Saturday, April 19, 2008

சமாதான பிரியங்கா... சோனியாவின் அரசியல் தந்திரம்!

ஒரே நாளில் பிரியங்கா, ராகுல் காந்தி இருவரும் மீடியாவின் ஒட்டுமொத்த கவனத்தையும் தங்கள் பக்கம் ஈர்த்து விட்டார்கள்.

காங்கிரஸ் கட்சித் தலைவியின்மகள் என்பதுதான் பிரியங்காவின் ஒரே அடை யாளம். மற்றபடி தன்மீது அரசியல் சாயம் படிந்துவிடாதபடி கவனத்துடன் இருப்பவர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக சிறையில் இருக்கும் நளினியை அவர் சந்தித்தது எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது .

அதேசமயம், இது பி.ஜே.பி-க்குஎதிராக நடத்தப்பட்ட நாடகம் என்கிற கருத்து டெல்லி அரசியல் வட்டாரத்தில் நிலவுகிறது.

பிரியங்கா-நளினி சந்திப்பும் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என்று கூட்டணி கட்சித் தலைவர்கள் அறிவித்ததும்
பி.ஜே.பி-யின் பிரதமர் வேட்பாளருக்கு வைக்கப்பட்ட செக் என்கிறார்கள்.
பிரியங்காவை இந்திரா காந்தியோடு ஒப்பிட்டுப் பேசினார் ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர். எமர்ஜென்ஸியைக் கொண்டு வந்ததால் இழந்த ஆட்சியை இரண்டே ஆண்டில் மீட்டு மறுபடியும் பிரதமராகி, தன்னை அசைக்க எதனாலும் முடியாது என்று காட்டியவர் இந்திரா காந்தி.

அப்போது தங்கள் பெயருக்கு முன்னால் அடைமொழியாக 'மிசா' என்று போட்டுக்கொண்டு இந்திராவின் அடக்குமுறைப் போக்கைத் தாங்கள் மறக்கவில்லை என்று தி.மு.க-வினர் காட்டினார்கள். பிற்பாடு, 'நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக' என்று கருணாநிதியையே சொல்ல வைத்தவர் இந்திரா.
'பாட்டிக்கு தான் சளைத்தவர் இல்லை' என்று பிரியங்கா நிரூபித்திருக்கிறார்.

ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் படுகொலை செய்யப்பட்டு அவருடைய உடல் சென்னை விமான நிலையத்தில் வி.வி.ஐ.பி. அறையில் வைக்கப்பட்டிருந்தது. சோனியா காந்தி சராசரி உணர்வுகள் கொண்ட ஒரு மனைவியாக அழுதபடி அந்த சவப்பெட்டியையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். பிரியங்காதான் அங்கு மிங்கும் பரபரப்பாக ஓடியாடி உடலை எப்படி டெல்லிக்கு எடுத்துச் செல்வது என்று மூப்பனார் போன்ற தலைவர்களிடம் ஆலோசித்துக்கொண்டு இருந்தார். அப்போது ஜனாதிபதியின் தனி விமானத்தில் ராஜீவ் உடலைக் கொண்டு செல்லலாம் என்று ஒரு யோசனை சொல்லப்பட்டது. அப்போது ஜனாதிபதியாக இருந்தவர் ஆர்.வெங்கட்ராமன். அவருக்கு போன் போட்டார் பிரியங்கா.
ராஜீவ் ஒரு தொகுதியின் வேட்பாளர்தான். அவருக்குத் தனி விமான வசதி கொடுத் தால் அது சர்ச்சைக்கு வித்திட்டுவிடுமோ என்று யோசித்த ஆர்.வி., சிறிது நேரத்தில் தானே அழைப் பதாகச் சொன்னார். மீண்டும் அவரைத் தொடர்புகொண்டு விமானம் வருகிற விவரத்தைத் தெரிந்துகொண்ட பிறகுதான் பிரியங்கா அமைதியானார்.

பிரியங்காவின் கணவர் வதேராவின் குடும்பம் வியாபாரக் குடும்பம். அவர்கள் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சோனியா, பிரியங்கா பெயரைப் பயன்படுத்தி சலுகை பெறுகிறார்கள் என்ற செய்தி பிரியங்காவின் காதுக்கு எட்டியதும் காங்கிரஸ் அரசு வதேரா குடும்பத்துக்கு எந்தச் சலுகையும் தரக் கூடாது என்று உத்தரவிட்டார்.
கட்சியின் அடிப்படை உறுப் பினர்கூட அல்லாத பிரியங்கா, சோனியாவின் தலைமைத் தேர்தல் ஏஜென்ட்டாகப் பணிபுரிந்து அதிக வாக்கு வித்தியாசத்தில் சோனியாவை ஜெயிக்க வைத்தார்.
'தன் தகப்பனார் கொல்லப்பட்டது ஏன்..?' என்கிற கேள்வி பிரியங்காவின் மனதைக் குடைந்துகொண்டே இருந்தது. இது தொடர்பாக, இலங்கைக்குச் சென்ற இந்திய அமைதிப்படை ராணுவ உயரதிகாரிகளிடம் பேசினார். இலங்கைத் தமிழர்களின் பிரச்னைகள், அதில் இந்தியாவின் பங்கு, ராஜீவ் காந்தி இலங்கைத் தமிழர் நலனுக்காகச் செய்தவை போன்ற விவரங்களை, பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். அதன்பிறகு, நளினியைச் சந்திக்கும் எண்ணம் அவருக்கு வந்திருக்கிறது. சோனியாவுக்கு நளினி தொடர்ந்து கடிதம் எழுதிவந்ததும் இதற்கு ஒரு காரணம்.

நளினி குழந்தையின் எதிர்காலம் கருதித்தான் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைய சோனியா உதவினார். இதனால்தான் சோனியாவுக்குத் தொடர்ந்து கடிதங்கள் எழுதிவந்தார் நளினி.
சோனியா, ராகுல் காந்தி, பிரதமர், பாதுகாப்பு ஆலோசகர் என்ற சிறு வட்டத்துக்கு மட்டுமே பிரியங்கா-நளினி சந்திப்பு முன்கூட்டித் தெரியும்.

தமிழகத்தில் முதல்வர், சில உயர்மட்ட அதிகாரிகள் ஆகியோருக்கு இந்த விஷயம் தெரியுமென்றாலும், இதை ரகசியமாக வைக்கும்படி பிரியங்கா தரப்பில் கேட்டுக் கொண்டதால் மௌனம் சாதிக்கிறார்கள்.
இந்த விசிட்டுக்கு முன்னதாக, எஸ்.பி.ஜி. படைத் தலைவர் வேலூருக்கு வந்து ஏற்பாடு களைக் கவனித்தார். பிரியங்காவின் படத்தைக் காட்டி இவர் உங்களை சந்திக்க விரும்புகிறார் என்று சொல்லி நளினியிடம் சம்மதம் வாங்கப்பட்டது.
ஆனால், ஜெயில் அதிகாரிக்குத் தரப்பட்ட விண்ணப்ப மனுவில் பிரியங்கா என்பதற்குப் பதிலாக வேறு ஒரு பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
பிரியங்கா-நளினி ரகசிய சந்திப்பு பத்திரிகை மூலம் வெட்ட வெளிச்சமானதும், பிரியங்கா அதை ஒப்புக்கொண்டு சஸ்பென்ஸை உடைத்துவிட்டார்.
தன் மாமியாரைக் கொன்றது ஒரு சீக்கியர் என்றாலும், தான் அமர வேண்டிய பிரதமர் நாற்காலியில் மன்மோகன் சிங்கை உட்கார வைத்தவர் சோனியா. பிரியங்காவோ, 'எங்களைப் பொறுத்தவரை நாங்கள் யாரையும் எதிரிகளாக நினைப்பதில்லை. எல்லோ ரையும் மதிக்கும் பண்பு எங்களுக்கு என்றும் உண்டு' என்று உணர்த்திவிட்டார். ராஜீவ் கொலை யாளிகள் என்பதற்காக இலங்கைத் தமிழர்களுக்கு உதவ காங்கிரஸ் அரசு தயங்குகிறது என்ற வீண் பழியை சோனியா குடும்பத்தின் மீது இனி போட முடியாது. இந்த சந்திப்பால் காங்கிரஸ் கட்சியின் இமேஜ் உயர்ந்திருப்பது உண்மை.


இந்நிலையில், ராகுல் காந்தியைப் பிரதமராக ஏற்கத் தயார் என்று அர்ஜுன் சிங் முன்மொழிய, அதை சரத்பவார், கருணாநிதி எல்லாம் வழிமொழிந்தனர். ஆனால், சோனியா வேறு மாதிரி யோசித்தார். ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என்றால் இப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மரியாதை இல்லாமல் போய் விடுமே... தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் இருக்கும்போது இப்போதே ராகுல்தான் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கவேண்டிய அவசியம் இல்லை என்றெல்லாம் யோசித்து இந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினார் சோனியா.
ராகுல் காந்தி குறித்த சர்ச்சை எழுந்ததும் ஜெயந்தி நடராஜன் ஒரு அறிக்கை கொடுத் தார். அதில் சோனியா ஒப்புதலுடன் எழுதப் பட்ட முக்கியமான வாசகம் - 'துதிபாடி களிடமிருந்து சோனியா, ராகுல் இருவரும் விலகி இருக்க விரும்புகிறார்கள்' என்பதுதான்.

எந்த விஷயத்திலும் அவசரம் வேண்டாம் என்பதுதான் சோனியா வின் நிலைப்பாடு.
பிரியங்கா-நளினி சந்திப்பு, ராகுல் காந்தி விஷயம் இரண்டையும் சோனியா சரியான தருணத்தில் பயன்படுத்துவார் என்கிறார்கள்.

அத்வானி, மாயாவதி எல்லாம் பதில் சொல்லு மளவுக்கு ராகுல் காந்தி வளர்ந்துவிட்டார். இப்போது ராகுல் காந்தியை இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்யச் சொல்லியிருக்கிறார் சோனியா. பாதுகாப்பு வளையத்தை உடைத்துத் தொண்டர்களுடன் நெருக்கமாகி தனக்கு என்று ஒரு வாக்கு வங்கியை உருவாக்குவதுதான் திட்டம்.
எதிர்க்கட்சியினர் விலைவாசி உயர்வு என்கிற அஸ்திரத்தைப் பயன்படுத்தும்போது பிரியங்கா, ராகுலின் இமேஜைக் கேடயமாகப் பயன்படுத்தி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்பது சோனியாவின் திட்டம். இவருடைய மூவ்கள் அத்வானி முகாமை அதிர வைத்திருக்கிறது என்பதும் நிஜம்.


விரைவில் விடுதலையா?
ராஜீவ் கொலையாளிகளில் சரளமாக ஆங்கிலத்தில் பேச, எழுதத் தெரிந்தவர் நளினி ஒருவர்தான். சோனியாவுக்கு நளினி எழுதிய பல கடிதங்களுக்குப் பலன் கிடைத்தது. தூக்கு தண்டனைக் கைதியான நளினியை ஆயுள்தண்டனைக் கைதியாக்க சோனியா எடுத்துக்கொண்ட முயற்சிகள் எல்லாமே நளினியின் கடிதங்களுக்குக் கிடைத்த பலன்தான். கடந்த ஜனவரி மாதம் சோனியா காந்தி நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்க, அப்போது நளினி அவர் உடல் நலம் தேற உருக்கமாக கடிதம் எழுதினாராம். இந்தக் கடிதங்கள் எல்லாம் சோனியாவின் கவனத்துக்கு வந்தன. அடுத்து, நளினி தன்னுடைய குழந்தையை காண முடியாமல் இருப்பது பற்றியும் சோனியாவுக்கு நீண்ட கடிதம் எழுதியிருக்கிறார். பதினேழு வயதாகப்போகும் தன் மகள் இன்னும் சில வருடங்களில் திருமண வயதை எட்ட இருப்பது உட்பட பல விஷயங்களைத் தன் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறாராம் நளினி. அடுத்து தன்னைப் போன்று தன்னுடைய கணவர் முருகன் மற்றும் சாந்தன், பேரறிவாளன் போன்றவர்களுக்கும் தூக்கு தண்டனையிலிருந்து மன்னிப்பு வழங்கக் கோரியும் நளினி கடிதமெழுதியிருக்கிறாராம். இந்தப் பின்னணியில்தான் பிரியங்கா வேலூர் சென்று தன் தந்தையின் கொலையைப் பற்றியும், கொலையாளிகளின் மனதையும் அறிய முற்பட்டிருக்கிறார் என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில்.
ராஜீவ் கொலை வழக்கில் இறுதியாக உச்ச நீதிமன்றத்தில் நான்கு பேர்களுக்குத் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதில் சோனியாவின் வேண்டுகோளை அடுத்து நளினியின் தூக்கு தண்டனை - ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது. பேரறிவாளன், முருகன், சாந்தன் போன்றவர்களுக்குத் தூக்கு தண்டனை உறுதியாக, அவர்கள் ஜனாதிபதிக்குக் கருணை மனுக் கொடுத்தனர். கிட்டத்தட்ட மூன்று ஜனாதிபதிகள் மாறியும் கருணை மனு மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தமிழகத்தில் உள்ள சில ஆளுங்கட்சிப் பிரமுகர்களும் இந்தக் குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்க முயற்சி செய்வதாகவும் தகவல். ஆனால், முதல்வர் தலையிட மறுக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. தற்போது ஜனாதிபதியாக இருக்கும் பிரதீபா பாட்டீல் சோனியாவின் பேச்சுக்கு செவிசாய்ப்பவர் என்பதால் இப்படியரு முயற்சி எடுக்கிறார்களாம்.

இதே கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் போன்றவர்களுக்கு நன்னடத்தையின் அடிப்படையில் விடுதலை கொடுக்கவேண்டும் என்றும் கோரிக்கைகள் எழத் துவங்கியிருக்கின்றன. ஆனால், இதற்காக அமைக்கப்பட்ட கமிட்டி இவர்களின் கோரிக்கைகளை நிராகரித்து, 'இவர்களை விடுதலை செய்யும்பட்சத்தில் மீண்டும் புலிகளுடன் சேர்ந்து சதித்திட்டங்களில் ஈடுபடுவார்கள்' என்று சொல்லியிருக்கிறது.

விகடன்

No comments: