Saturday, April 19, 2008

சிதறிப்பறந்த தமிழரின் கடவுச்சீட்டுக்கள்

குண்டுப் புரளியை ஏற்படுத்திய பொதியை வெடிக்க வைத்தபோது சிதறிப் பறந்த தமிழரின் கடவுச் சீட்டுக்களை பொலிஸார் பார்வையிடுவதைக் காணலாம்.







குண்டுப் புரளியை ஏற்படுத்திய பொதியை வெடிக்க வைத்தபோது சிதறிப்பறந்த தமிழரின் கடவுச்சீட்டுக்கள்

கொழும்பு வார்ட் பிளேஸில் குண்டுப் புரளியை ஏற்படுத்திய சிறிய
பொதியொன்றை படையினர் வெடிக்க வைத்து சோதனையிட்டபோது
தமிழர்களுக்குச் சொந்தமான பல கடவுச் சீட்டுக்கள் சின்னாபின்னமாகிய
சம்பவமொன்று நேற்று வெள்ளிக் கிழமை மாலை நடைபெற்றுள்ளது.

கொழும்பு-7 வார்ட் பிளேஸ் பகுதியில் நேற்று மாலை குண்டுப் புரளியொன்று
கிளப்பப்பட்டது. வீதியோரத்தில் கிடந்த சிறிய பொதியொன்றே இந்தப் பரபரப்புக்கு
காரணமாயிருக்க அது பற்றி அறிந்த பொலிஸார் அவ்விடத்திற்கு வந்து
சேர்ந்ததுடன் குண்டு செயலிழக்க வைக்கும் படையினருக்கும் அறிவித்தனர்.

இதேநேரம் அப்பகுதிக்கு விஷேட அதிரடிப்படையினரும் வந்து சேரவே கிங்ஸி
வீதிச் சந்திக்கு அருகில் வார்ட் பிளேஸில் வீதியின் இரு பக்கமும் மூடப்பட்டு
வாகனப் போக்குவரத்துக்களும் வேறு பாதையால் திருப்பிவிடப்பட அப்
பகுதியில் குண்டுப் பீதியேற்பட்டது.

இந்த நிலையில் அங்கு வந்த குண்டுகளை செயலிழக்க வைக்கும் பிரிவினர்
அந்தச் சிறிய பொதியை சோதனையிட்ட போதும் அது என்னவென அறிய
முடியாததால் அப் பகுதியில் வைத்து அதனை வெடிக்கச் செய்துள்ளனர்.

வெடித்துச் சிதறிய அந்தச் சிறிய பொதிக்குள்ளிருந்து சுமார் 15 கடவுச்
சீட்டுக்கள் சின்னாபின்னமாகிச் சிதறியுள்ளன. அவற்றை சோதனையிட்ட போது அனைத்து கடவுச் சீட்டுக்களும் தமிழர்களுடையதென்பது கண்டறியப்பட்டது.

இத்தனை கடவுச் சீட்டுக்களையும் யார் எடுத்துச் சென்றார்கள் ஏன் அதனை
வீதியில் விட்டுச் சென்றார்களென்று விசாரணைகளை மேற்கொண்டு வரும்
பொலிஸார் சின்னாபின்னமாகிய கடவுச் சீட்டுக்களை எடுத்துச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் அந்தப் பகுதியில் வெடிகுண்டுப் பீதியும் தணிந்தது.

No comments: