Saturday, April 26, 2008

உறுதிமொழி கிடைத்தால் மட்டுமே மடுமாதா சிலை மீண்டும் கொண்டுவரப்படும்

இரண்டரை கிலோமீற்றரை அமைதிவலயமாக்கும் பகிரங்க உறுதிமொழி கிடைத்தால் மட்டுமே மடுமாதா சிலை மீண்டும் கொண்டுவரப்படும்

மடுமாதா திருத்தலத்திலிருந்து இரண்டரை கிலோமீற்றர் பகுதியை அமைதி வலயமாக்குவ தாக பகிரங்க உறுதிமொழி கிடைத்தால் மட் டுமே மடுமாதா சிலை மீண்டும் மடுவிற்கு கொண்டுவரப்படும் என மன்னார் மறை மாவட்ட ஆயர் அதி வண.ராயப்பு ஜோசப் அடிகளார் தெரிவித்தார்.

அதேநேரம், மடுமாதா தேவாலயப்பகுதியின் நிலைமையை நேரில் கண்டறிந்துவர குரு முதல்வரை அனுப்பி வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மடுமாதா தேவாலயம் தொடர்பாக ஆயர் மேலும் கூறியதாவது:

மடுமாதா தேவாலய பகுதியில் இருந்து புலிகள் வாபஸ் பெற்றுவிட்டனர். இதன்பின்னர் படையினர் அங்கு சென்றிருப்பதாக எனக்கு அறிவிக்கப்பட்டது. நிலைமையை நேரில் கண்டறிந்து வருவதற்கு நேற்று குருமுதல்வர் விக்டர் சோசையை அனுப்பி வைத்துள்ளேன்.

மடு மாதாவின் திருச்சொரூபத்தை மீண்டும் தேவாலயத்திற்கு கொண்டு வருமாறு எவரும் எம்மிடம் கோரிக்கை விடுக்கவில்லை. மாதாவின் திருச்சொரூபத்தை மீண்டும் கொண்டு வந்து தேவாலயத்தில் வைப்பதில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை.

மடுமாதா தேவாலயத்தை சுற்றிவர இரண்டரை கிலோ மீற்றரை அமைதி வலயமாக பிரகடனப்படுத்துமாறு படையினரிடமும், புலிகளிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளோம். இதனை ஏற்றுக்கொண்டதாக இரு தரப்பினரும் பகிரங்கமாக உறுதிமொழி அளிக்க வேண்டும்.

குறித்த அமைதி வலயத்தில் எவரும் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. இவ்வாறான பகிரங்க உறுதிமொழி கிடைக்கும் பட்சத்தில் திருச்சொரூபத்தை மடுமாதா தேவாலயத்திற்கு கொண்டு வந்து திருநிலைப்படுத்த முடியும் என ஆயர் மேலும் தெரிவித்தார்.

No comments: