நக்சலைட் - நடிகை தொடர்பா?
நக்சலைட் இயக்கத்துடன் பிரபல தமிழ் நடிகைக்கு உள்ள தொடர்பு குறித்து உளவுப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கடந்த 2002ம் ஆண்டில் தருமபுரி மாவட்டம் ஊத்தங்கரையில் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்ட நக்சலைட் இயக்கத்தினரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதில் 7 பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
.
இவர்கள் மீது பொடா சட்டம் பாய்ந்தது. சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் சிறையில் இருந்தனர். பின்னர் கைதான பெண்களுக்கு ஐகோர்ட் ஜாமீன் வழங்கியது.
வெளியே வந்த இந்த பெண்கள் "புரட்சிகர பெண்கள் விடுதலை மையம்' என்ற அமைப்பை தொடங்கி செயல்பட்டு வருகின்றனர். நக்சலைட் இயக்கத்தில் தொடர்புடைய இந்த பெண்களின் செயல்பாடுகள் குறித்தும், அமைப்பின் நடவடிக்கைகள் பற்றியும் உளவுப்பிரிவு போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
உலக மகளிர் தினத்தையொட்டி, இந்த பெண்கள் அமைப்பின் சார்பில் சென்னை காமராஜர் அரங்கத்தில் மார்ச் 31ம் தேதி கருத்தரங்கம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். இதையடுத்து, இவ்வமைப்பின் பொதுச்செயலர் பத்மா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் நிகழ்ச்சி நடத்த ஐகோர்ட் அனுமதி வழங்கவில்லை. இதனால் மார்ச் 31ம் தேதி நடைபெற இருந்த நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், ஆந்திரா நக்சலைட் இயக்கப் பாடகர் கத்தார் உள்ளிட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் பேச இருந்தனர். அந்த நிகழ்ச்சியில் பிரபல தமிழ் நடிகை ஒருவரும் சிறப்பு பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்தார்.
இயக்குனர் பாரதிராஜாவால் தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்ட அந்த மூன்றெழுத்து நடிகை, பல்வேறு சமூக பணிகளில் ஈடுபாடு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நக்சலைட் இயக்கத்தினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், அந்த நடிகையின் பெயர் அழைப்பிதழில் இடம்பெற்றிருந்தது போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த இயக்கத்தின் செயல்பாடுகள் தெரிந்தே நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அந்த நடிகை சம்மதித்தாரா? இல்லையா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனையடுத்து அந்த நடிகையின் நடவடிக்கைகள் குறித்தும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
அப்பாவி ஏழை மக்களை குறிவைத்து தங்கள் பக்கம் இழுத்து வந்த நக்சலைட்டுகள் தற்போது தமிழ் திரை உலகத்தினர் மீது வலை வீசியிருப்பது போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Friday, 18 April, 2008 Maalaisudar
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment