Friday, April 18, 2008

வைகோ புலிகளின் பேச்சாளரென்பது அறிந்த விடயம் என்கிறார் ஹெகலிய

பயங்கரவாத அமைப்பென விடுதலைப்புலிகளை இந்தியா பட்டியலிட்டிருக்கின்ற போதும், தமிழக அரசியல்வாதியான வைகோ புலிகளின் அனுதாபியாகவும் ஆதரவாளராகவும் பேச்சாளராகவும் இருப்பது அறிந்ததொன்றே என்று பாதுகாப்பு விவகாரப் பேச்சாளரும் அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெல கூறியுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை கொழும்பில் தேசிய பாதுகாப்புக்கான ஊடக நிலையத்தில் இடம் பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அமைச்சர் ஹெகலிய மேலும் இது தொடர்பாகக் கூறியதாவது,

ஒஸ்லோவில் அண்மையில் இடம்பெற்ற சர்வதேச மாநாட்டில் வைகோ உரையாற்றியுள்ளார். வட, கிழக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியதன் மூலம் புலிகள் தவறு இழைத்திருக்கக் கூடுமென அவர் கூறியுள்ளார். ஆனால் 24 மணி நேரத்தில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தமது இருப்பிடங்களுக்கு மீண்டும் திரும்பிச்செல்ல அனுமதிக்கப்படவில்லை என்பதை விளங்கிக் கொண்டிருப்பது அவசியமாகும். பேச்சுவார்த்தை மேசைக்குச் செல்வதற்கான வழிவகைகளை மேற்கொள்ளுமாறு சர்வதேச சமூகம் அரசை வலியுறுத்துகின்றது. அவ்வாறாயின் சகல சமூகங்கள் மத்தியிலும் அமைதிநிலை ஏற்படவேண்டும்.

எவ்வாறெனினும் புலிகளின் பேச்சாளரென அறியப்பட்ட வைகோ முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம் குறித்து தெளிவுபடுத்தியிருக்கிறார். விடுதலைப்புலிகளுக்கு பேச்சுவார்த்தை மேசைக்குச் செல்வது நோக்கமல்ல என்பதும் சகல சமூகங்களும் பிரஜைகள் என்பதை ஏற்றுக்கொள்வதும் புலிகளின் நோக்கம் அல்ல என்பதும் தெளிவானதாகும்.

இதேவேளை, கிழக்கை விடுவித்த பாதுகாப்புப் படையினர் வடக்கில் மடுத்தேவாலயப் பகுதியின் வடக்குத் தெற்குப் பகுதிகளை விடுவித்திருக்கின்றனர். ஆனால் மடுத்தேவாலயம் அமைந்திருக்கும் மேற்குப் பகுதியை தவிர்த்துள்ளனர். புனித சொரூபம் தொடர்பான மத ரீதியான தாற்பரியத்தை உணர்ந்தே பாதுகாப்புப் படையினர் பொறுப்புடன் செயற்படுகின்றனர். புனித சொரூபத்தை தேவாலயத்திற்குப் பொறுப்பானவர்கள் ஏன் அகற்றினர் என்பதற்கான காரணங்களையிட்டு அரசுக்கு குழப்பமாகவுள்ளது. திருச்சொரூபம் புலிகளின் நடவடிக்கைகள் இடம்பெறும் பகுதிக்கு அதாவது 70 கிலோமீற்றர் தூரத்திற்கு கொண்டுசெல்லப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் ஹெகலிய கூறியுள்ளார்.

[18 - April - 2008]தினக்குரல்

No comments: