Friday, April 4, 2008

சர்தாரி முடித்த பட்டப்படிப்பு

லண்டனில் சர்தாரி முடித்த பட்டப்படிப்பு : எங்கு தேடியும் கல்லூரியை காணோம்


இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தேர்தலில், போட்டியிட குறைந்த பட்சம் இளநிலை பட்டப் படிப்பு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். சர்தாரி, லண்டனில் உள்ள "பெடின்டன்' வர்த்தகவியல் கல்லூரியில், பி.எட்., பட்டம் பெற்றிருப்பதாக கூறியுள்ளார். ஆனால், அப்படி ஒரு கல்வி நிறுவனமே இல்லை என்பது தான் சுவாரஸ்யம்.

பாகிஸ்தானில், 2002ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்ட போது, போட்டியிடுவதற்கு குறைந்த பட்ச கல்வித் தகுதியாக, இளநிலை பட்டப்படிப்பை நிர்ணயித்து, அதிபர் முஷாரப், புதிய சட்டம் கொண்டு வந்தார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர், மறைந்த பெனசிர் புட்டோவை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே, பிரிட்டனுக்கு சென்றார் ஆசிப் அலி சர்தாரி. 1970ம் ஆண்டுகளில், "லண்டன் ஸ்கூல் ஆப் பிசினஸ் ஸ்டடீஸ்' என்ற கல்லுõரியில் இளநிலை பட்டப்படிப்பு பாடப்பிரிவில் சேர்ந்தார். ஆனால், அந்த படிப்பை முழுமை செய்யவில்லை என்று கூறப் படுகிறது. தனது சுயசரிதை புத்தகத்தில், "லண்டன் பெனிட்டன் ஸ்கூல்' என்ற வர்த்தகவியல் கல்லூரியில் படித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், லண்டனில் இந்த பெயரில் கல்வி நிறுவனம் ஒன்று, இருந்ததாகவோ, இருப்பதாகவோ ஆதாரம் இல்லை.

இது தொடர்பாக சர்தாரியிடம் கேட்ட போது, "நான் இளநிலை பட்டதாரி தான். பி.எட்., பட்டப்படிப்பு படித்ததாக நினைக்கிறேன். அதன் சான்றிதழைக் கூட பார்த்தது, நன்றாக நினைவிருக்கிறது' என்றார். இருப்பினும், "பட்டப்படிப்பு சான்றிதழ் என்பது தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒரு தடையாக இருக்காது' என்று நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே, இணையதளங் களில், "திருவாளர் 10 சதவீதம்' என்று கிண்டல் செய்யப்பட்டு வருபவர் சர்தாரி. படுகொலை செய்யப்பட்ட பெனசிர் புட்டோ, இரண்டாவது முறை யாக, பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்த போது, சர்தாரிக்கு 10 சதவீத கமிஷன் தொகை அளிக்கப்பட்டு வந்ததாக கூறப்படும் குற்றச் சாட்டால் தான், இந்த கிண்டல் பெயர். இப்போதும், இணையதள குறும்புக் காரர்கள் சர்தாரியை கிண்டல் செய்ய தவறவில்லை.

"நான் பட்டப்படிப்பு முடித்தவன் தான்; ஆனால், எந்த கல்லூரியில், எப்போது படித்தேன் என்பது தான் நினைவில்லை' என்று சர்தாரி கூறுவதைப் போல, கார்ட்டூன் போட்டு, கிண்டலடித்துள்ளனர்.

தினமலர்

No comments: