வடக்கு மோதல்கள் தொடர்பாக ஆய்வாளர்கள் கருத்து
முகமாலை, கிளாலி மோதல்களில் பாதுகாப்புப் படையினருக்கு ஏற்பட்டிருக்கும் கடுமையான இழப்புகளையடுத்து விடுதலைப் புலிகளை துரிதமாக தோற்கடிக்க முடியுமென்ற இலங்கையின் எதிர்பார்ப்புகள் சிதறடிக்கப்பட்டிருப்பதாகவும் கொழும்புக்கும் புலிகளுக்குமிடையிலான யுத்த நிறுத்த உடன்படிக்கை முறிவடைந்த பின் இடம்பெற்ற மோதல்களில் அதிகளவு இழப்புகள் இந்தச் சமரிலேயே ஏற்பட்டிருப்பதாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
ஆறு மாதங்களில் விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்டுவதென்ற சூளுரையுடன் 2007 இல் இராணுவத் தலைமைத்துவம் தீவிரமான யுத்தத்தை ஆரம்பித்திருந்தது.
ஆனால், புதன்கிழமை வடக்கு மோதலில் ஏற்பட்ட பின்னடைவானது தாங்கள் விடுதலைப் புலிகளை குறைத்து மதிப்பிட்டதை வெளிப்படுத்தியிருப்பதாக ராஜதந்திரிகளும் ஆய்வாளர்களும் கூறியதாக லங்கா பிஸ்னஸ் ஒன் லைன் இணையத்தளம் தெரிவித்தது.
`பகைவரை குறைத்து மதிப்பிடும் கலாசாரத்தையே நாம் பார்க்கின்றோம்' என்று முன்னணி இராணுவ விவகார ஆய்வாளரான இக்பால் அத்தாஸ் கூறியிருப்பதுடன் வரலாறு திரும்புவதாகவும் கடந்த காலத்தவறுகளிலிருந்தும் இராணுவம் கற்றுக் கொண்டிருக்கவில்லையெனவும் கூறியுள்ளார்.
கடந்தாண்டு ஜூலையில் கிழக்கிலிருந்து புலிகளை வெளியேற்றிய பின்பு வடக்கிலும் அதேபோன்ற வெற்றியை ஈட்டப் போவதாக அரசாங்கம் கூறியது. உடனடியான இராணுவ வெற்றியென்ற எதிர்வு கூறல்கள் படைக்கு ஆட்திரட்டலை அதிகரித்தது. களமுனையிலிருந்து வெளிவரும் துக்கமான செய்திகளுக்கு உத்தியோகபூர்வமற்ற முறையில் தணிக்கைகள் இருந்தாலும் சுருக்கமாக்கப்பட்ட இலக்கங்கள் அதிகரித்துள்ளன.
யாழ். குடாநாட்டில் புதன்கிழமை இடம்பெற்ற மோதல்களில் பாதுகாப்புப் படையினர் 127 பேர் கொல்லப்பட்டும் காணாமலும் போயிருப்பதாக மதிப்பிடப்பட்டிருப்பதுடன் 400 பேர் வரை காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிந்திய மோதலானது அதிகளவில் சிக்கல் நிறைந்த விளைவுகளை ஏற்படுத்துமெனவும் பொருளாதார ரீதியில் மட்டுமன்றி, ஆட்திரட்டலிலும் சிக்கலை ஏற்படுத்துமென இக்பால் அத்தாஸ் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகள் 3 ஆயிரம் போராளிகளை மட்டுமே கொண்டிருப்பதாக தெரிவித்திருந்த இராணுவ உயர்மட்டத்திற்கு தற்போதைய பின்னடைவானது அதிகளவு நெருக்கடியை ஏற்படுத்துவதாகும். இந்த வருடம் ஏற்கனவே, 3,125 புலிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு புள்ளி விபரங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கிழக்கிலிருந்து போராளிகளை வாபஸ் பெற்று வடக்கில் தமது பாதுகாப்பு நிலைகளில் அவர்களை இணைத்து கொண்டிருப்பதாகவும் இராணுவம் தெரிவித்திருந்தபோது அவர்கள் அழிக்கப்படவில்லையெனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வடக்கில் மூன்று தனித்தனியான முனைகளை திறந்துள்ள போதும் புலிகளின் பாதுகாப்பு நிலைகளை எதிர்கொள்வதற்குரிய கேந்திர முனையை இராணுவத்தால் ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை. யுத்த விமானங்கள், பல்குழல் ரொக்கட்டுகள், கனரக ஆயுதங்களையே இராணுவம் அதிகளவில் ஈடுபடுத்தியுள்ளனர்.
`மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை அரசு அதிகரிக்கச் செய்திருந்தது. வெல்லப்படக்கூடிய யுத்தம் என்ற நம்பிக்கை உருவாக்கப்பட்டிருந்தது, என்று சுயாதீன போர் விவகார ஆய்வாளர் நாமல் பெரேரா கூறியுள்ளதுடன், அந்த நிலைப்பாட்டை தக்கவைப்பது தற்போது கடினமான விடயமாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இராணுவ நடவடிக்கைகளால் அதிக விலை செலுத்துவோர் பொதுமக்களே என்று அவர் கூறுகிறார். மார்ச்சில் இலங்கையின் பணவீக்கம் 28 சதவீதமாகும். கடந்த 10 வருடங்களில் தற்போதே மிக அதிகளவில் பணவீக்கம் உயர்ந்திருக்கிறது.
`மக்கள் தியாகத்துக்கு தயாராக இருந்தனர். இராணுவத்துக்கு நன்மையாக யுத்தம் அமையுமென அவர்களுக்கு கூறப்பட்டது. ஆனால், பிந்திய இழப்புகள் மக்களை நம்பிக்கை கொள்ளச் செய்த அளவுக்கு புலிகள் பலவீனமாக இல்லையென்பதை வெளிப்படுத்துகின்றது' என்று அவர் கூறியுள்ளார்.
அதேசமயம், அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரப் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல இழப்புகள் அதிகளவில் இல்லையெனக் கூறியுள்ளார்.
இது 1999 இல் போன்ற பின்னடைவு இல்லை (5 நாட்களில் 10 முகாம்கள் வீழ்ச்சி கண்டிருந்தன). இது இழப்பல்ல, இந்த வருடத்தின் இறுதிப் பகுதியில் பயங்கரவாதத்தை முறியடிப்பதென்ற போராட்டத்தை அரசு முன்னெடுத்துச் செல்லுமென அவர் கூறியுள்ளார்.
அதேசமயம், புலிகளின் ஏமாற்றுவித்தைக்கு இராணுவம் பலியாகிவிட்டதாக தன்னை அடையாளம் காட்ட விரும்பாத ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி தெரிவித்தார்.
அவர்கள் பொறிக்குள் வீழ்ந்துவிட்டனர். இது முதல் தடவை அல்ல என்று கூறிய அவர், இராணுவத்திடம் சிறப்பான போர் ஆற்றலும் ஆளணியும் இருப்பதாகவும் ஆனால் புலிகள் சிறந்த உபாயங்களை பயன்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த வருட யுத்த முயற்சிக்காக 1.5 பில்லியன் டொலர்களை அரசாங்கம் ஒதுக்கீடு செய்திருந்தது. துரிதமாக யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் எதிர்பார்ப்பிலேயே இதனை அரசு மேற்கொண்டது.
ஆனால், புலிகளின் உக்கிரமான எதிர்ப்பானது இன மோதலுக்கு இராணுவ ரீதியில் தீர்வு காண முடியாதென்பதை வெளிப்படுத்தியிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment