மடு ஆலயத்திலிருந்து பரிபாலகர்கள் வெளியேறிய பின்னர் ஆலய வளாகத்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த புலிகளும் படையினரும் ஆலய புனித தன்மைகளை மதித்துள்ளனர் என்று மடு ஆலயத்துக்கு நேரடியாக சென்று திரும்பியுள்ள மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அந்தோனி விக்டர் சோசை தெரிவித்தார்.
மடு அன்னையின் பிரதான ஆலயத்துக்கு இடப்பக்கமாக அமைந்துள்ள திரு இருதய ஆலயம் முற்றாக சேதம் அடைந்துள்ளதுடன் குருக்கள் வசிக்கும் இடமும் சேதமாகியுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பணிப்பின் பேரில் மடு ஆலயத்துக்கு சனிக்கிழமை சென்று திரும்பியுள்ள அவர் ஆலய பகுதியின் நிலைகுறித்து மேலும் தெரிவித்ததாவது: நாங்கள் சனிக்கிழமை பிற்பகல் 1 1/2 மணிக்கு ஆலயத்தை அடைந்தோம். நான் சென்றதும் பூட்டப்பட்டிருந்த தேவாலய கதவை என்னை திறக்கும்படி படையினர் பணித்தனர். குருக்கள் சென்றபோது பூட்டப்பட்ட அந்த கதவை நான் திறந்ததும் ஆலயத்தை முத்தம் செய்து சில நிமிடம் ஜெபித்தேன். அந்நேரத்தில் என்னுடன் ஆலயத்துக்குள் வந்த வன்னிபிராந்திய தளபதி, மடு களமுனை தளபதி சேனரத் பண்டார ஆகியோரும் எனக்கு பின்னால் வணக்கம் செலுத்தினர். பின் கோவிலை சுற்றி பார்க்க புறப்பட்டோம். மடு அன்னையின் பிரதான ஆலயத்துக்கு இடது பக்கமாக அமைந்துள்ள திரு இருதய ஆண்டவரின் சிற்றாலயம் முற்றாக சேதமாக்கப்பட்டிருந்தது. நற்கருணை நாதர் சிற்றாலயத்திலும் ஷெல் வீழ்ந்து யன்னல் கதவுகள் எல்லாம் பாதிப்பு அடைந்திருந்த நிலையில் காணப்பட்டன.
மடு, அன்னைக்கு பக்தர்கள் மெழுகுதிரி ஏற்றும் இடமும் ஷெல் வீச்சு காரணமாக முற்றாக சேதம் அடைந்திருந்தது. அத்துடன் குருக்கள் தங்கும் இடமும் ஷெல் வீச்சுக் காரணமாக பாதிப்பு அடைந்திருந்தன.
குருக்கள் வெளியேறியபின் விட்டுச் சென்றபின் பொருட்களை சரிபார்ப்பதற்காக என்னுடன் எடுத்துச் சென்ற விபரப்பட்டியலுடன் பொருட்களை சரிபார்த்தேன். அதன்படி அங்கு சகல பொருட்களும் வைத்த மாதிரியே இருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
அங்கே ஒரு முக்கியமான விடயத்தையும் கவனித்தேன். பூட்டப்பட்டிருந்த கோயிலின் சகல கதவுகளிலும், யன்னல்களிலும் போராளிகளின் கவனத்துக்கு என அறிவித்தல் போடப்பட்டிருந்தது. அதாவது ஆலயத்துக்கான மதிப்பு, பொருட்கள், பாதுகாப்பு விடயமாகவே அந்த அறிவித்தல்கள் அமைந்திருந்தன.
இதேபோன்று இராணுவமும் தாங்கள் அவ் இடத்துக்கு சென்றதும் கோவிலுக்குள் செல்லாது போராளிகள் போன்று ஆலய புனிதத்துவத்தையும் பொருட்களையும் மதித்துள்ளனர்.
ஆலய பிரதான இடங்களை மட்டும் பார்வையிடக்கூடியதாக இருந்தது. ஆனால், சகல இடங்களையும் பூரணமாக சுற்றி பார்க்க முடியவில்லை. காரணம் சில நேரம் கண்ணிவெடிகள் இருக்குமோ என்ற ஐயப்பாடுகள் பாதுகாப்பு படையினரிடம் இருந்ததாலேயே முழுமையாக ஆலய வளாகத்தை சுற்றிபார்க்க முடியவில்லை. சுமார் ஒருமணி நேரம் அங்கு நின்று பார்வையிட்ட பின்னர் மன்னார் திரும்பினோம்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment