இலங்கை, இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சரத்பொன்சேகா, கடந்த வார முற்பகுதியில் கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில், உள்ளடக்கப்பட்ட முக்கிய செய்தி ஒன்றை, நாம் எமது (Online) வாசகர்களாகிய உங்களுக்கு கடந்த வாரம் வழங்கி இருந்தது ஞாபகம் இருக்கும்! .
அந்த செய்தியை ஆதாரமாக கொண்டு, யாழ். போர் முன்னரங்குகளில் பூதாரமாக வெடித்து பிசுபிசுத்துப்போன மும்முனைச் சமரை ஆய்வுக்குட்படுத்துவோம் . தளபதி சரத் பொன் சேகா ,அன்று வழங்கி இருந்த அந்த செய்தி :
இம் மாத முற்பகுதியில், கம்பஹா வெலிவேரிய பகுதியில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைத் தாக்குதலுடன், சர்வதேச சமூகம் ஜனாதிபதியையும், பிரதமரையும் மீண்டும் புலிகளுடன் பேச்சு வார்த்தையை ஆரம்பிக்கும் படி வலியுறுத்தி இருந்தது . ஆனால் ஜனாதிபதியோ, பிரதமரோ , சர்வதேசத்தின் வாய்க்கு பூட்டு போடும் விதத்தில், நாம் முன்வைத்த காலை பின்வைக்கமாட்டோம் என அழுத்தி தெரிவித்திருந்தனர்.
தற்போது,, வன்னிப்போர் அரங்குகளான வவுனியா, மன்னார், மணலாறு ஆகிய பகுதிகளில்,முன்னெடுக்கப்பட்டு வரும் படை நடவடிக்கைகள் போல் அல்லாமல், வடக்கு, இதுவரை சந்தித்திராத சடுதியான பெரும் படை நகர்வொன்றை, யாழ், முன்னரங்குகளில் விரைவில் மேற்கொள்வோம் என இறுமாப்போடு தெரிவித்திருந்த செய்தி, புலிகள் காதுகளை விரைவாக எட்டி இருக்கும் . செய்தி புலிகளின் காதுகளில் எட்டியதும், யாழ் களமுனைகளில் புலிகள் அதி உச்ச தயார் நிலைகளில் பதுங்கி இருந்திருப்பர் என்பது திண்ணம்!
இதேவேளை, கடந்த செவ்வாய்கிழமை தளபதி சரத் பொன்சேகா, யாழ், பாலாலிப்படைத் தளத்திற்கு வந்திருந்ததாக குடாநாட்டுப் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி இருந்தன. அன்றைய தினம் முகமாலை முன்னரங்கில், புலிகளின் நிலைகள் மீது இராணுவத்தினரின் 53 மற்றும் 55 ஆவது டிவிசன்களை சேர்ந்த சிறப்புப் பயிற்சி பெற்ற கவசப் படையணி காலை 9.30 மணியளவில் தாக்குதலை ஆரம்பித்ததாகவும், அந்த தாக்குதல் இரு தரப்புக்குமிடையில் 30 நிமிட நேரம் மாத்திரமே நீடித்ததாகவும், இந்த சமரில் இராணுவ கவசம் படைப்பிரிவின், சீனத் தயாரிப்பான YW எனப் பெயரிடப்பட்ட T.89ரக பீரங்கி பொருத்தத்தப்பட்ட கவசவண்டி தாக்கப்பட்டதாகவும், விடுதலை புலிகள் அறிவித்திருந்தனர்.
ஆனால், இச் சமர் குறித்த எந்த விபரத்தையும் படைத்தரப்பு அன்றைய தினம் வெளியிடவில்லை என்பது தந்திர மர்மம்.இந் நிலையில் இச் சமரை யாழ், முன்ரங்கில் புதிய களமுனைத்திறப்புக்கான ஒத்திகை நகர்வாக கணிப்பதோடு குடா நாட்டுக்கான சரத் பொன்சேகாவின் திடீர் வரவையும் சமரோடு தொடர்புபடுத்துவது முக்கியத்துவம்.
தளபதி சரத் பொன்சேகா புதிய தாக்குதலுக்கான புதிய வியூகங்களை வகுத்து கொடுத்து நகர்வை ஆரம்பித்து வைத்திருப்பது போல இதிலிருந்து ஊகிக்க முடிகிறது . இதற்கு ஏற்றால் போல் மறுநாள் அதிகாலை 2.30 மணியளவில் யாழ், முன்னரங்கில் நிறுத்தப்பட்டுள்ள 53 மற்றும் 55 ஆவது படையணிகள் (A-9) வீதிக்கு மேற்கே கிளாலி முதல் (A-9) வீதிக்கு கிழக்கே முகமாலை கண்டல் வரையான சுமார் 7 கிலோமிற்றர் நீளமுள்ள பகுதியில் விடுதலைப் புலிகளின் முன் நிலைகளை அழித்து முன்னேறுவதற்ற்கான பெரும் சமரை ஆரம்பித்திருந்தனர்.
விசேட பயிற்சி பெற்ற கவச படைபிரிவின் ஒத்துழைப்பு , பின் படைத்தள சூட்டாதரவு என்பனவற்றுடன் முன்னெடுக்கப்பட்ட இப் பாரிய படை நகர்வை விடுதலைப் புலிகள் வெற்றிகரமாக முறியடித்து படையினரை பழைய நிலைகளுக்கு பின் தள்ளியதாகவும் அறிவித்திருந்தனர். அதிகாலை 2.30 முதல் மதியம் 1.00 மணி வரை 10 மணி நேரங்கள் சமர் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்திருக்கும் புலிகள் கடும் தாக்குதல் நடத்தி படையினரை பின்தளங்களுக்கு நகர்த்தியதாக குறிப்பிட்டுள்ளமை ஏற்கனவே புலிகள் யாழ், முன்நிலைகளில் படையினரின் புதிய நகர்வுகளை எதிர்கொள்வதற்கான தயார் நிலையில் இருந்திருப்பதை கோடிட்டு காட்டுகிறது .
இப்பாரிய படைநகர்வுக்கு கிடைத்த பின்நடைவு புலிகளது கெரில்லா போர் பொறிமுறையோடு , அதன் மரபு படையணியின் வளர்ச்சியையும் உலகப்பார்வைக்கு கொண்டு வருகிறது .
இச் சமர் குறித்த சேத விபரங்களை படைத்தரப்பே முதலில் வெளியிட்டது. இதிலிருந்து இது வரை இடம் பெற்றிராத பெரும் போர் யாழ், முன்னரங்கில் இடம் பெற்றுள்ளமை உறுதி செய்யப்படுகிறது.
கொல்லப்பட்ட படையினரின் எண்ணிக்கை 15 ல் இருந்து படிப் படியாக உயர்ந்து இறுதியில் 100 க்கு மேற்பட்டவர்கள் என்பது போல அரசு தரப்பு மறைமுகமாக ஒப்புக்கொண்டுள நிலையில் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் தகவல்களின் படி புலிகள் தரப்பில் 55 பேர் கொல்லப்பட்டும் ,90 க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து அன்றிரவு புலிகளின் படைத்துறை பேச்சாளர் இராசையா இளந்திரையன் BBC சந்தேசிய சிங்கள சேவைக்கு வழங்கிய பேட்டியில் இராணுவத்தில் சுமார் 100 பேர் வரை கொல்லப்பட்டும் 400 க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். அத்தோடு புலிகளின் பிந்திய வெளியீடுகள் இச் சமர் குறித்த பல விடயங்களை வெளியிடுவதாகவும் அமைகிறது. படைக்கலங்கள் பல அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவை குறிப்பிடுகின்றன.
இதேவேளை இராணுவம், குடா நாட்டை கைப்பற்றுவதற்கு புலிகள் இப்பகுதிகளில் சண்டையை ஆரம்பித்ததாகவும், அப்போது இடம் பெற்ற சண்டையில் தாம் புலிகளின் முன் நிலைகளை கைபற்றியதாகவும் தெரிவித்திருந்தது.
அத்தோடு, இராணுவ ஆய்வாளர்களின் கருத்தும் படைத்தரப்பு யாழில், எதிர்பாராத இழப்புகளை சந்தித்துள்ளது போலவே உள்ளது. இந்நிலையில், யாழ், முன்னரங்கில் படையினரின் பாரிய திட்டம் பலிக்கவில்லை என்பது உண்மையாவதோடு யாழில் படையினரின் புதிய நகர்வுக்கு விழுந்த பேரிடி, எதிர்கால படை நடவடிக்கைகளை குழப்பும் வித்தில் அமைவதாக பலராலும் நோக்கப்படுகிறது.
இதன் மூலம் முதற்கோணல் முற்றும் கோணல் என்பது நிரூபணமாகிறது .ஏற்கனவே களமுனைகளில் குழப்பத்தில் இருக்கும் படையினரை இச் சமர் மேலும் குழப்பத்துக்குள் தள்ளிவிடுவதாகவே நோக்கலாம்.இவற்றுக்கிடையே, வட போர் முனையில் பல மாதங்களாக வெற்றிகளின்றி தொடரும் போர் இலங்கை அரசையும் படையினரையும் மிகவும் ஆபத்தான நிலை நோக்கி நகர்த்திக்கொண்டிருப்பதை சர்வதேச சமூகம் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கும் நிலையில்,முடிவின்றி நகரும் போர்
தொடர்ந்து, களமுனைகளில் புலி அழிப்புக்காக காத்திருக்கும் படையினர் மத்தியில் மனோரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, படை முன்னெடுப்புகளில் அசதிகளையும் ஏற்படுத்தலாம்! அத்தோடு எதிர்காலத்தில் புலிகள் தற்போது கைக்கொள்ளும் தற்காப்பு தாக்குதல் யுக்தியை மாற்றி படை நிலைகளை வலிந்து தாக்கும் போது படையினரின் கள முனைகள் ஆட்டம் காணக்கூடும்! எனவும் இராணுவ ஆய்வாளர்கள் எதிர்வுகூறும் இத் தருணம் இந்நிலை,
இலங்கை அரசியலில் எதிர்காலத்தில் எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தும் என்பது நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும்!
வீரகேசரி
Saturday, April 26, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment