பிள்ளையானை கிழக்கின் முதலமைச்சர் பதவியில் அமர்த்த இந்தியா அதிக முனைப்பு காட்டி வருவதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள அனேகமான வளங்களை இந்தியா நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆக்கிரமித்துள்ளதாக ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் பிள்ளையானை தமது கைப்பொம்மையாக பயன்படுத்த முடியும் என்பதால் பிள்ளையானை ஆட்சியில் அமர்த்த இந்தியா அதிக கரிசனை காட்டுவதாக ஜே.வி.பி. குறிப்பிட்டுள்ளது.
படையினர் உயிர்களை தியாகம் செய்து கிழக்கின் சம்பூரை மீட்டுள்ள போதிலும், தற்போது பெரும்பகுதி இந்தியாவின் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அவர் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பிரதேசங்களுக்குச் செல்ல எவருக்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை எனவும், தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக திருகோணமலை மாவட்ட ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த விஜேசேகர அனுமதி கோரியிருந்த போதிலும் படையினர் அனுமதி வழங்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிழக்கை இந்திய ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுப்பதற்காகவும், அனைத்து இன மக்களின் அபிலாஷைகளை உறுதிப்படுத்தவும் இந்த தேர்தல்களில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியமானதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (ஏப்ரல் 24) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
முரண்பட்ட கருத்துக்களை கொண்ட கட்சிகளை ஒன்றிணைத்து தேர்தல்களை வெற்றிகொள்ள அரசாங்கம் முயற்சி மேற்கொள்வதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவின் தேவைகளுக்காக செயலாற்றும் பிள்ளையானையோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஒப்பந்தங்களை கைச்சாத்திட்ட ரவூப் ஹக்கீமையோ முதலமைச்சராக தெரிவு செய்வதன் மூலம் பிரதேசத்தில் வசிக்கும் எந்தவொரு சமூகத்திற்கும் நன்மை கிட்டாது என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment