
நளினியின் வழக்கறிஞர் "கேசரி" வார இதழுக்கு விசேட செவ்வி
தமிழகத்திலிருந்து தமிழன்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலைக்குற்றவாளிகள் அனைவரையும் சோனியா குடும்பம் மன்னித்திருப்பதாக நளினியின் வழக்கறிஞர் துரைசாமி தெரிவித்துள்ளார்.
பிரியங்கா நளினி சந்திப்பு குறித்து பல்வேறு மட்டங்களிலும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படும் நிலையில் நளினியின் சார்பில் ஆஜராகும் வழக் கறிஞர் துரைசாமி கேசரி வாரவெளியீட்டிற்கு பிரத்தியேக செவ்வி ஒன்றை வழங்கியுள்ளார்.
அந்த செவ்வியில் , பிரியங்காவால் விடுதலைப்புலிகளை நேரில் சந்தித்து, "உங்கள் மீது கோபமோ வெறுப்போ விரோதமோ கிடையாது' என்று சொல்ல முடியாது. அதனால்தான் அவர் நளினியைப் பயன் படுத்திக் கொண்டார். நளினியிடம் தன் கருத்துக்களைச் சொன்னதன் மூலம் பிரியங்கா தனக்கு ஆறுதலையும் நிம்மதியையும் தேடிக் கொண்டிருப்பதுடன், தன் மன தில் உள்ள மனிதநேயத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார் என்றும் துரைசாமி தெரிவித்துள்ளார்.
சோனியா காந்தியின் குடும்பத்தினருக்கே விடுதலைப் புலிகள் மீது கோபம் இல்லை என்றாகிவிட்ட பிறகு இந்திய அரசும் அதை ஏற்கத்தான் வேண்டும். தங்களுக்கும் புலிகள் அமைப்பின் மீது கோபம் இல்லை என்பதை இந்திய அரசு வெளிப்படுத்த வேண்டும்.
இதுநாள் வரையில் பொதுவாக இந்திய மக்கள் விடுதலைப்புலிகள் என்றாலே கோபம் கலந்த வெறுப்புடன் பார்த்தார்கள். மக்களாகட்டும், காங்கிரஸ் கட்சி யினராகட்டும் எல்லோருக்குமே இந்தக் கோபமும் வெறுப்பும் இருந்தது உண்மை. ஆனால் பிரியங்காவின் இந்த நடவடிக்கைக்குப் பிறகு அக்கோபம் ஏறத்தாழ மறைந்துவிட்டது என்றும் வழக்கறிஞர் துரைசாமி தெரிவித்துள்ளார். வேலூர் சிறையில் இருக்கும் ராஜீவ் கொலைக்குற்றவாளி நளினியை அண்மையில் சந்தித்துப் பேசியிருக்கிறார் பிரியங்கா காந்தி.
இது தமிழகத்தில் மட்டுமல்லாது அனைத்துலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நளினி விடுதலை செய்யப்பட வேண்டும் என்று நீண்ட காலமாகப்போராடி வருபவரும், அவரது வழக்கறிஞருமான துரைசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினோம். வீரகேசரி வார வெளியீட்டிற்காக பல தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார். இனி அவரது செவ்வி:
கே: சிறையில் இருக்கும் நளினியை திடீரென்று பிரியங்கா சந்திப்பதற்கான காரணம் என்ன? இச்சந்திப்புக்கு முதலில் விருப்பம் தெரிவித்தது யார்?
ப: நளினியைச் சந்திக்க வேண்டும் என்று விரும்பியது பிரியங்காதான். அவரது விருப்பத்தின் அடிப்படையில்தான் சந்திப்பு நடந்துள்ளது. இந்தச் சந்திப்பின் மூலமாக பிரியங்கா முக்கியமான விஷயம் ஒன்றை வெளிப்படுத் தியிருக்கிறார். அவர் நளினியிடம் சொன்ன அந்த முக்கியமான விஷயம், "என் தந்தையைக் கொலை செய்தவர்கள் மீது எனக்கு கோபமோ வெறுப்போ விரோதமோ அறவே கிடையாது.
அதைச் சொல்வதற்காகத்தான் நான் இங்கு வந்தேன்' என்பதுதான்.
ராஜீவ் கொலையைப் பொறுத்தவரையில் நளினி சிறிய கருவி மட்டும்தான். இக் கொலைக்கான சதியை அவர் தீட்டவில்லை.
நீதிமன்றத்தின்படி கொலைக்கான சதியைச் செய்தவர்கள் விடுதலைப்புலிகள்தான். அக்கொலைத்திட்டம் நிறைவேறியபோது உடன் சென்றது மட்டும்தான் நளினி செய்த தவறு.
இது பிரியங்காவுக்கும் தெரிந்திருக்கிறது.
அவரால் விடுதலைப்புலிகளை நேரில் சந்தித்து, "உங்கள் மீது கோபமோ வெறுப்போ விரோதமோ கிடையாது' என்று சொல்ல முடியாது. அதனால்தான் அவர் நளினியைப் பயன் படுத்திக் கொண்டார். நளினியிடம் தன் கருத் துக்களைச் சொன்னதன் மூலம் பிரியங்கா தனக்கு ஆறுதலையும் நிம்மதியையும் தேடிக் கொண்டிருப்பதுடன், தன் மனதில் உள்ள மனிதநேயத்தையும் வெளிப்படுத்தியிருக் கிறார்.
கே: அதற்காக விடுதலைப்புலிகளையும் பிரியங்கா மன்னித்துவிட்டார் என்று அர்த்த மாகுமா?
ப: உலகத்தில் எதற்கும் பழிக்குப்பழி வாங்கு வதுதான் விஞ்சி நிற்கிறது. கொலைக்கு கொலை என்பதுதான் வாடிக்கையாக இருக்கிறது. ஆனால் தனக்கு அந்த எண்ணம் இல்லை என்கிறார் பிரியங்கா. இது மிகவும் உயர்ந்த பண்பு. மிகவும் பாராட்டுக்குரியது.
நளினியை தான் மன்னித்துவிட்டதாகவும் அச்சந்திப்பின்போது பிரியங்கா கூறியிருந்தார்.
மேலும் கொலை செய்தவர்களை மன்னித்து விட்டேன் என்றால் என்ன அர்த்தம்? அவரது மன்னிப்பு என்பது நளினிக்கு மட்டு மல்ல, விடுதலைப்புலிகளுக்கும் உகந்ததாக இருக்க வேண்டும் என்று ஒரு ஆங்கில இதழுக்கு அளித்த பேட்டியிலும்கூட கூறியிருந்தேன். அதைத்தான் இப்போதும் கூறுகிறேன்.
என்னைப் பொறுத்தவரையில் சோனியாவுக்கும் விடுதலைப்புலிகள் மீது கோபம் இல்லை என்றுதான் சொல்வேன். ஏனெனில் மகளுக்குக் கோபம் இல்லை என்றால் அது தாய்க்கும் பொருந்தும்தானே? அதேபோல் ராஜீவ் குடும் பத்தைச் சேர்ந்த மற்றவர்களும் இதே கருத்தையே கொண்டிருப்பார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.
கே: ராஜீவின் குடும்பம் புலிகளை மன்னித்துவிட்டது உண்மை என்றால், இந்திய அரசின் நிலைப்பாடு என்னவாக இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்?
ப: சோனியா காந்தியின் குடும்பத்தாருக்கே விடுதலைப்புலிகள் மீது கோபம் இல்லை என்றாகிவிட்ட பிறகு இந்திய அரசும் அதை ஏற்கத் தான் வேண்டும். தங்களுக்கும் புலிகள் அமைப்பின் மீது கோபம் இல்லை என்பதை இந்திய அரசு வெளிப்படுத்த வேண்டும்.
இதுநாள் வரையில் பொதுவாக இந்திய மக்கள் விடுதலைப்புலிகள் என்றாலே கோபம் கலந்த வெறுப்புடன் பார்த்தார்கள். மக்களாகட்டும், காங்கிரஸ் கட்சியினராகட்டும் எல்லோ ருக்குமே இந்தக் கோபமும் வெறுப்பும் இருந்தது உண்மை. ஆனால் பிரியங்காவின் இந்த நடவடிக்கைக்குப் பிறகு அக்கோபம் ஏறத்தாழ மறைந்துவிட்டது. நளினியின் மீதான கோபம் மட்டும் பிரியங்காவிடம் மறைந்துவிட வில்லை. விடுதலைப்புலிகள் மீதும் அவருக் குக் கோபம் இல்லை என்பதை நாளடைவில் எல்லோரும் புரிந்து கொள்வார்கள். அப்போது அது நல்ல மாற்றமாக இருக்கும்.
கே: நளினியை சிறையில் சந்தித்தபோது பிரியங்காவுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டது என்றும், இது விதிமுறை மீறிய செயல் என்றும் கூறப்படுகிறதே? பிரியங்கா போன்ற முக்கியஸ்தர்களுக்கு இவ்வாறு விலக்கு அளிக்க முடியுமா?
ப: இந்த சட்டதிட்டங்களிலிருந்து யாருக்குமே விலக்கு அளிக்க முடியாது.
இன்னும் சொல்லப் போனால் தமிழக சிறைத் துறையினர் மிகுந்த கவனத் துடன் இருந்திருக்க வேண் டும். தன் தந்தையைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டுப்பட்டு சிறைத்தண்டனை அனுபவிக்கும் ஒரு வரை பிரியங்கா சந்திக்கி றார். அவ்வாறு நேரில் சந்திக்கும்போது எந்தவொரு மனிதனுக்கும் ஆத்திரம்தான் முதலில் வரும். எவ்வளவு தான் கட்டுப்படுத்திக் கொண்டாலும், தன்னை மீறி ஆக்ரோஷம் அல்லது வேகம் வரும். அதுதான் பிரியங்கா விஷயத்திலும் நடந்தது. ஆனால் அவர் தன் உணர்வுகளை எப்படி வெளிப்படுத் துகிறார் என்றால்.... நளினியைக் கண்டதும் அப்படியே உடைந்துபோய் அழுது விடுகிறார்.
பாரம்பரியமான பண்பான குடும்பத்தைச் சேர்ந்த பெண் என்பதால் அவருக்கு நளினியை திட்ட வேண்டுமென்றோ, அடிக்க வேண்டுமென்றோ துன்புறுத்த வேண்டு மென்றோ தோன்றவில்லை. அப்படியொரு எண்ணமே அவருக்கு இல்லை.
ஒருவேளை அவருக்கு தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தத்தெரியவில்லை என்றால் நளினியை அடித்திருக்கவும் வாய்ப்புண்டு.
ஆனால் நல்லெண்ணத்துடன் அவர் வந்ததால் பண்பாக நடந்து கொண்டிருக்கிறார். அழுகை என்பது மனிதனின் மனப்பாரத்தை இறக்கி விடக்கூடிய சக்தி பெற்றது. பிரியங்காவும் அழுகையின் மூலம் தன் மனப்பாரத்தை இறக்கி வைத்துவிட்டார்.
கே: நளினியிடம் அவரும் விசாரணை மேற்கொண்டாரா? என்னவெல்லாம் கேட் டார்? கோபப்பட்டாரா?
ப: விசாரணை நடத்தவில்லை. தன் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார். நளினியிடம் அவர் கேட்ட முதல் கேள்வி இதுதான்: "எதற்காக என் தந்தையைக் கொலை செய்தீர்கள்?".
இந்தக் கேள்வியை அவர் கோபமாக வெறுப் புடன் கேட்கவில்லை. மாறாக உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாகக் கேட்டிருக்கிறார்.
கே: இருவரும் பூட்டப்பட்ட அறைக்குள் பேசியதாக வெளியான தகவல் உண் மையா?
ப: அரசாங்கம் செய்தது தவறு. இருவரும் சந்தித்துப் பேசிய அறை பூட்டப்பட்டிருந்ததா, இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை.
எனினும் இத்தகைய சந்திப்புகளின்போது சட்ட விதிகள் முழுமையாகப் பின்பற்றப்படவில்லை என்றால் அது சட்ட மீறல்தான். மிகவும் தவறு தான்.
வழக்கமாக கைதிகளிடமிருந்து சில ரகசிய மான தகவல்களைப் பெறுவதற்காக அவர்களது வழக்கறிஞர்கள் சந்திப்பது உண்டு. அத்த கைய சந்திப்புகளின்போது கைதியும் அவரது வழக்கறிஞரும் பேசும்போது அவர்கள் பேசுவது காதில் விழாத தூரத்தில் நின்று சிறை அதிகாரிகள் கவனிக்க வேண்டும் என்பதுதான் விதி முறை.
ராஜீவ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட பேரறிவாளனை கடந்த 1991ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிறப்புப் புலனாய்வு அலுவலக மான மல்லிகையில் நான் சந்தித்துப் பேசிய போது இந்த நடைமுறைதான் கடைப்பிடிக்கப் பட்டது.
அந்த அலுவலகத்துக்குள் சென்ற ,முதல் வழக்கறிஞர் நான்தான். அப்போது அதிகாரிகள் உடன் இருந்தனர். ஆனால் நாங்கள் இருவரும் பேசுவது காதில் விழாத தூரத்தில் நின்று தான் கவனித்தனர். அந்த விதிமுறை பிரியங்கா நளினி சந்திப்பின் போது பின்பற்றப்பட வில்லை என்பது தவறுதான்.
கே: தான் எழுதும் புத்தகத்துக்கு தேவைப் படும் சில விவரங்களைச் சேகரிப்பதற்காக நளினியை சந்தித்திருக்கிறார் பிரியங்கா.
இதற்கும் மனிதநேயத்திற்கும் என்ன சம்பந்தம்?
ப: ஏன் இல்லை...? சினிமாவில் வேண்டுமானால் தன் தந்தையைக் கொன்றவர்களை மன்னிப்பது சாத்தியமாகலாம். ஆனால் வரலாற்றில் இதுபோன்ற சம்பவங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால்தான் சொல்கிறேன் பிரியங்கா செய்தது மகத்தான காரியம்.
"மனோகரா' படத்தில் நடிகர் சிவாஜி கணேசன் படையெடுத்துச் சென்று பாண்டிய மன்னனை வீழ்த்தி அவரைக் கொன்றுவிடுவார். ஆனால் அடுத்த காட்சியிலேயே மன்னனின் மகளைக் கைபிடிப்பார். இதெல்லாம் நிஜத்தில் சாத்தியமாகுமா? ஆனால் பிரியங்கா இதைச் சாதித்துக் காட்டியிருக்கிறார்.
உதாரணத்துக்கு நான் சந்தித்த ஒரு வழக்கைச் சொல்கிறேன். தர்மபுரி மாவட்டத்தில் ஒருவரது தந்தையை மூன்று பேர் சேர்ந்து கொன்றுவிட்டனர். வழக்கு நீதிமன்ற சென்றது. மூன்றாண்டு களுக்குப் பிறகு மூவரும் குற்றம் செய்ய வில்லை என்று விடுவிக்கப்பட்டனர். ஆனால் மகனால் இத்தீர்ப்பை ஏற்கமுடியவில்லை. தன் தந்தையைக் கொலை செய்தவர்கள் மூன்று வருடச் சிறைவாசம் முடிவதற்குள் வெளியே வந்துவிட்டனரே என்று கோபப்பட்டார். தன் தந்தையின் அடுத்த நினைவு நாளன்று அம்மூவரையும் வெட்டிக் கொன்றுவிட்டு அவர்களது தலையை எடுத்து வந்து தன் தந்தையின் சமாதியின் மீது வைத்து பூஜை செய்து கோபத்தை தணித்துக் கொண்டார். அப்படிப் பட்ட பூமியில் தன் தந்தையைக் கொன்றவர் களிடம் பரிவு காட்டுவதென்பது உயர்ந்த
கே: இருவரும் என்னென்ன பேசினார்கள். தன்னை சிறையிலிருந்து விடுவிக்குமாறு நளினி கோரினாரா?
ப: இல்லை... அத்தகைய கோரிக்கை எதையும் நளினி முன்வைக்கவில்லை. ஆனால் இரு வரும் மனம்விட்டுப் பேசியது உண்மை. நளினியின் சிறைவாசம் குறித்தும், தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம், வாழ்க்கைத்தரம் என எல் லாவற்றையும் கேட்டறிந்திருக்கிறார் பிரி யங்கா. தன்னைப் பற்றியும் பல விவரங்களைச் சொல்லியிருக்கிறார். இருவரும் சுமார் ஒரு மணி நேரம் பேசியது பெரிய விஷயம். பிரியங்காவுக்குக் கோபம் இருந்திருக்குமானால் அதைக் கட்டுப்படுத்திக் கொண்டு இவ்வளவு நேரம் பேசியிருக்க முடியாது. ஏனெனில் வருடக்கணக்கில் பொறுமையுடன் தவம் செய்து முனிவர்களே பொறுமை இழந்து சாபமிட்ட கதைகளைக் கேட்டிருக்கிறோமே?
கே: பிரியங்காவிடம் நளினி மன்னிப்பு கேட்டது உண்மைதானா? அதற்கு பிரி யங்கா என்ன சொன்னார்?
ப: பிரியங்கா அழுததும் நளினியும் சிறிது நேரம் அழுதிருக்கிறார். பிறகு நான் செய்த பாவத்துக்காக என்னை மன்னித்துவிடுங்கள் என்று கேட்டிருக்கிறார். எந்தக் குடும்பத்திற்கு எதிராக தான் தவறு செய்துவிட்டோம் என்று நினைத்தாரோ, அக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வரிடமே மன்னிப்பும் கேட்டுவிட்டார். அவர் மனதில் இருந்தது வார்த்தைகளில் வெளிப் பட்டுவிட்டது. பிரியங்காவும் அதைப் பெருந் தன்மையாக ஏற்றுக் கொண்டார். DONT WORRY. I'VE ALREADY FORGOTTEN EVERYTHING என்று கூறியிருக் கிறார்.
கே: இச்சந்திப்புக்குப் பிறகு நளினி விடுதலையாகும் வாய்ப்புள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அது சாத்தியம்தானா?
ப: பொதுவாக இந்திய சட்டப்படி ஆயுள் தண்டனை என்பது பத்து வருடம்தான்.
கொலைக்குற்றத்துக்காக தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு அது ஆயுள்தண் டனையாக மாற்றப்படும்போது குறைந்தபட்சம் பதினான்கு வருட சிறைவாசம் பெறுவர். பின்னர் அரசாங்கம் பார்த்து விடுதலை செய்யலாம்.
நளினியோ அதற்கு மேலாக சுமார் பதினேழு வருடங்கள் சிறையில் இருந்துவிட்டார். இந்தியாவில் எந்தவொரு பெண்மணியும் இவ்வளவு காலம் சிறையில் இருக்கவில்லை. எனவே அவரை விடுவிக்க வேண்டும் என்று சட்டரீதி யாகப் போராடி வருகிறேன். விரைவில் என் முயற்சிக்குப் பலன் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவரே குற்றம் சாட்டப்பட்டவரை நேரில் வந்து சந்தித்துப் பேசி ஆறுதலும் கூறிச்சென்றிருக்கிறார்.
எனவே நளினி விடுதலையாவதால் வேறு யாருக்கும் எந்தத் தீங்கும் ஆபத்தும் ஏற்பட வாய்ப்பில்லை. ஆகவே அவரை விடுதலை செய்வதற்கு அரசு தயங்கக்கூடாது என்பதே என் கருத்து.
கே: நளினியின் குடும்பத்தார் சமூகத்தால் புறக்கணிக்கப்படுவதாகவும், ஏழ்மையில் வாடுவதாகவும் வெளியான தகவல்கள் குறித்து?
ப: நளினியின் தாய் குடியிருக்க வீடு கூடக் கிடைக்காமல் அவதிப்படுகிறார். அவர் வீடு தேடிச் செல்லும்போதெல்லாம் ராஜீவ் கொலை யில் சம்பந்தப்பட்டவர் என்று கூறி வாடகைக்கு விட மறுக்கிறார்கள். ஒருவேளை விவரம் தெரியாமல் முதலில் வீடு கொடுத்தாலும், பின்னர் விவரம் தெரியும்போது வீட்டைக் காலி செய்யுமாறு நிர்ப்பந்திக்கிறார்கள்.
அதேபோல் நளினியின் அண்ணனுக்கு நிரந்தரமாக ஒரு உத்தியோகம் இல்லை. எங்கு வேலைக்குச் சென்றாலும் அவரைக் குற்றவாளியாகப் பார்த்து வேலை தர மறுக்கிறார்கள். நளினியின் தாயும், சகோதரரும் தவறு செய்ய வில்லை என்று நீதிமன்றமே கூறிவிட்ட போதிலும், மக்கள் அதை ஏற்கவில்லை. அவர்கள் மத்தியில் ராஜீவ்காந்தி கொலையால் ஏற்பட்ட பாதிப்பும் வெறுப்பும் இன்னும் மறையாமல் இருப்பதே இந்நிலைக்கு காரணம். ஆனால் பிரியங்காவின் சந்திப்புக்குப் பிறகு நிலைமை மாறும் என்று எதிர்பார்க்கலாம்.
கே: நீதிமன்றமே நளினி தரப்பில் குற்றம் நடந்திருப்பது உண்மை என்று கருதி அவருக்கு தண்டனை வழங்கியிருக்கிறது. அப்படியிருக்க நளினியை விடுவிக்க வேண்டும் என்று எந்த அடிப்படையில் நீண்ட காலமாகப் போராடி வருகிறீர்கள்?
ப: உண்மையில் பேரறிவாளனுக்காகத்தான் இந்த வழக்கில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். அதன் பிறகு ஒவ்வொருவருக்காகவும் வாதாடினேன். முதலில் விடுதலைப்புலிகள் இந்தத் தவறைச் செய்திருக்கமாட்டார்கள் என்று நான் நினைத்தேன். ஏனெனில் இப்படி யொரு காரியத்தைச் செய்தால் அவர்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும். அதனால் அவர்களால் இப்படிப்பட்ட காரியத்தைச் செய்திருக்க முடியாது எனக் கருதினேன்.
நளினி தவறு செய்தார் என்பது சரியல்ல.
நான் முன்பே குறிப்பிட்டதுபோல அவர் வெறும் கருவிதான். சதியை அரங்கேற்றிய சிவராசன், தனு, சுபா ஆகியோருடன் உடன்சென்றது மட்டும்தான் அவர் செய்த காரியம்.
மேலும் விடுதலைப்புலிகள் எதையும், எப்போதும் ரகசியமாக தங்கள் மேலிடத்தின் கட்டளைகளை ஏற்றுச் செயல்படுத்தக்கூடியவர்கள்.
எதையும் ரகசியமாகச் செய்வதில் புலிகளுக்கு நிகர் அவர்கள்தான். நாங்கள் இன்னதுதான் செய்யப் போகிறோம் என்று யாரிடமும் சொல்லிவிட்டுச் செய்யக்கூடியவர்கள் அல்ல.
எனவேதான் நளினிக்கு ராஜீவ் கொலை விஷயம் தெரிந்திருக்காது என்று உறுதியாக நம்பினேன். அந்த அடிப்படையில்தான் அவருக்காகப் போராடி வருகிறேன்.
கே: ராஜீவ் கொலையால் தமிழகமே கொந்தளித்துப் போயிருந்த நேரத்தில் நளினிக்காகக் குரல் கொடுத்திருக்கிறீர்கள். இதனால் உங்களுக்கு ஏதும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டனவா?
ப: ஒன்றா இரண்டா... எதைச் சொல்வது? நீதிமன்றத்தில் என்னைப் போலவே தோற்றம் கொண்ட சகவழக்கறிஞர் ஒருவரை காங்கிரஸ் கட்சியினர் அடித்து உதைத்தனர். சந்தர்ப்பவசத்தால் நான் தப்பித்தேன். அவர் சிக்கிக் கொண் டார். அந்நாட்களில் ராஜீவ் கொலையில் சம்பந் தப்பட்டிருப்பவர்கள் என்று சந்தேகிக்கப்படு பவர்களைப் பற்றி பேசினாலே அடித்து உதைக்கும் அளவுக்கு மக்கள் ஆவேசமாக இருந்தனர்.
சிறப்புப் புலனாய்வு அலுவலகத்துக்கு சென்று விட்டு பிறகு உயிருடன் வீடு திரும்புவேனா என்பதுகூட சந்தேகம் என்கிற நிலை காணப் பட்டது. பலமுறை என் வீட்டின் மீது கல்வீச்சு சம்பவம் நடந்துள்ளது.
ராஜீவ் கொலையைத் தொடர்ந்து ஜெயலலிதா அரசாங்கம் அமைந்தது. அத்தகையதொரு கடுமையான மாநில அரசாங்கம், புலிகளுக்கு எதிராகச் செயல்படும் மத்திய அரசாங்கம், இரும்புக்கரம் கொண்டுள்ள சி.பி.ஐ என அனைத்தையும் மீறி தைரியமாகச் செயல்பட்டேன். இத்தனை போராட்டங்களுக்கும், அச்சு றுத்தல்களுக்கும் மத்தியில் என் குடும்பத்தார் என் விருப்பப்படி செயல்பட முழு ஒத்துழைப்பை நல்கி வந்தனர்.
கே: நளினி விடுதலை செய்யப்பட வேண்டும் என வேறு சில அமைப்புகளும் கட்சிகளும் கூட தமிழகத்தில் குரல் கொடுத்தன. அப்படிப்பட்டவர்களில் யாராவது இது தொடர்பாக நீங்கள் நடத்தி வரும் வழக்கு களை தொடர்ந்து நடத்த பொருளாதார ரீதியில் உதவி செய்திருக்கிறார்களா?
ப: யாரும் சல்லிக்காசு கூட தரவில்லை. இது தான் உண்மை. எல்லோருமே தங்களின் ஆதா யத்துக்காக, இந்த விவகாரம் பற்றிப்பேசினால் தங்களுக்கு பெயர் கிடைக்கும் என்பதற்காகத் தான் பேசினார்களே தவிர, உண்மையில் யாருக்கும் நளினி விவகாரத்தில் அக்கறையே இல்லை. சரி... பணம் கூட தரவேண்டாம். குறைந்தபட்சம் தார்மீக அடிப்படையில் ஒரு அறிக்கையாவது வெளியிட்டிருக்கலாம். அதைக்கூட யாரும் செய்யவில்லை. நளினியை பொலிஸார் கொடுமைப்படுத்துகிறார்கள் என்று நான் கூறியபோதும்கூட யாரும் இதற்காகக் குரல் கொடுக்கவில்லை என்பது வேதனையான உண்மை.
கே: தமிழ்ச்செல்வன் இறந்தபோது கூட தமிழக முதல்வர் கருணாநிதி இரங்கல் கவிதை எழுதினார். அவர் புலிகள் மீது மறை முகமாகப்பற்றுக் கொண்டவர் என்கிற விமர்சனம் உண்டு. அது குறித்து?
ப: கலைஞர் மரியாதைக்குரிய ஒரு தலைவர் தமிழன் என்கிற இன உணர்வும், திராவிட உணர்வும் அவரது ஆழ்மனதில் பதிந்திருக்கிறது. ஆனால் அந்த உணர்வை அரசியல் எனும் மற்றொரு உணர்வைக் கொண்டு மூடி வைத் திருக்கிறார். எனினும் தமிழ்ச்செல்வன் மறைவு போன்ற சம்பவங்கள் நிகழும்போது அவரையும் அறியாமல் அரசியல் என்பது மறைந்து, திராவிடமும் இன உணர்வும் மேலோங்கி இப் படிப்பட்ட கவிதைகளை எழுதுகிறார்.
இப்படிக் கவிதை எழுதிய அடுத்த நாளே தன் அரசாங்கத்தின் சார்பாக ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார். தமிழ்ச்செல்வனுக்கு யாரும் இரங்கல் கூட்டம் நடத்தக்கூடாது என்று அறிவிக்கிறார். மேலும் தி.மு.கவைப் பொறுத்த வரை யில் விடுதலைப்புலிகளைப் பற்றி பேசினால் நமக்கு தொந்தரவுதான் மிஞ்சும் என்று நினைப் பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம்
கே: ராகுலைப் பிரதமராக்குவதற்கும், தங்கள் குடும்பம் மனிதநேயமிக்கது என்பதைப் பறைசாற்றிக் கொள்ளவும்தான் நளினியை பிரியங்கா சந்தித்திருக்கிறார் என்றும், இதன் மூலம் அக்குடும்பம் அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறது என்றும் கூறப்படுவது குறித்து?
ப: எந்த நோக்கத்துக்காக இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது என்பதை ஆராய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. எல்லோரும் அதை மறந்துவிடுவது நல்லது. மாறாக பிரியங்கா வின் செயலைப் பாராட்ட வேண்டும் என்பது தான் என் கருத்து. தன் தந்தையைக் கொன்ற தாக நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டு தண் டனை அனுபவிக்கும் ஒருவரைச் சந்தித்து சகஜமாகப் பேசுவதும், அவரை மன்னித்துவிட் டதாகச் சொல்வதும் ஒப்பீடு செய்ய முடியாத அளவு மகத்தான காரியம்.

No comments:
Post a Comment