மடுவிலிருந்து திருச்சொரூபத்தைக் கொண்டு சென்றமை அரசுக்கு கொடுத்துள்ள பெரும் ஏமாற்றம்
வடக்கே அடைமழை நின்று விட்டதால் மீண்டும் கடும் சமர் ஆரம்பமாகியுள்ளது. மடுவைக் கைப்பற்றி விடும் முயற்சியில் அரசும் படையினரும் தீவிரம் காட்டினர். ஆனால் மடுதேவாலயத்திலிருந்து திருச்சொரூபம் வேறிடத்திற்கு மாற்றப்பட்டு விட்டதால் அரசு மடுவைக் கைப்பற்றும் முயற்சியைத் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மடுவைக் கைப்பற்றுவதென்பது இராணுவ இலக்காக இருக்கவில்லை. ஆனால் அரசியல் நோக்கங்களுக்காகவே மடுதேவாலயத்தை கைப்பற்றிவிட வேண்டுமென அரசு தீவிர அக்கறை காட்டியது. இராணுவ ரீதியில் மடுவோ அல்லது தேவாலயப் பகுதியோ கேந்திர முக்கிய பகுதிகளல்ல. ஆனால் மடுத் தேவாலயத்தை கைப்பற்றுவதன் மூலம் மிகப்பெரிய அரசியலை நடத்த அரசு திட்டமிட்டிருந்தது.
`மடுவுக்கு இன்று தென்பகுதியிலிருந்து பக்தர்கள் செல்ல பிரபாகரனின் அனுமதியைப் பெற வேண்டும். விரைவில் அந்த நிலையை மாற்றி மடுவுக்கு பக்தர்கள் செல்ல எவரது அனுமதியையும் பெற வேண்டிய தேவையில்லை என்றதொரு நிலையை உருவாக்குவோம்' என அண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சூளுரைத்திருந்தார். இதன் மூலம் மடுவைக் கைப்பற்றி அதன் மூலம் பெரும் அரசியல் இலாபம் தேட அரசு முனைவது வெளிப்படையாகத் தெரிந்தது.
கிழக்கில் படை நடவடிக்கைகளை முடித்த பின் வடக்கே அரசு பாரிய படை நடைவடிக்கைகளை ஆரம்பித்த போது, படையினரின் முதல் இலக்கு புலிகள் வசமிருந்து மடுப் பிரதேசத்தை கைப்பற்ற வேண்டுமென்பதேயாகும். இதற்காக 57 ஆவது படையணி மடுவை நோக்கி கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் பாரிய படை நகர்வை ஆரம்பித்திருந்தது. மடுவைநோக்கிய படைநகர்வு ஆரம்பமானபோது, படையினர் மடுவிலிருந்து சுமார் எட்டு கிலோமீற்றர் தூரத்தில் நிலைகொண்டிருந்தனர். கடந்த ஒரு வருடத்தில் அவர்களால் சுமார் ஆறு கி.மீ.தூரம் வரையே நகர முடிந்தது. தற்போது அவர்கள் மடுவுக்கு தெற்கே சுமார் 2 கி.மீ தூரத்தில் நிலைகொண்டு பாரிய முன்நகர்வு முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் முன்னைய அரசுத் தலைவர்களைப் போன்று பௌத்த சிங்கள ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டுமென்பதில் முனைப்புடன் செயற்படுபவர். மடுவை மீட்பதன் மூலம் தெற்கிலுள்ள கிறிஸ்தவ சிங்கள மக்களின் மதிப்பை பெற்றுவிட வேண்டுமென்பதில் தீவிரம் காட்டினார். இதனால் தான் வடக்கே பாரிய படைநகர்வு ஆரம்பமானபோது, இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளைக் கைப்பற்றுவதை விட அரசியல் இலாபம் நிறைந்த பகுதியைக் கைப்பற்றிவிட வேண்டுமென்பதில் அரசு தீவிர கவனம் செலுத்தியது.
அரசின் இந்த நோக்கத்தை புலிகளுமறிவர். அதேபோல் கத்தோலிக்க குருமார்களும் அறிந்திருந்தனர். இதனால் தான் மடுதேவாலயப் பகுதியை பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்துமாறு மன்னார் ஆயரும் மதகுருமார்களும் தொடர்ச்சியாக விடுத்து வந்த வேண்டுகோளை அரசோ படைத்தரப்போ ஏற்றுக் கொள்ளவில்லை. எப்படியாவது மடு தேவாலயச் சுற்றாடலை கைப்பற்றி விடவேண்டுமென்பதே அரசினதும் படையினரதும் குறியாக இருந்தது.
அதேநேரம், மடுதேவாலயப் பகுதியைக் கைப்பற்றிய பின்னர் அதனைப் பாதுகாப்புப் பிரதேசமாகப் பிரகடனப்படுத்தி விடுதலைப் புலிகள் மீண்டும் அப்பகுதியைக் கைப்பற்றாதவாறு செய்ய வேண்டுமென்பதே அரசினதும் படையினரதும் நோக்கமாகும்.
வடக்கே அரசு ஆரம்பித்த பாரிய படை நடைவடிக்கையை அடுத்து மடுதேவாலயப் பகுதிக்கு தென்பகுதிப் பக்தர்களால் செல்ல முடியாத நிலையேற்பட்டுள்ளது. இது அவர்கள் மத்தியில் பெரும் குறையாக இருக்கும் அதேநேரம், மடுவைக் கைப்பற்றுவதன் மூலமே இந்தக் குறையை நீக்க முடியுமெனவும் இல்லையேல் அவர்களது கோபம் அரசின் பக்கமே திரும்புமெனவும் அரச தரப்பினர் நன்குணர்ந்திருந்தனர்.
இந்த நிலையில் மடுவை நோக்கி அரசும் படைத்தரப்புமே பாரிய படை நடைவடிக்கையை ஆரம்பித்தன. அரசும் படைத்தலைமையும் எதிர்பார்த்தது போல் மடுவை நோக்கிய படைநகர்வு அமையவில்லை. விடுதலைப் புலிகளின் கடும் எதிர்ப்பால் படையினர் பலத்த இழப்புக்களையும் பெரும் பின்னடைவுகளையும் சந்தித்தனர்.
மடுவை நோக்கி நேராக நகர்ந்து செல்ல முயல்வது பலத்த இழப்புகளை ஏற்படுத்துமென்பதை படையினர் உணர்ந்தனர். இவ்வாறானதொரு படை நகர்வை புலிகளும் அனுமதிக்கப்போவதில்லையென்பதை கடந்த ஒரு வருட காலத்தில் அரசும் படைத்தரப்பும் உணர்ந்தன. இதனால்தான் மடுவை நோக்கிய நேரடி நகர்வைக் கைவிட்டு அதனைச் சுற்றி வளைத்துச் சென்று கைப்பற்ற முனைந்தனர்.
அதிலும் அவர்கள் பலத்த எதிர்ப்பையும் பின்னடைவையும் சந்திக்க வேண்டியிருந்தது. வடக்கே கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் பாரிய படைநகர்வு ஆரம்பிக்கப்பட்ட போதும் இதுவரை எந்தவித பாரிய வெற்றியையும் அரசோ படைத்தரப்போ பெறவில்லை. இதனால் வடக்கே பாரிய வெற்றியைப் பெறவேண்டிய அவசரமும் அவசியமும் ஏற்பட்டுள்ளது. எனினும், அண்மையில் இரு வாரம் பெய்த அடை மழையால் படைநடைவடிக்கைகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன. பாரிய படைநகர்வுகளுக்காக மேலும் இருவாரம் காத்திருக்க வேண்டியநிலையேற்பட்டது. இதனால் சுமார் ஒருமாதகாலம் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான் மடுவை எப்படியாவது கைப்பற்றி விடவேண்டுமென்ற நோக்கில் கடந்த திங்கட்கிழமை படையினர் தங்கள் தாக்குதலை தீவிரப்படுத்தினர். பாரிய முன்நகர்வு முயற்சியை மேற்கொண்டபோதும் அதனைப் புலிகள் முறியடித்து விடவே மடுவை நோக்கி கடும் ஷெல் தாக்குதலையும் மோட்டார் தாக்குதலையும் மேற்கொண்டனர். ஷெல்களும் மோட்டார் குண்டுகளும் மடுதேவாலயத்தை அண்டிய பகுதிகளில் வீழ்ந்து வெடிக்கவே தேவாலயத்திற்கு சேதங்கள் ஏற்படத் தொடங்கியது.
விடுதலைப் புலிகளே மடுதேவாலயத்தை நோக்கி ஷெல் தாக்குதலை நடத்தி விட்டு படையினரே அந்தத் தாக்குதலை நடத்துவதாகப் பழிபோடுகிறார்களென படைத்தரப்புக் கூறியது. புலிகள் இதனை முற்றாக மறுத்த அதே நேரம், மடுவிலிருந்து சுமார் 2 கி.மீ தூரத்தில் பண்டிவிரிச்சான் பகுதியில் படையினர் நிலை கொண்டிருப்பதாகவும் அங்கிருந்தே தேவாலயப் பகுதியை நோக்கி ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் மன்னார் ஆயர் வண. இராயப்பு ஜோசப் பி.பி.சி.க்குத் தெரிவித்தார்.
அத்துடன் தேவாலயம் நோக்கிய ஷெல் தாக்குதல் குறித்து இருதரப்பும் ஒருவர் மீது ஒருவர் பழிசுமத்துவதால் மோதல்கள் மேலும் தீவிரமடையும் போது தேவாலயம் இலக்கு வைக்கப்படலாமென மதகுருமார்கள் கருதினர்.
இதையடுத்து அவர்கள் மடு மாதாவின் திருச்சொரூபத்தை அங்கிருந்து பாதுகாப்பாக வேறோரிடத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். தற்போது
மாதாவின் சொரூபம் மன்னார் - பூநகரி வீதியில் தேவன்பிட்டி பகுதியிலுள்ள புனித சவேரியார் தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. மதகுருமாரின் இந்த நடவடிக்கை மடு தேவாலயத்தைக் கைப்பற்றும் படை நடவடிக்கைக்குப் பலத்த அடியாகிவிட்டது. மடு தேவாலயத்தைக் கைப்பற்றி அங்கு தென்பகுதிப் பக்தர்களை வரச்செய்து அதன் மூலம் அரசியல் இலாபம் தேட முயன்ற அரசுக்கு மடுத் தேவாலயத்திலிருந்து திருச்சொரூபம் அகற்றப்பட்டு புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள வேறோரிடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது மிகப்பெரும் ஏமாற்றமாகும்.
தற்போது மடுவைப் படையினர் கைப்பற்றினாலும் அதனால் எதுவித அரசியல் இலாபமும் கிடைக்கப்போவதில்லை. மாதா சொரூபம் இல்லாத நிலையில் தேவாலயம் கைவிடப்பட்டுள்ளதால் தேவாலயத்தை படையினர் கைப்பற்றினாலும் பக்தர்கள் எவரும் அங்கு வரப்போவதில்லை.
இதனால், மடுவை நோக்கிக் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக படையினர் மேற்கொண்ட படைநகர்வு பலனற்றுப் போய்விட்டது. பெருமளவு உயிரிழப்புகளுடனும் மிகப் பெருமளவு பொருளாதார இழப்புகளுடனும் அரசியல் நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்ட பாரிய படை நடவடிக்கை புஸ்வாணமாகிவிட்டது.
மடுவைக் கைப்பற்றும் நோக்கில் படை நடவடிக்கை ஆரம்பமான போது, அதனை நன்குணர்ந்த ஆலய நிர்வாகம் பின்விளைவுகளை நன்கறிந்து தேவாலய சுற்றாடலை பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்துமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தது. எனினும் அதனைப் பொருட்படுத்தாத அரசு, மடுதேவாலயத்தைக் கைப்பற்றிய பின்னர் புலிகள் மீண்டும் அப்பகுதியில் தாக்குதல் நடத்துவதைத் தவிர்ப்பதற்காக அந்தப் பகுதியை பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தத் திட்டமிட்டிருந்தது.
எனினும் இந்தப் பகுதி பாதுகாப்பு வலயமாக்கப்படாததாலேயே தேவாலயத்திலிருந்து மாதாவின் திருச் சொரூபத்தை பாதுகாப்பதற்காக வேறிடத்திற்குக் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.
தேவாலயத்திலிருந்து திருச்சொரூபம் அகற்றப்பட்டுவிட்டதால் இனி அந்தப் பகுதியைக் கைப்பற்றுவதில் எதுவித அர்த்தமுமில்லை என்பதை தற்போது அரசும் படைத்தரப்பும் உணர்ந்திருக்கும். படையினர் தொடர்ந்தும் பாரிய படையெடுப்பை மேற்கொண்டு அங்கு சென்ற பின் திருச்சொரூபத்தை அங்கு கொண்டு வருமாறு கோரிக்கை விடலாம். ஆனால், அதனை ஆலய நிர்வாகம் ஏற்றுக் கொள்ளும் சாத்தியமில்லை என்றே கருதப்படுகிறது. தேவாலயத்தை அரசியல் இலாபங்களுக்குப் பயன்படுத்த அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்றே கருதப்படுகிறது.
ஏனெனில், தேவாலயத்தை படையினர் கைப்பற்றிய பின் அப்பிரதேசத்தில் மோதல்கள் முடிவுக்கு வந்துவிடுமென யார் உத்தரவாதம் கொடுப்பார்கள். இராணுவ இலக்கோ அல்லது இராணுவ கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமோ இல்லாத போதும் மடு தேவாலயத்தைக் கைப்பற்றுவதற்காக அரசு மேற்கொண்ட பாரிய படை நகர்வின் மூலம் சரித்திரப் புகழ்பெற்ற மத வழிபாட்டுத் தலங்களின் தொன்மையையும் புனிதத்தையும் பாதுகாக்காது அதனை அரசியல் இலாபம் கருதி அழிவுக்குட்படுத்தவும் அரசு முனைந்து விட்ட செயல் மூலம் தொடர்ந்தும் அந்தப் புனிதத் தலத்தின் பெருமையைப் பேணாது அதனை அரசியல் இலாபத்திற்காக அரசு பயன்படுத்த முனையுமென்பதும் மதகுருமார்களின் எண்ணமாகும்.
அத்துடன் திருச்சொரூபத்தை மீண்டும் அந்த இடத்திற்குக் கொண்டு வரச்செய்வதில் அரசு முனைப்புக் காட்டும். புலிகளின் வற்புறுத்தலாலேயே தேவாலயத்திலிருந்த திருச்சொரூபத்தை மதகுருமார் அகற்றியுள்ளதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா கடுமையான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
புலிகளின் நலன்கருதியே திருச் சொரூபம் அங்கிருந்து அகற்றப்பட்டதாகவும் இராணுவத் தளபதி கூறுவதன் மூலம், தாங்கள் அப்பிரதேசத்தை கைப்பற்றும் நிலையேற்பட்டால் தேவாலயத்தில் சொரூபமில்லாதது குறித்து அவர் பெரிதும் கவலையடைந்துள்ளது வெளிப்படையாகத் தெரிகிறது.
மேலும் தேவாலயத்தைக் கைப்பற்றிய பின் அதனைப் பாதுகாப்பு வலயமாக்கி புலிகளையும் அதனை ஏற்றுக் கொள்ளச் செய்யும் விதத்தில் பெரும் பிரசாரங்களைச் செய்து அவர்களுக்கு கடும் அழுத்தங்களைக் கொடுக்க அரசு எண்ணியிருந்தது. எனினும், கடந்த ஒரு வருடமாக தேவாலயத்தை இலக்கு வைத்தே இந்த இராணுவ நடவடிக்கை இடம்பெறுவதை மதத் தலைவர்கள் வன்மையாகக் கண்டிக்காததுடன், மடுவை நோக்கிய படைநகர்வை தடுத்து நிறுத்த அவர்கள் சர்வதேச ரீதியில் முனையாததும் ஏனென்ற கேள்வி எழுகிறது.
தேவாலயத்தை படையினர் கைப்பற்றினால், படையினரின் பாரிய நடவடிக்கை மேலும் தொடரும் போது தேவாலயச் சுற்றாடல் இந்தப் படை நடவடிக்கையால் நிச்சயம் பாதிப்படையும். இதனால் எந்த உத்தரவாதத்தின் பேரில், படையினர் தேவாலயத்தைக் கைப்பற்றியதும் திருச்சொரூபத்தை மீண்டும் அங்கு கொண்டுவர முடியும்?
அதேநேரம், மடுவை இராணுவ இலக்காகக் கொண்டே பாரிய படை நடவடிக்கை இடம்பெற்றதால் மடுவைப் படையினர் கைப்பற்றியதும் எப்படி அந்தப் பிரதேசத்தை பாதுகாப்பு வலயமாக ஏற்றுக்கொள்ளுமாறு விடுதலைப் புலிகளை அரசு கேட்க முடியும்?
மடுத் தேவாலயத்திலிருந்து புலிகளின் நலன் கருதியே திருச்சொரூபத்தை மதகுருமார் அகற்றியதாகவும், புலிகளின் வற்புறுத்தலுக்கு மதகுருமார் பணிந்துவிட்டதாகவும் இராணுவத் தளபதி கூறுகின்றார் என்றால், மடுவை இராணுவ இலக்காக்கியது யார்? காலா காலமாக வன்னியில் இடம்பெற்ற பாரிய படை நடவடிக்கைகளின் போதெல்லாம் ஆயிரக் கணக்கான மக்கள் பாதுகாப்புத் தேடி தஞ்சமடைந்த இடம் மடு திருப்பதி. இதனை சர்வதேச சமூகமும் சர்வதேச தொண்டர் அமைப்புக்களும் அங்கீகரித்திருந்தன. அப்படியானதொரு பிரதேசத்தை இன்று இராணுவ இலக்காக்கியதன் மூலம், பாரிய படை நடவடிக்கைகளின் மூலம் அகதியாவோருக்கான அடைக்கலப் பிரதேசத்தை இல்லாது செய்ய வேண்டுமென்றதொரு நோக்கம் ஏற்பட்டது ஏன்?
தற்போதைய நிலையில் மடுவைக் கைப்பற்றுவதா, வேண்டாமா என்றதொரு நிலை அரசுக்கும் படையினருக்கும் ஏற்பட்டுள்ளது. மடுமாதா இல்லாத ஆலயத்தைக் கைப்பற்றுவதால், மடுவை நோக்கி இதுவரை காலமும் மேற்கொண்ட பாரிய படைநகர்வுகள் வீணென்ற நிலை ஏற்பட்டுள்ளது.
விதுரன்
06 - April - 2008 தினக்குரல்
Wednesday, April 9, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment