Saturday, April 19, 2008

பிரியங்கா - நளினி சந்திப்பையடுத்து வழக்கறிஞர் எழுப்பியிருக்கும் கேள்விகள்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் மகளான பிரியங்கா வத்ரா ராஜீவ் கொலைக் குற்றவாளிகளில் ஒருவரான நளினியை சந்தித்தமையானது படுகொலை விசாரணையை திரும்ப மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கைகளுக்கு வலுவூட்டியிருப்பதாக நளினியின் வழக்கறிஞர் எஸ். துரைசாமி தெரிவித்துள்ளார்.
படுகொலையில் விடுதலைப்புலிகள் சம்பந்தப்பட்டிருப்பது குறித்து பிரியங்கா சந்தேகம் கொண்டிருப்பதாகவும் இந்த வழக்குக் குறித்து மேலும் விசாரணை செய்வதற்கான சாத்தியம் தற்போதும் இருப்பதாகவும் துரைசாமி நியூவின்ட் பிரஸ் இணையத்தளத்திற்குக் கூறியுள்ளார்.

விசேட விசாரணைக்குழுவும் இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவின் கியூப் பிரிவும் மேற்கொண்ட விசாரணைகள் முழுமையாகப் பூர்த்தியடையவில்லையெனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இதுவொரு முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட விசாரணையாகும். அதனாலேயே வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 26 பேரில் 19 பேரை உச்சநீதிமன்றம் விடுவித்தது. விசேட தடா நீதிமன்றம் 26 பேருக்கும் மரண தண்டனை வழங்கியிருந்தது என்றும் துரைசாமி சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ராஜீவ் காந்தியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு உதவிய நபர்களை அடையாளம் கண்டுகொள்வதில் மத்திய புலனாய்வுப் பிரிவு தோல்வி கண்டுவிட்டதாகவும் துரைசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். மே 17, 1991 வரை தமிழ்நாட்டிற்கு ராஜீவ் வருகை தருவதற்கான நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.

டில்லியில் மே 19 இல் இந்தப் பயணம் தொடர்பாக அறிவிக்கப்பட்டபோது, அச்சமயம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த வாழப்பாடி இராமமூர்த்தி அந்த யோசனையை எதிர்த்ததாகவும் பயணத்தை ரத்துச்செய்யுமாறு கோரியதாகவும், ஆனால், அது நடைமுறைப்படுத்தப்படவில்லையெனவும் கூறப்படுகிறது.

ராஜீவ் சென்னைக்கு வந்து ஷ்ரீபெரும்புதூர் கூட்டத்தில் உரையாற்றப்போவதாக யார் குற்றவாளிக்கு அறிவித்தது? என்று துரைசாமி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

பயண ஒழுங்கின் பிரகாரம் மே 21 இல் ஷ்ரீ பெரும்புதூர் கூட்டத்தின் பின்னர் ராஜீவ் அங்கு தங்கியிருந்திருக்க வேண்டும். மீண்டும் இது தொடர்பாக ராமமூர்த்தி ஆட்சேபனை தெரிவித்திருந்தார். ராஜீவ் தங்கியிருப்பதற்குரிய நல்ல ஹோட்டல் அங்கு இல்லையென அவர் கூறியிருந்தார். ஆனால், உயர்மட்டம் தங்கியிருக்கவே வலியுறுத்தியிருந்தது.

கூட்டம் இடம்பெற்ற இடத்தில் மேற்கொள்ளப்படவிருந்த முதல் முயற்சி தோல்விகண்டால் ராஜீவ் தங்கியிருக்கும் இடத்தில் மற்றொரு முயற்சியை மேற்கொள்வதற்காக குற்றவாளிக்கு உதவும் திட்டமே இதுவாகும் என்று துரைசாமி கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் ராஜீவ் மேற்கொள்ளும் பயண நிகழ்ச்சித் திட்டப் பிரதியை உள்ளூர் பொலிஸ் அதிகாரிகள் கேட்டிருந்தபோதும் அந்த நிகழ்ச்சி நிரலை வழங்க காங்கிரஸ் உயர்மட்டம் மறுத்துவிட்டது. பயண ஒழுங்கின் பிரகாரம் விழாக் கூட்டம் முடிவடைந்த பின்னர் தமிழ்நாட்டிற்கு ராஜீவ் வரவிருந்தார். விமானத் தொழில்நுட்பக் கோளாறால் ஷ்ரீபெரும்புதூர் கூட்டத்தை அவர் ரத்துச் செய்திருந்தார். அவர் இரவு தங்குவதற்காக உள்ளூர் சுற்றுலா விடுதிக்கு திரும்பிச் சென்று கொண்டிருக்கும் பொழுது அவருக்கு வயலர்ஸ் மூலம் அழைப்புக் கிடைத்தது. அடுத்த விமானத்தில் சென்னை செல்ல முடியுமென அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.

யார் இதனை ஏற்பாடு செய்தார்கள்? ஏன்? என்று துரைசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன், இந்த முக்கியமான கேள்விகளுக்கு மத்திய புலனாய்வுப் பிரிவு உரிய பதிலை வழங்கவில்லையெனவும் இந்தக் கோணங்களிலிருந்து பார்த்தால் மேலும் விசாரணை செய்வதற்கு இடமிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிரியங்கா - நளினி சந்திப்புக்கு வலுவான காரணம் இருக்க வேண்டும். தனது தந்தையின் கொலையின் பின்னணியிலுள்ள உண்மையை நிச்சயப்படுத்திக்கொள்ள பிரியங்கா விரும்பியிருக்கக்கூடுமெனவும் துரைசாமி கூறியுள்ளார்.

No comments: