Saturday, April 19, 2008

ஆயுள் தண்டனை கைதி நளினி விடுதலைகோரி உயர் நீதி மன்றில் மனுத்தாக்கல்

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் நளினியை விடுதலை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றில் மனு, தாக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இவ் வழக்கு அடுத்தவாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது. நளினி விடுதலையாவார் என்று அவரது வழக்கறிஞர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991, மே.21ன்றில் தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுகொண்டிருந்த போது ஸ்ரீபெரும்புதூரில் இடம் பெற்ற மனித வெடிகுண்டுக்கு பலியானார். இது தொடர்பான வழக்கில் பிரபாகரன் உள்ளிட்ட சிலர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினிக்கு முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் இந்த மரண தண்டனை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலையீட்டின் பேரில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

நளினிக்கு கருணை காட்டும்படி அவர் கேட்டுக்கொண்டதால் இவ்வாறு தண்டனை குறைக்கப்பட்டது. இந் நிலையில் 1991ம் ஆண்டு முதல் நளினி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் அவரை சோனியாவின் மகள் பிரியங்கா வேலூரில் சிறையில் சந்தித்தார். என் தந்தை நல்ல மனிதர். அவரை ஏன் கொன்றார்கள் என்று கேட்டு பிரியங்கா அழுதார். நளினியே அப்போது கண்ணீர் விட்டு அழுதாராம். இந்த சந்திப்பு உண்மை என்று பிரியங்கா பிறகு ஒப்புக்கொண்டார்.

17 ஆண்டுகளுக்கு பிறகு நளினியை பிரியங்கா சந்தித்தது ஏன் என்பது புதிராக உள்ளது என அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் பிரியங்கா தன்னை சந்தித்ததின் மூலம் தன் பாவங்களெல்லாம் நீங்கிவிட்டது என்று நளினி கூறியுள்ளார். வேலூர் சிறையில் நளினி 17 ஆண்டுகளாக இருந்து வருகிறார். ஆயுள் தண்டனை என்பது 14 ஆண்டுகள்தான் ஆனால் அதையும் தாண்டி நளினி சிறையில் இருந்து வருகிறார். அவரை விடுவிக்கக்கோரி பலமுறை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ஆனால் அந்த மனுக்கள் எல்லாம் நிராகரிக்கப்பட்டுவிட்டன. இப்போது நளினியை பிரியங்கா சந்தித்துள்ள நிலையில் நளினியை விடுதலை செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதன்படி விரைவில் மீள் மனு தாக்கல் செய்யப்படும் என்று அவரது வழக்கறிஞர் கூறினார். நளினி விடுதலையாவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பின்பு அடுத்தவாரம் விசாரணை ஆரம்பமாகலாம் என்றும் தெரிகிறது. அநேகமாக நளினி இந்த முறை விடுதலையாவார் என்று அவரது வழக்கறிஞர் மீண்டும் ஒரு முறை நம்பிக்கையோடு கூறினார்.

No comments: