மடுவை சமாதான வலயமாகப் பிரகடனப்படுத்துமாறு கோரி விடுதலைப் புலிகளிடம் மகஜர் கையளிக்கப்பட்டது
மடுப்பகுதியை சமாதான வலயமாக பிரகடனப்படுத்துமாறு கோரி மக்களிடம் பெறப்பட்ட கையெழுத்துக்கள் அடங்கிய மகஜர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை கிளிநொச்சிக்குச் சென்ற மன்னார் மாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்றர் சூசை தலைமையிலான குழுவினர், மகஜரை விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளரிடம் கையளித்தனர். மடுப்பிரதேசம் சமாதான வலயமாக பிரகடனப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் அங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.
மடுத்திருத்தலத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு தற்போது தேவன்பிட்டி ஆலயத்தில் வைக்கப்பட்டிருக்கும் மடு அன்னையின் திருச்சொரூபத்தை மீண்டும் மடு திருத்தலத்தில் கொலு ஏற்றுவதற்கு விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தேவையான, முழுமையான ஒத்துழைப்பை வழங்க முன்வர வேண்டும் என்றும் குரு முதல்வர் தலைமையிலான குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மடுப்பிரதேசத்தில் யுத்த நடவடிக்கைகளை நிறுத்தி அப்பகுதியை சமாதான வலயமாக பிரகடனப்படுத்த அரசும் விடுதலைப்புலிகளும் முன்வர வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தி மன்னார் மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் இம்மாதம் 06ஆம் திகதி ஞாயிறு தினத்தன்று திருப்பலியின் முடிவில் மக்களிடம் கையெழுத்து வேட்டை நடாத்தப்பட்டிருந்தது.
இவ்வாறு பெறப்பட்ட ஏறத்தாழ 20,000 கையெழுத்துக்களுடன் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்றர் சோசை அடிகளார் தலைமையில் முன்னால் குருமுதல்வர் அருட்தந்தை சேவியர் குரூஸ் அடிகளார் மற்றும் மன்னார் புனித செபஸ்ரியார் பேராலய பங்குத்தந்தை தேவறாஜா கொடுதோர் ஆகியோர் கிளிநொச்சி சென்றிருந்தனர்.
இதேவேளை, மன்னார் மக்கள் சந்தித்துவரும் சமகால பிரச்சினைகள் தொடர்பாக நல்லெண்ண தூதுக்குழுவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மதங்களுக்கு இடையிலான நல்லெண்ண தூதுக் குழுவினர் தென்பகுதியில் இருந்து மன்னாருக்கான நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ளனர். பௌத்த, கத்தோலிக்க அங்கிலிக்கன் திருச்சபையைச் சேர்ந்த மதத் தலைவர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழுவினர் மன்னாரில் உள்ள சிவில் சமூக அமைப்பு, வர்த்தக, மீன்பிடிச்சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளனர்.
மேற்படி கலந்துரையாடலின்போது அண்மைக்காலங்களாக மன்னாரில் இருந்து நாட்டின் தென்பகுதிக்கான போக்குவரத்துக்களின்போது இடம்பெறுகின்ற கெடுபிடிகள் அத்தியாவசியப் பொருட்களை மன்னாருக்கு எடுத்துவருவதில் ஏற்படுத்தப்படுகின்ற தடைகள் மற்றும் கடல் தொழிலுக்குச் செல்லும் மீனவர்கள் மீது விதிக்கப்பட்டிருக்கின்ற கட்டுப்பாடுக்ள எரிபொருள்களை சீராக பெற்றுக் கொள்வதில் உள்ள குறைபாடுகள் தொடர்பாகவும் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கின்றது
Saturday, April 19, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment