Sunday, April 27, 2008

மடுமாதாவின் திருச்சொரூபத்தை மீண்டும் பழைய இடத்துக்குக் கொண்டுவரவேண்டும்

மடுமாதாவின் திருச்சொரூபத்தை மடுத் தேவாலயத்திற்கு மீண்டும் கொண்டு வருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் பாதுகாப்புப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல.இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கியுள்ள தகவலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்திருப்பவை வருமாறு:
திருச்சொரூபத்தைக் கொண்டு வருவதற்கு விடுதலைப் புலிகளின் பாதுகாப்பு உத்தரவாதத்தைப் பெறுவது அவசியம் இல்லை.
இந்தச் சொரூபத்தை பாதுகாப்பதற்கு அதனை 70 கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் உள்ள விடுதலைப் புலிகளின் பகுதிக்கு எடுத்துச் சென்றமைக்கான காரணம் உள்நோக்கம் என்ன என்பது புரியவில்லை. இவ்வாறான நடவடிக்கையின் மூலம் மன்னார் ஆயர் கிஸ்தவ உணர்வுகளுக்கு எதிராக செயற்பட்டிருக்கிறார்.

மடுப்பகுதியை நாங்கள் விடுதலைப் புலிகளிடமிருந்து தற்போது மீட்டுள்ளோம். விடுதலைப் புலிகளும் அரசும் சில வாக்குறுதிகளை வழங்க வேண்டுமெனத் தெரிவிக்கப்படுவதாக அறிகிறோம்.விடுதலைப் புலிகளின் உறுதிமொழிகள் பற்றி நாம் கடந்த 30 வருடங்களாக நன்கறிவோம்.

கத்தோலிக்க சமூகத்தைப் பொறுத்தவரை மடுமாதாவின் திருச்சொரூபம் மிக விரைவில் உரிய இடத்திலிருக்க வேண்டுமென விரும்புகின்றனர்.
இலங்கை இராணுவம் மடுத் தேவாலயப் பகுதியையும், அதனைச் சுற்றியுள்ள பகுதியையும் கைப்பற்றியுள்ளது. மடுவைச் சுற்றி 16 முதல் 20 கிலோ மீற்றர் தூரம் வரை அரச படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.
மடுமாதாவின் சொரூபத்தை பழைய இடத்தில் வைப்பதற்கு விடுதலைப் புலிகளின் பாதுகாப்பு உத்தரவாதம் ஏன் அவசியமென்பது எனக்கு விளங்கவில்லை.

பாதுகாப்பே மன்னார் ஆயரின் முக்கிய கவலை என்றால், அதனை கொழும்புக்குக் கொண்டு வருவதே உகந்தது.இலங்கையின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் புத்தரின் தந்த தாதுக்கு ஆபத்து ஏற்பட்டபோது அது பிற இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

எனினும், மடுமாதாவின் சொரூபத்தினைப் பொறுத்தவரை, விடுதலைப் புலிகளின் பகுதியை பாதுகாப்பானதாகக் கருதி ஆயர் அங்கு கொண்டுசென்றது ஏன் என்பது விளங்கவில்லை.இலங்கை அரசு திருச்சொரூபத்தை மடுத் தேவாலயத்தில் மீண்டும் வைக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றது.

விடுதலைப் புலிகளின் பகுதிக்குள் அதனைக் கொண்டுசென்றது கத்தோலிக்கர்களின் உணர்வுகளுக்கு எதிரானது என்றார்.

No comments: