வரலாறு என்பது ஒரு இனத்தினதும் மொழியினதும் நாட்டினதும் மதத்தினதும் பண்டைய இருப்பையும் பாரம்பரிய பெருமைகளையும் உறுதிப்படுத்தும் சான்றுகளாகும். இதனாலேயே வரலாறு என்பது முக்கியத்துவம் பெறுகின்றது.
நமது இலங்கையைப் பொறுத்தவரை இந்துக்களின் தமிழர்களின் பண்டைய வரலாறு கி.மு. 500 ஆண்டுகளுக்கு முன்பிருந்து ஒழுங்கு முறையில் தொடர்ச்சியாகத் தொகுக்கப்பட பல சான்றுகளிருந்த போதும் அப்பணியை உரிய முறையில் இதுவரை ஒருவராவது ஆற்றாமலிருப்பது கவலைதரும் விடயமாகவுள்ளது. இவ்வா றான நிலையில் இலங்கைத் தமிழர்களதும், இந்துக்களதும் பண்டைய வரலாற்றை தமது அபிலாஷைகளுக்கேற்ப மாற்றி வெளியிடும் வரலாற்றுத் திரிபுகள் தாராள மாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இவ்வாறு திரிபுபடுத்துவதன் மூலம் இலங்கையில் தமிழர்களதும், இந்துக்க ளதும் பண்டைய இருப்பை கேள்விக்குரிய தாக்கும் செயற்பாடுகளுக்கு உரமூட்டப் பட்டு வருகின்றது. இது தொடர்பில் மறுத்துரைத்து, ஆணித்தரமான கருத்தை முன்வைத்து தமிழரின் இந்துக்களின் வரலாற்று ரீதியான உறுதிப்பாட்டை நிலைநிறுத்த துறைசார் நிபுணர்களோ, ஆய்வாளர்களோ முன்வராதிருப்பது கவலைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியது.
ஐரோப்பியர் இலங்கைக்கு வந்தபோது அதாவது கி.பி. 1505 ஆம் ஆண்டில் இலங்கையில் ஒரு தமிழ் இராச்சியமும் இருக்கவில்லையென்று ஒரு அரசியல்வாதி அதுவும் பொறுப்பிலிருக்குமொருவர் ஒரு கூட்டத்தில் பகிரங்கமாகக் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது. இலங்கைக்குள் போர்த்துக்கேயர் புகுந்து நாட்டின் பகுதிகளைக் கைப்பற்றிய போது வலிந்து அவர்களுக்கு ஆட்சியைத் தாரைவார்த்துக் கொடுத்தவர்கள் கோட்டே இராச்சியத்தின் சிங்கள அரச பரம்பரை என்பது வரலாறு.
அதேவேளை யாழ்ப்பாண இராச்சியத் தின் தமிழ் அரசர்கள் இறுதிவரை அந்நிய ரான போர்த்துக்கேயருக்கெதிராகப் போரா டினார்கள் என்பதும் வரலாறு. எதிர்ப்பின்றி தாமாகவே முன்வந்து நாட்டை அந்நியருக்கு கையளித்து சரணடைந்த கோட்டே யின் சிங்கள அரசர் பரம்பரையையும் இறுதி மூச்சுவரை அந்நியரை எதிர்த்து சமர் செய்து பல சந்தர்ப்பங்களில் அவர்களைத் தோற்கடித்த யாழ்ப்பாணத்துத் தமிழ் அரசர்களையும் சரியாக எடைபோடாது தவறான, திரிபுபட்ட செய்திகளைச் சொல்வது பொறுப்புடையவர்களுக்குப் பொருத்தமல்ல. அந்நிய ஆக்கிரமிப்புக் கெதிராகப் போராடிய வீரத் தமிழ் மன்னர் களாலும் அவர்களது ஆளுகைக்குட்பட்டி ருந்த மக்களையும் குறைத்தும் மறைத்தும் எடைபோடும் இழிசெயல் தடுக்கப்பட வேண்டும். தகர்க்கப்பட வேண்டும்.
வரலாற்று உண்மை நிகழ்வுகள் உலகிற்குத் தெளிவாக்கப்பட வேண்டும்.
யாழ்ப்பாணத்துத் தமிழ் அரசர்கள் மட்டு மல்ல வன்னியின் தமிழ் சிற்றரசர்கள் கூட ஐரோப்பியரைப் புறமுதுகு காட்டச் செய்த வரலாற்று நிகழ்வுகளும் உள்ளன.
கண்டி இராச்சியத்தின் கடைசி மன்னன் கண்ணுச்சாமி என்கின்ற தமிழன் என்பதை எவராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் என்ற பெயரில் ஆட்சி செய்த கண்டி அரசனை ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுத்து, பிடித்துக் கொடுத்து அந்த இராச்சியத்தை ஒப்பந்தம் முலம் ஆங்கிலேயரிடம் ஒப்ப டைத்தவர்கள் தமிழர்கள் அல்ல என்பதும் வரலாறு. ஆங்கிலேயருக்கெதிராக, அந்நி யருக்கெதிராக இறுதிவரை போராடிய பெருமை கண்டியின் தமிழ் அரசனுக் குரியது.
கோட்டேயின் சிங்கள இராச்சியத்தைப் போர்த்துக்கேயருக்குத் தாரைவார்த்தவர்கள் சிங்கள அரச பரம்பரையினர். கண்டி ராச்சியத்தை ஆங்கிலேயருக்குத் தானம் செய்தவர்கள் சிங்களப் பிரதானிகள்.
வரலாற்றில் இடம்பெற்றுள்ள இவ் வுண்மை நிகழ்வுகள் தமிழ் அரசர்களோ, தமிழர்களோ ஐரோப்பியர் இந்நாட்டில் ஆட்சி புரிய உதவவில்லை என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. இதன் மூலம் இறைமையுள்ள தமிழ் அரசுகள் இலங்கையில் இருந்தமையும் தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஐரோப்பியர் இலங்கைக்குள் ஊடுருவிய கால வரலாறு இவ்வாறு அமைந்துள்ள அதேவேளை இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் நிகழ்ந்தவை தொடர்பாகவும் அதன் பின்னர் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும்.
கி.மு. 237 ஆம் ஆண்டில் அனுராத புரத்தையாண்ட தேவநம்பியதீசன் காலத் தில் அசோக சக்கரவர்த்தியின் மகனான மகிந்தனால் முதன் முதலில் இலங்கையில் பௌத்த தர்மம் போதிக்கப்பட்டதாக மகாவம்சம் என்ற நூலில் சொல்லப்பட் டுள்ளது. அதாவது கி.மு. 237 ஆம் ஆண்டிலேயே இலங்கையில் புத்த சமயம் இறக்குமதி செய்யப்பட்டது என்பது கூறப்பட்டுள்ளது.
கி.மு. 500 ஆண்டுகளுக்கு முன் அதாவது இற்றைக்கு 2508 ஆண்டுகளுக்கு முன் விஜயன் இலங்கையில் கரையொதுங்கிய தாகக் கூறப்படுகின்றது. விஜயனுடன் இலங்கையில் கரையொதுங்கியவர்களில் உபதிஸ்ஸன் என்ற பிராமணனும் இருந்த தாகவும் அவர் இலங்கையிலுள்ள நாலா பக்கங்களிலுமுள்ள ஐந்து சிவாலயங்களைச் சென்று தரிசித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
வடக்கில் நகுலேஸ்வரமும், கிழக்கில் கோணேஸ்வரமும், மேற்கில் கேதீஸ் வரமும், முன்னேஸ்வரமும், தெற்கில் தொண்டீஸ்வரமுமே அவ்வைந்து சிவா லயங்களுமாகும். இவற்றையே பஞ்சேஸ் வரங்களென்று கூறுகின்றோம்.
முதல் நான்கும் இன்றும் சிவாலயங் களாக விளங்கும் அதேவேளை போர்த்துக் கேயரால் சிதைக்கப்பட்ட மாத்தறை மாவட்டத்தின் தேவேந்திரமுனை (தெவி நுவர) யிலிருந்த தொண்டீஸ்வரம் இன்று தென்பகுதியிலுள்ள பிரசித்திபெற்ற விஷ்ணு கோயிலாக மாற்றமடைந்துள்ளது.
இற்றைக்கு ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் இராமாயண காலத்துடன் தொடர்புடையதாக திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம், முன்னேஸ்வரம் என்பன கூறப்படுவது போன்று கிழக்கிலங்கையிலுள்ள மாமாங் கேஸ்வரமும் இராமாயண காலத்துடன் தொடர்புபட்டதாக இராமபிரான் சிவனைப் பூசித்த தலமாகக் கொள்ளப்படுகின்றது.
இவ்வாறு பௌத்த சமய சிந்தனை இலங்கையில் புகுத்தப்படுமுன் இந்து சமயமே நிலவி வந்துள்ளமை தெளிவா கின்றது. பௌத்த யுகம் இலங்கையில் ஏற்படுவதற்கு முன்னரிருந்த யுகம் ஈஸ்வர யுகம் என்று வரலாற்றாய்வாளர்கள் கூறுவதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
தென்னிந்தியாவிலே தமிழ் மொழி சிறப் புற்றிருந்த காலத்தில்தான் மகிந்தன் இலங்கைக்கு வந்து புத்த மத போதனை செய்துள்ளார். இலங்கைக்கு வரும் வழியில் தென்னிந்தியாவில் அதாவது தமிழ் அரசு இருந்த பகுதியிலிருந்த தனது தாயாரையும் சந்தித்து விட்டே வந்ததாகக் குறிப்பொன்று உள்ளது.
சிங்கள மொழி உருவாகாத காலத்தில் மகிந்தர் தேவனம்பிய தீசனுக்கு என்ன மொழியில் உரையாடி போதனை செய்தாரென்பதும் விடை தேட வேண்டிய விடயமாகும். தத்துவ விளக்கமளிக்க, விளங்கிக் கொள்ள இருவருக்கும் தெரிந்த, பரிச்சயமான மொழி தமிழாகத்தான் இருந்திருக்கும் என்றே கணிக்க வேண்டும். இதுவே பொருத்தமான உண்மையாகும்.
போர்த்துக்கேயர் இலங்கைக்கு வரும் போது மேற்கிலங்கையில் தமிழர்கள், இந்துக்கள் செறிந்து வாழ்ந்தார்கள். சிறப் புடன் வாழ்ந்தார்கள் என்பதற்கு இரத் மலானையிலுள்ள திருநந்தீஸ்வரம் சான்றாக விளங்குகின்றது. 1518 இல் போர்த்துக்கேயரால் சிதைக்கப்பட்ட இச்சிவாலயத்தைப் பற்றி 1454 இல் தொடகமுவே ராகுல தேரர் என்ற சிங்கள இன பௌத்த துறவி தனது காவியமான "சலலிஹினி சந்தேசய'வில் துலக்கமாகக் கூறியுள்ளார்.
""இந்த ஈஸ்வரன் கோயிலில் மக்கள் விரும்பும் இனிமையான தமிழில் தோத் திரம் பாடப்படுகின்றது'' என்ற அவரின் கூற்றின் மூலம் இப்பகுதியில் தமிழர்கள், இந்துக்கள் சிறப்புடன் வாழ்ந்த இருப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சிங்கள மொழியிலான இக்காவியப் பாடல் மூலம் போர்த்துக்கேயரின் வருகைக்கு முன்பே மேற்கிலங்கையின் இந்துத் தமிழர்களின் இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேற்கிலங்கையிலிருந்த இந்துத் தமிழர் கள் போர்த்துக்கேய ஊடுருவலின் பயனாகப் பெரும்பாலானவர்கள் கத்தோலிக்க சமயத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்கினர். இந்துத் தமிழர்கள் கத்தோலிக்கத் தமிழர்களாக மாற்றமடைந்தனர்.
ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பதாம் ஆண்டை அண்மித்த காலத்தில் மேற் கிலங்கையில் இயங்கிய றோமன் கத்தோ லிக்க தமிழ்ப் பாடசாலைகள் இரவோ டிரவாக ஆட்சியாளரின் அழுத்தத்தால் றோமன் கத்தோலிக்க சிங்களப் பாட சாலைகளாக மாற்றப்பட்டன. அதற்கு கத்தோலிக்க திருச்சபையும் உடந்தை யானது வரலாற்றுப் பதிவாகும்.
கத்தோலிக்கத் தமிழர்கள் பின்னர் தமிழ் பேசும் சிங்களவராகக் குறிக்கப்பட்டு இன்று சிங்களவராகவே இனங்காட்டப் படுகின்றனர் என்பதும் ஒரு பதிவாக அமைகின்றது.
இவ்வாறு வரலாற்று உண்மைகள் இருக்க வரலாற்றைத் திரிபுபடுத்துவதானது புத்த பெருமான் ஒரு இந்து அல்ல என்று கூறப்படுவதற்கொப்பாகும். இன வெறியுடன் உண்மை வரலாற்றைப் புறந்தள்ளி புதுக்கதைகள் கூறுவோர் தமது மூதாதையரையே இழிவுபடுத்துகின்றனர் என்றால் அதுவே உண்மையாகும்.
த. மனோகரன்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment