Friday, April 4, 2008

கண்ணின் கருவிழியை பார்த்து வயதை சொல்லி விடலாம்

லண்டன்: கண்ணின் கருவிழியை ஆய்வு செய்து, ஒருவரின் வயதை நிர்ணயிக்கும் தொழில்நுட்பத்தை டென்மார்க் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தடயவியல் விஞ்ஞானி நைல்ஸ் கூறியதாவது: கண்ணின் கருவிழியில், "கார்பன் 14 ஐசோடோப்' பிறக்கும் போதே உருவாகிறது. ஒரே மூலகத்தில் உள்ள அணுக்களில் அமையும் மாறுபாடு கொண்ட தனிமம் "ஐசோடோப்' ஆகும். பிறக்கும் போது எப்படி அமைகிறதோ, இதே போல, இறக்கும் வரை இதன் தனித்தன்மை மாறாது. இது பல்லிலும் அமைந்து இருக்கிறது.

"கார்பன் 14 ஐசோடோப் : இந்த "ஐசோடோப்'பை ," ரேடியோ கார்பன் டேட்டிங்' என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆய்வு செய்து, ஒருவரின் வயதைக் கண்டுபிடித்து விடலாம். இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 13 பேரின் வயதைக் கண்டுபிடித்துள்ளோம். மாதங்கள் வேண்டுமானால் மாறுபடுமேத் தவிர, ஆண்டுக் கணக்கு மாறாது. பூமியின் வளி மண்டலத்தில், "கார்பன் 14' அளவு 1950ம் ஆண்டுகள் வரை மிகக் குறைவாக இருந்தது. இதன்பிறகு, அமெரிக்காவும், ரஷ்யாவும், அணுகுண்டு சோதனை நடத்தின. இதனால், வளி மண்டலத்தில், "கார்பன் 14' அளவு அதிகரித்தது. சோதனைக்குத் தடை விதிக்கப்பட்டு பல ஆண்டுகள் கழித்தே "கார்பன் 14' அளவு குறையத் தொடங்கியது.வாயு மண்டலத்தில், "கார்பன் 14' அளவை, விஞ்ஞானிகள், ஆண்டுதோறும் குறித்து வருகின்றனர். கண்ணின் கருவிழியில், "கார்பன் 14 ஐசோடோப் ' அளவு எவ்வளவு உள்ளது என்பதைக் கண்டுபிடித்து, அத்துடன், வளி மண்டலத்தில் உள்ள கார்பனுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, ஒருவர் எந்த ஆண்டு பிறந்தார் என்பது தெரிந்து விடும். இதன் மூலம் அவரது வயதை கணக்கிட்டு விடலாம். இவ்வாறு விஞ்ஞானி நைல்ஸ் கூறினார்.

No comments: