Friday, April 4, 2008

புஷ்சுக்கு நான் அனுப்பிய லட்டு என்னாச்சு?

"புஷ்சுக்கு நான் அனுப்பிய லட்டு என்னாச்சு?": தகவல் கேட்டு மனித உரிமை கமிஷனுக்கு விண்ணப்பம்

"ரக்ஷா பந்தன் தினத்தன்று, அமெரிக்க அதிபர் புஷ்சுக்கு லட்டுகள் அனுப்பி இருந்தேன். ஆனால், அது அவருக்கு சென்றடையவில்லை. இது எனது உரிமையை பறிக்கும் செயல். எனவே, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்ன நடவடிக்கை என்பதை எனக்கு தெரிவிக்க வேண்டும்!' உ.பி.,யில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து, தேசிய மனித உரிமைக் கமிஷனுக்கு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஒரு இளம் பெண் அனுப்பியுள்ள விண்ணப்பம் இது.

இப்படியெல்லாம் விண்ணப்பங்கள் வந்தால், மனித உரிமைக் கமிஷன், பாவம், என்ன தான் செய்யும் என்று அங்கலாய்க்கின்றனர் பணியாளர்கள். தேசிய மனித உரிமைக் கமிஷனில் பணியாற்றுவோர் எண்ணிக்கை 300. ஒவ்வொரு நாளும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 20 விண்ணப்பங்களாவது வருகின்றன. குவியும் விண்ணப்பங்களுக்கு, குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் தகவல் திரட்டி அனுப்ப பணியாளர்கள் திண்டாடுகின்றனர். இவற்றில் பல விண்ணப்பங்கள், பயனற்ற தகவல்களை கேட்டு அனுப்பப்படுகின்றன."ஒவ்வொரு துறையிலும் எத்தனை ஊழியர்கள் உள்ளனர்' என்று கேட்டு இன்னொரு விண்ணப்பம்.

"இது தொடர்பான தகவல்களை திரட்டி, பதில் அனுப்பப்பட்டுவிட்டது. ஆனால், இந்த தகவல்களால், விண்ணப்பிப்போருக்கு என்ன பயன்?' என்கிறார் ஒரு அதிகாரி.இது மட்டுமின்றி, கன்னடம், தெலுங்கு போன்ற மாநில மொழிகளில் விண்ணப்பிப்பதால், மொழிப் பிரச்னையில் பணியாளர்கள் திண்டாடுகின்றனர்.இது இப்படி என்றால், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பது தான் சிலருக்கு பொழுதுபோக்காகவே மாறி விட்டது. ஒரிசாவை சேர்ந்த பகம்பர் பட்நாயக், புனேயை சேர்ந்த ராம்முரத் திவிவேதி, ஐதராபாத்தை சேர்ந்த ஷியாம் பிரசாத் போன்றவர்களின் பெயர்கள் மனித உரிமைக் கமிஷன் பணியாளர்களுக்கு மனப்பாடம்.ஷியாம் பிரசாத், கடைசியாக அனுப்பியுள்ள விண்ணப்பத்தில், 31 கேள்விகளுக்கு பதில் கேட்டுள்ளார். "மனித உரிமைக் கமிஷன் இவ்வாண்டில் செலவிட்ட தொகை எவ்வளவு; எத்தனை கருத்தரங்குகள் நடத்தப்பட்டுள்ளன;

எத்தனை புகார்கள் வந்துள்ளன, அவற்றில் எத்தனை தீர்க்கப்பட்டுள்ளன' என்பது போன்ற கேள்விகளை கேட்டுள்ளார். இதனால், அவருக்கு என்ன பயன் என்ற எரிச்சலுடன் தகவல்களை சேகரித்து அனுப்பி வைத்தது மனித உரிமைக் கமிஷன்."மனித உரிமைக் கமிஷன் தொடர்பான அனைத்து தகவல்களும் இணையதளத்தில் அன்றாடம் புதுப்பிக்கப்பட்டு வந்தாலும், இது போன்ற விண்ணப்பங்கள் மூலம் தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற துஷ்ட எண்ணம் கொண்டவர்களும் இருக்கின்றனர்' என்று புலம்புகிறார் இன்னொரு பணியாளர்.

தினமலர்

No comments: