வெளிநாடு செல்வதற்காக போலி முகவர் ஒருவரிடம் மூன்று கோடி ரூபாவுக்கும் மேல் கொடுத்த பத்துப் பேர் இடை வழியில் கைவிடப்பட்ட நிலையில் ஏமாற்றத்துடன் நாடு திரும்பியுள்ளனர்.
யாழ். குடாநாட்டிலிருந்து பாதுகாப்பு காரணங்களுக்காக கொழும்பு வந்த பத்துப் பேரிடமே கனடா அனுப்புவதாகக் கூறி பெருந் தொகை பணத்தை பெற்றுக் கொண்ட இந்தப் போலி முகவர் அவர்களை பஹாமாஸ் வரை அழைத்துச் சென்று பின் கைவிட்டுவிட்டு தலைமறைவாகி விட்டார்.
யாழ்ப்பாணம் கட்டப்பிராய் பகுதியைச் சேர்ந்த இந்தப் போலி முகவரான பெண், தன்னை ஒரு மத போதகரெனக் கூறி இவர்களை நம்பவைத்து பெருந் தொகைப் பணத்தை மோசடி செய்துள்ளார்.
இவரது உபமுகவர்களெனக் கூறப்படும் நீர்கொழும்பில் வசிக்கும் ஒருவரும் கொழும்பு முகத்துவாரம் பகுதியில் வசிக்கும் ஒருவருமே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பத்துப் பேரையும் அந்தப் பெண் முகவரிடம் அறிமுகம் செய்துள்ளனர்.
இவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் விதத்தில் பேசிய அந்தப் பெண் தன்னையொரு மத போதகரெனவும் கூறவே அவரை நம்பி பத்துப் பேரும் கனடா செல்லும் நோக்கில் தலா 30 இலட்சம் ரூபா வீதம் மூன்று கோடி ரூபாவை ஒப்படைத்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் பிற்பகுதியில் இந்தப் பத்துப் பேரையும் அந்தப் போலி முகவர் டுபாய் வழியாக பஹாமாஸுக்கு கூட்டிச் சென்று பின்னர் அனைவரையும் விட்டு விட்டு தலைமறைவாகிவிட்டார்.
இந்த நிலையில் அந்நாட்டு பொலிஸாரிடம் அகப்பட்ட இவர்கள் 19 நாட்கள் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இவர்கள் பஹாமாஸ் புறப்படும் போது இரு வழிப் பயணத்திற்கான பயணச் பற்றுச் சீட்டை எடுத்துச் சென்றதால் தங்கள் பயணச் சீட்டை உறுதிப்படுத்தி அங்கிருந்து ஒருவாறு கடந்த மாத முற்பகுதியில் நாடு திரும்பினர்.
இதேநேரம், இவர்களை ஏமாற்றிய அந்தப் போலி முகவர் மார்ச் மாத முற்பகுதியில் நாடு திரும்பியுள்ளார். ஏமாற்றப்பட்டவர்கள் நாடு திரும்பியதும் தங்களை ஏமாற்றிய போலி முகவரிடம் சென்ற போது அவர் இவர்களை மிரட்டி அனுப்பி விட்டார்.
இந்த நிலையில், தாங்கள் ஏமாற்றப்பட்டது தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பொலிஸாரிடம் (சி.ஐ.டி) நேரில் சென்று முறைப்பாடு செய்தும் கடிதம் மூலம் புகார் செய்தும் எதுவித பிரயோசனமும் ஏற்படவில்லையென்றும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment