Friday, April 25, 2008

தற்காலிக போர்நிறுத்தத்திற்கு அழைப்பு

பாகிஸ்தானிலுள்ள தலிபான்களின் உயர்மட்டத் தளபதி தற்காலிக போர்நிறுத்தத்திற்கு அழைப்பு

பாகிஸ்தானிலுள்ள தலிபான்களின் உயர்மட்டத் தளபதி நாட்டில் மேற்கொள்ளும் அனைத்து தாக்குதல்களையும் நிறுத்துமாறு தமது போராளிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவை கொலை செய்வதற்கு உத்தரவிட்டவரென பாகிஸ்தான் அதிகாரிகளால் குற்றஞ்சாட்டப்பட்ட பைதுல்லா மெசூட் என்பவரே இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

ஆப்கான் எல்லையிலுள்ள பழங்குடியினப் பகுதிகள் முழுவதிலும் இவ் உத்தரவு அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படும் அதேவேளை இவ் உத்தரவை எவர் மீறினாலும் கடும் தண்டனை வழங்கப்படுமென எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பேச்சுக்கள் மூலமாக இஸ்லாமிய போராளிகளுடன் உடன்படிக்கையொன்றை ஏற்படுத்தவுள்ளதாக பாகிஸ்தானின் புதிய அரசாங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமியக் குழுவொன்றின் சிரேஷ்ட தலைவரொருவரை கடந்த திங்கட்கிழமை பாகிஸ்தான் அதிகாரிகள் விடுதலை செய்திருந்தனர்.

வன்முறைகளைக் கைவிட்டு அமைதியை மீண்டும் ஏற்படுத்துவதற்கு உதவ வேண்டும் என்ற உடன்படிக்கையின் அடிப்படையிலேயே இவர் விடுதலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வஜிரிஸ்தானின் தென்பகுதி முழுவதும் விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரத்தில் அமைதியைக் குழப்பும் கோபமூட்டக்கூடிய நடவடிக்கைகளுக்கு தலிபான் அமைப்பின் அனைத்து உறுப்பினர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பைதுல்லா மெசூத் உத்தரவிட்டுள்ளார். இதனை மீறுபவர்கள் தண்டனையை அனுபவிக்க நேரிடும். எவ்வித வாதப்பிரதிவாதங்களுமின்றி இது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். இது உறுதியான கட்டளை எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, புதிய அரசாங்கத்துடன் அமைதி உடன்படிக்கையொன்றை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ள பைதுல்லா மெசூத்தின் பேச்சாளர்களில் ஒருவர் இவ் உடன்படிக்கையின் ஓர் அங்கமாகவே சுபி முகமட் விடுதலை செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்கு வழியமைக்கும் விதத்தில் தென் வஜிரிஸ்தானின் சில பகுதிகளிலிருந்து இராணுவத்தை வாபஸ் பெறும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், வாபஸ் பெறுவதற்கான உத்தரவு எதுவும் அரசிடமிருந்து தமக்கு இதுவரை கிடைக்கவில்லையென பாகிஸ்தான் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: