாக அனுமதி பெற்றுத்தான் கோட்சேயைச் சந்தித்தார் என்பதை தமிழகத்தின் பிரபல தமிழ்த் திசைரிகளில் ஒன்று அதன் ஆசிரிய தலையங்கத்தில் நேற்றைய தினம் சுட்டிக் காட்டியிருக்கிறது. இது இவ்வாறிருக்க, நளினி- பிரியங்கா சந்திப்பு அம்பலமாகியதையடுத்து அரசியல் அரங்கில் பெரும் ஆர்வமும் பரபரப்பும் தோன்றியமைக்குக் காரணம் இலங்கை இன நெருக்கடியுடன் தொடர்புடைய விவகாரங்களில் இந்தியாவின் தற்போதைய அணுகுமுறைகள் ராஜீவ் காந்தி கொலையின் பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டு நோக்கப்படுகின்றமை தான். 2006 பிற்பகுதியில் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக தமிழக சட்ட சபையில் நடைபெற்ற விவாதமொன்றுக்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி இலங்கை நெருக்கடியில் இந்தியக் கொள்கையை `ராஜீவ் காந்திக்கு முன்னர், ராஜீவ் காந்திக்கு பின்னர்' என்று பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்ததை இச்சந்தர்ப்பத்தில் நினைவுப்படுத்துவது பொருத்தமானதாகும். இந்திய அணுகுமுறையின் அடிப்படைகளில் மாறுதல்கள் ஏற்பட வேண்டுமென்று இலங்கைத் தமிழர்கள் பல வருடங்களாக ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த மாறுதல்களுக்கு கட்டியம் கூறும் ஏதாவது அம்சம் வேலூர்ச் சிறைச் சந்திப்பில் இருக்கமுடியும் என்று எதிர்பார்ப்பது விவேகமானதா? இலங்கைத் தமிழ் மக்களுக்கு நளினி- பிரியங்கா சந்திப்பின் மூலமாக ஏதாவது செய்தி சொல்லப்படுகிறதா?

No comments: