முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினியை சந்தித்த அவரது மகள் பிரியங்கா, தங்களை சந்திக்காதது ஏன் என்று குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் வாரிசுகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
.
ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்களுக்கு ஒரு போதும் மன்னிப்பு அளிக்கக்கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்த் கடந்த 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் குண்டுவெடிப்பில் கொலை செய்யப்பட்டார். அவருடன் மேலும் 16 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்பு வழக்கில் நளினி, அவரது கணவர் முருகன் உள்ளிட்டோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் நளினியின் மரண தண்டனை மட்டும் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.
இந்த நிலையில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா வதேரா சமீபத்தில் சந்தித்துப் பேசினார்.
பிரியங்காவின் இந்த செயல் பலருக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் பிரியங்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கொலைக்கு சதித்திட்டம் தீட்டி தண்டனை அனுபவித்து வரும் நளினியை சந்தித்த பிரியங்கா பாதிக்கப்பட்ட தங்களை இதுவரை வந்து சந்திக்காதது ஏன் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
செங்கை மேற்கு காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த முகம்மது இக்பால், ராஜீவ் காந்தியை கொல்ல வைக்கப்பட்ட வெடிகுண்டில் சிக்கி உயிரிழந்தார்.
அவரது மனைவி நசீம் பானு மற்றும் மகன் ஜாவித் இக்பால் ஆகியோர் ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கு மன்னிப்பு அளிக்கக்கூடாது என்று கூறியுள்ளனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணமானவர்களை மன்னிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று நசீம் பானு கூறியுள்ளார். அவரது கருத்தையே பாதிக்கப்பட்ட பலரும் தெரிவிக்கின்றனர்.
இந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்த லீக் முனுசாமி என்ற காங்கிரஸ் பிரமுகரின் மகன் லீக் மோகன், நளினிக்கு பெண் குழந்தை உள்ளது என்பதால் அவருக்கு மன்னிப்பு அளிக்க வேண்டும் என்ற வாதத்தை ஏற்கமுடியாது என்றும், இந்த குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களுக்கும் குழந்தைகள் உள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
நளினிக்கு மன்னிப்பு அளிக்கவே கூடாது என்று கூறும் மோகன் இது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு தாம் கடிதம் எழுதியதாகவும் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் காயமடைந்து 70க்கும் மேற்பட்ட குண்டு துகள்களுடன் போராடிக் கொண்டிருக்கும் பார்த்தசாரதி, தனது மருத்துவ செலவை தாமே மேற்கொண்டதாகவும், சொந்த செலவில் நீதிமன்றத்திற்கு சென்று சாட்சியமளித்ததாகவும் கூறுகிறார்.
ஆனால் காங்கிரஸ் கட்சியிலிருந்தோ, காந்தி குடும்பத்திலிருந்தோ தங்களுக்கு எந்த உதவியும் அளிக்கப்படவில்லை என்றும், யாரும் தங்களை வந்து பார்க்கக்கூட வில்லை என்றும் ஆதங்கப்படுகிறார்.
என்ன நடந்தது என்று நளினியிடம் போய் ஏன் பிரியங்கா கேட்கவேண்டும்? எங்களிடம் வந்து கேட்கட்டும் என்கிறார். நளினி மீது தமக்கு எந்த வெறுப்பும் இல்லை என்றாலும், பலரது குடும்பங்களை பாதிக்கச் செய்த நபரை மன்னிக்கவே கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
யார் மீதும் தங்களுக்கு எந்தக் கோபமும் இல்லை என்ற போதிலும், நளினியை பிரியங்கா சந்தித்த செய்தியை படித்தபோது தங்களது மனம் புண்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Sunday, 20 April, 2008
Sunday, April 20, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment