Wednesday, April 23, 2008

மனித இனத்தை அழித்து அகதிகளாக்கிய யுத்தம் இன்று உலகமாதாவையே இடம்பெயர வைத்து விட்டது

இந்நிலைமாற வேண்டுமென மட்டு. பல்சமய சமாதான ஒன்றியம் வேண்டுகோள்

இதுவரையில் மனித இனத்தை மட்டும் அழித்து அகதிகளாக்கிய யுத்தம் இன்று அதன் உச்சகட்டமாக உலகமாதாவாகிய அன்னை மடுமாதாவையே இடம்பெயரச் செய்துள்ளது.
இந்நிலை மாறி தேவன்பிட்டியிலிருந்து மீண்டும் மடுவிற்கு மாதாவின் திருவுருவச் சிலை கொண்டு வரப்பட வேண்டும் இவ் வாறு மட்டு. மாவட்ட பல்சமய சமாதானத் திற்கான ஒன்றியத்தின் பாதிப்புற்ற மக்களுக் கான பணிமன்றம் விடுத்துள்ள வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இறைவனின் பெயரால் போரை உடன் நிறுத்துங்கள். சமாதானப் பேச்சுக்களை உடன் தொடங்குங்கள். மனித இனத்தின் வாழ்வுக்கு ஒரு உறுதிப்பாட்டைத் தாருங் கள்.

ஒல்லாந்தரின் படையெடுப்பால் மாந்தையில் இருந்த மாதா உருவச்சிலை மடுக்காட்டிற்குள் வந்து தஞ்சமடைந்தது போன்ற வரலாற்றுப் பழி ஏற்படாது மாதாவின் திரு உருவச்சிலை திரும்பவும் மடுவுக்கு வந்து பழைய நிலை உருவாக உதவுங்கள்.

இலங்கை வாழ் சகல இன மக்களாலும் கௌரவித்துப் போற்றப்படுபவர் மடுத் திருத்தலத்தில் கருணை மழை பொழியும் அன்னை மடுமாதா. கடந்த மூன்று தசாப்தங்களாக பல உயிர்களையும் உடமைகளையும் கொள்ளை கொண்ட இப் பயங்கர யுத்தம் இலட்சக்கணக்கான மக்களை சொந்த இடங்களை விட்டுத் துரத்தியுள்ள வேதனைச் சம்பவம் எல்லோர் உள்ளத்திலும் ஆழமாக வேரூன்றியுள்ளது.

மனித இனத்தினை மட்டும் அழித்து அகதிகளாக்கிய யுத்தம் அதன் உச்ச கட்டமாக உலக மாதாவாகிய அன்னை மடுமாதா வையே இன்று இடம்பெயரச் செய்துள்ளது.

இது கடந்த சில காலமாக மாதா சிலைகள் இரத்தக் கண்ணீர் வடித்தது இதற்காகத்தானா என எண்ணத் தோன்றுகிறது.

எனவே இலங்கை வாழ் சகல இன மக்களும் இக் கொடிய போரினை நிறுத்த இறைவனைப் பிரார்த்திக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

No comments: