Friday, April 18, 2008

மாகாணசபை முன்னாள் உறுப்பினரின் மரணச் சடங்கில் பங்கேற்ற தமிழ்ப் பெண் கைது

இரத்தினபுரி வெரஹப்பே பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை சந்தேகத்தின் பேரில் ஒரு தமிழ்ப் பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவரென தாம் சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முன்னாள் சப்ரகமுவ மாகாண சபையின் பொதுஜன ஐக்கிய முன்னணி உறுப்பினரும், ஷ்ரீ.ல.சு.கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், அக்கட்சியின் ஆலோசகர்களுள் ஒருவருமான பியதாச பெலந்தகம கடந்த வாரம் மாரடைப்பினால் உயிரிழந்தார்.

அன்னாரின் இறுதிச்சடங்கு நேற்று வியாழக்கிழமை இரத்தினபுரி வெரஹப்பே பகுதியில் இடம்பெற்றது. இந்த மரணச்சடங்கில் கலந்துகொள்ள வந்தபோதே இப்பெண் கைது செய்யப்பட்டதாகவும், இவரிடம் தான் யாரென்பதனை நிரூபிக்கக்கூடிய ஆவணங்கள் எதுவுமில்லையென இரத்தினபுரி விஷேட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த மரணச்சடங்கில் அமைச்சர்கள், ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்கள், இரத்தினபுரி மாவட்ட அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களும் கலந்துகொண்டனர். இவர்களில் ஒருவரை குறிவைத்து தற்கொலைத் தாக்குதல் நடாத்தும் பொருட்டு இவர் இங்கு அனுப்பப்பட்டிருக்கலாம். என சந்தேகம் தெரிவிக்கும் பொலிஸார் சிவிலுடையில் பாதுகாப்புக் கடமையிலிருந்த இராணுவத்தினரே சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இப்பெண்ணை கைதுசெய்து தம்மிடம் ஒப்படைத்ததாகவும் கூறினர்.

இப்பெண்ணுக்கு 40 வயது இருக்குமெனவும் இப்பெண் அவ்வப்போது வெளிநாடு சென்று திரும்பியவர் எனவும் தெரிவிக்கும் பொலிஸார் இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

[18 - April - 2008] Thinakkural

No comments: