Monday, April 21, 2008

பிரியங்கா நளினி சந்திப்பு...'சமாதான' சிக்னல்?

பிரியங்காவின் தமிழக விஸிட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் தமிழ்ச்செல்வன் மறைவுக்கு "இரங்கல் பா" எழுதிய முதல்வருக்கு கண்டனம்; தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் நடமாட்டத்தை அடக்க வேண்டும்" என்றெல்லாம் அனல் பறக்கும் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் தமிழக காங்கிரஸ் தலைவர்கள். இந்த நேரத்தில் வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் நளினியை பிரியங்கா சந்தித்தார் என்ற செய்தி, காங்கிரஸ்காரர்களைக்கூட டென்ஷன் ஆக்கியுள்ளது.

ஆனால் "பிரியங்கா- நளினி' சந்திப்பின் பின்னணியில் மூன்று முக்கியக் காரணங்கள் இருக்கின்றன என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.முதல் காரணம் இது! ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகளில் நளினியும் ஒருவர். அவருக்கு சோனியா காந்தி காட்டிய கருணையால் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.தற்போது வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, ஆயுள் தண்டனைக் காலமான 14 வருடங்களை ஜெயிலில் முடித்துவிட்டார்.

இந்நிலையில் நன்னடத்தை அடிப்படையில் அவரை விடுதலை செய்வதற்கான முயற்சிகளை அவரது வழக்கறிஞர்கள் மேற்கொண்டார்கள்; சிறைத் துறை அதிகாரிகளிடமும் இது பற்றி பேசியுள்ளார்கள். ஆனால் தமிழக சிறைத்துறை அதிகாரிகளோ, ""ராஜீவ் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது.ஆகவே ஆயுள் தண்டனையான 14 வருடத்தை முடித்துள்ள நிலையில் நளினியை விடுதலை செய்ய வேண்டும் என்றால் மத்திய அரசுதான் அனுமதி கொடுக்க வேண்டும். மாநில அரசின் கையில் ஏதும் இல்லை'' என்று கைவிரித்துவிட்டதாகத் தெரிகிறது.

இரண்டாவதாக, இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தலுக்கான முஸ்தீபுகள் படு தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. முன்னாள் துணை பிரதமர் அத்வானியை பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளது பா.ஜ.க.அதை தேசிய ஜனநாயக் கூட்டணிக் கட்சிகளும் ஏற்றுக் கொண்டு விட்டன. இந்நிலையில், "காங்கிரஸின் பிரதமர் வேட்பாளர் யார்?' என்ற கேள்வியை எதிர்க்கட்சிகளே இப்போது கேட்கத் தொடங்கி விட்டன.

இந்தக் கேள்விக் கணைகளைச் சமாளிக்க, "ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக இருப்பதற்கு நூற்றுக்கு நூறு சதவீதம் தகுதி படைத்தவர்' என்று மூத்த காங்கிரஸ் அமைச்சரான அர்ஜூன் சிங் ஆரம்பித்தார்.பிறகு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், "சோனியா காந்தியோ, ராகுல் காந்தியோ பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை' என்று அறிவித்தார்."ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் மகிழ்ச்சியே' என்றார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. அர்ஜூன்சிங்கின் கருத்தை பிரணாப் முகர்ஜியும் வழி மொழிந்தார்.

மூன்றாவதாக இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தினமும் 50 புலிகள் செத்தார்கள்; 100 புலிகள் சுடப்பட்டார்கள் என்றெல்லாம் இலங்கை ராணுவம் கணக்கு சொல்லிக் கொண்டிருக்கிறது.ஒரு கட்டத்தில் இந்தியா மீதுகூட பிரபாகரன் சீறிப் பாய்ந்து அறிக்கை வெளியிட்டார். இந்த மோதலில் இந்தியா அமைதியாக இலங்கை பக்கமாக நின்று, "புலிகளை அழிக்கட்டும்' என்ற ரீதியில் வேடிக்கை பார்க்கிறது என்ற கோபம் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் மத்தியில் இருக்கிறது.

இந்தக் கோபம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக "ரா' போன்ற அமைப்புகளே எச்சரித்துள்ளதாக உளவுத்துறை வட்டாரத் தகவல்.இப்படிப் பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளின் மத்தியில் நளினியை சென்ற மாதம் 19ஆம் தேதி வேலூர் வந்து சந்தித்துள்ளார் பிரியங்கா. முதலில் நளினியைப் பார்க்க வேண்டும் என்று நினைத்த பிரியங்கா, மத்திய உளவுத்துறை அதிகாரிகள் மூலம் அதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.அந்த அதிகாரிகளும் மாநில அரசுக்கோ, மாநில உளவுத்துறைக்கோ எந்தத் தகவலும் சொல்லாமல் நேரடியாக வேலூர் சிறையில் உள்ள சூப்பிரண்டுடனேயே தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார்கள். ஆனால் அனுமதி கொடுப்பதில் திடீரென்று ஒரு சட்ட சிக்கல் எழுந்திருக்கிறது.

இது பற்றி நம்மிடம் பேசிய சிறைத்துறை அதிகாரி ஒருவர், ""எங்கள் சிறைத்துறை விதிகளின்படி பார்வையாளர்களை அனுமதிக்கும் விஷயத்தில் கண்காணிப்பாளருக்குத்தான் முழு அதிகாரம் இருக்கிறது. அவர் விருப்பப்பட்டால் உயரதிகாரிகளுக்குச் சொல்லலாம். இல்லையென்றால் அவர் மட்டத்திலேயே முடிவு எடுத்துக் கொள்ளலாம்.ஆனால் சிறைத் துறை விதிகளில் கைதிகளின் "உறவினர்கள்' சிறைக்கு வந்து பார்க்கலாம் என்று இருந்தது. பிறகு அதை "உறவினர்கள் மற்றும் நண்பர்கள்' என்று மாற்றினார்கள்.

ஆகவே பிரியங்கா நளினியைப் பார்க்க வேண்டும் என்று செய்தி அனுப்பியதும் சிறைத்துறைக் கண்காணிப்பாளரே முடிவு செய்து அவரை அனுமதித்திருக்கலாம்'' என்று பூடகமாகப் பேசினார்.

உடனே குறுக்கிட்ட நாம் அந்த அதிகாரியிடம், ""அது சரி... பிரியங்கா நளினிக்கு "உறவினரா'? அல்லது "நண்பரா?' அதை எப்படி உயரதிகாரிகளிடம் ஆலோசிக்காமல் சிறைத்துறை கண்காணிப்பாளர் முடிவு செய்திருப்பார்?'' என்று கேட்க, ""இந்த மாதிரி வம்பு பிடித்த கேள்விகள் எல்லாம் என்னிடம் கேட்காதீர்கள்'' என்று ஜகா வாங்கிக் கொண்டார் அந்த அதிகாரி.

வேலூர் மகளிர் சிறை கண்காணிப்பாளராக இருக்கும் ராஜசவுந்தர்யா, முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவருக்கு நெருங்கிய உறவினராம். அந்த வகையில் சட்ட நுணுக்கங்களைத்தெரிந்து, தனக்கே உள்ள விசேஷ அதிகாரத்தின் கீழ் நளினியை சந்திக்க பிரியங்காவிற்கு அனுமதி அளித்துள்ளார் என்று செய்திகள் உலா வருகின்றன.

ஆனால் இந்தச் சந்திப்பை மாநில உளவுத்துறை சார்பில் வேலூரில் உள்ள அதிகாரிகள் சிலர் கண்டுபிடித்து விட்டார்களாம். ஆனாலும் பிரியங்காவுடன் வந்த மத்திய உளவுத்துறை அதிகாரிகள், ""இதை நியூஸ் ஆக்க வேண்டாம். சிறைத்துறை ஏ.டி.ஜி.பி.க்குக் கூட சொல்ல வேண்டாம்.

ஏனென்றால் இது பாதுகாப்பு சம்பந்தப்பட்ட சென்ஸிட்டிவான விஷயம்'' என்று கூறவே, அந்தச் செய்தியை வெளியில் கசிய விடாமல் அமைதி காத்தது மாநில உளவுத்துறை.

நளினியை சந்தித்தது குறித்துப் பேசியுள்ள பிரியங்கா, ""வன்முறை, கோபம், வெறுப்பு ஆகியவற்றில் எனக்கு எப்போதுமே நம்பிக்கை இல்லை'' என்று சொல்லியுள்ளார்.

- தமிழன் எக்ஸ்பிரஸ்

No comments: