Wednesday, April 23, 2008

புலிகளிடம் கூறுங்கள்

எங்கள் குடும்பம் மீது வெறுப்பேதும் இருந்தால் அதை மறந்துவிடும்படி புலிகளிடம் கூறுங்கள்

நளினியுடனான சந்திப்பின் போது பிரியங்கா கோரிக்கை விடுத்ததாக வக்கீல்கள் தகவல்


ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நளினியை பிரியங்கா சந்தித்த போது என்ன பேசிக் கொண்டார்கள் என நளினி தனது வக்கீல்களான துரைசாமி மற்றும் இளங் கோவனிடம் தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
அதன் பிரகாரம் இச்சந்திப்பின் போது விடுதலைப் புலிகள் தொடர்பான சில விடயங்களைக் கேட்டுக் கொண்ட பின்னர், பிரியங்கா, எனது தந்தைக்கு நேர்ந்த கதி இனியும் எனது குடும்பத்தினருக்கு நேரக் கூடாது எனவும் விடுதலைப் புலிகளுக்கு இப்போது எனது குடும்பத்தினர் மீது ஏதேனும் வெறுப்பிருந்தால் அதனை மறந்து விடும்படிக் கூறுங்கள் எனவும் தன்னிடம் வேண்டுகோள் விடுத்ததாக நளினி தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா கடந்த மாதம் 19ஆம் திகதியன்று வேலூர் சிறையில் உள்ள நளினையைச் சந்தித்துள்ளார். இச்சந்திப்பின் பின்னணி குறித்து பல தரப்பிலும் இருந்து பல்வேறு ஊகங்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் இக்கொலை வழக்கில் தொடர்புபட்ட நளினி அவருடைய கணவர் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு சட்ட ரீதியான உதவிகளை மேற்கொண்டு வரும் வக்கீல் துரைசாமி மற்றும் இளங்கோ வன் ஆகியோர் இவர்களுடன் மேற்கொண்ட சந்திப்பின் போது நளினியுடன் பிரியங்கா என்ன பேசினார் என்பது குறித்து வினவியுள்ளனர். அதற்கு அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் இச்சந்திப்புக் குறித்து இவ்வழக்குடன் சம்பந்தப்பட்ட ஏனைய கைதிகள் சோனியாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். நளினியின் கணவர் முருகன் எழுதிய கடிதத்தில் உங்கள் அன்புக்கும் அமைதிப் பணிகளுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறி அவர் பொது மக்களுடன் பழகும் விதத்தையும் பாராட்டியுள்ளார்.

கைதி சாந்தன் பிரியங்காவுக்கு எழுதிய கடிதத்தில் உங்கள் வருகை வேலூர் சிறைக் கைதிகளை கௌரவப்படுத்தியது போலுள்ளது.

1983ஆம் ஆண்டு இலங்கைத் தமிழர்கள் மீது இந்திரா காந்தி காட்டிய பாசத்தால் அவர் மீது எனக்கு மாறாத அன்பு உண்டு. நீங்களும் இந்திராகாந்தி போலவே இருகின்றீர்கள் எனத் தெரிவித்துளார்.

மேலும் பிரியங்கா நளினி சந்திப்பின் பின்னர் நளினிக்கும் முருகனுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் முருகன் சிறையில் உண்ணாவிரதம் இருப்பதாகவும் வெளியான செய்திகள் அனைத்தும் பொய்யெனவும் இச்செய்தி தன்னை வேதனைப்படுத்தியதாகவும் முருகன் தெரிவித்துள்ளார். மேலும் கைதிகளை சந்தித்த பின்னர் வக்கீல்கள் நிருபர்களிடம் தெரிவிக்கையில் 17 ஆண்டுகளாக சிறையில் உள்ள நளினியை விரைவில் விடுதலை செய்ய வற்புறுத்தி இன்று (நேற்று) உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்போவதாகவும் தெரிவித் துள்ளனர்.

No comments: