
உயிரோடு இருப்பவர் இறந்ததாக தகவல் வெளியானதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கூடுவாஞ்சேரி காந்தி நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் மணவாளன். இவரது மகன் குட்டி (எ) புருஷோத்தமன் (28), ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். கடந்த 16ம் தேதி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிரச் சிகிச்சை பெற்று வந்தார்.
இதற்கிடையில், மருத்துவமனையில் குட்டிக்கு உதவியாக தங்கியிருந்த செந்தில் என்பவரிடம், "குட்டி உயிர் பிழைக்க வாய்ப்பில்லை. 2 அல்லது 3 மணி நேரம்தான் தாங்குவார். வீட்டுக்கு எடுத்துச் சென்று விடுங்கள்" என்று நேற்று முன்தினம் கூறியிருக்கின்றனர். இதையடுத்து, ஆம்புலன்சுடன் பெற்றோரும் உறவினர்களும் மருத்துவமனைக்கு வந்தனர்.
குட்டியின் கையில் போடப்பட்டிருந்த பிளாஸ்திரியை எடுத்த போது, அவர் வலியால் துடித்துள் ளார். உயிர் இருப்பதை தெரிந்துகொண்டு, உடனடியாக பெற்றோரும் உறவினர்களும் டாக்டர்களை வரவழைத்தனர். அப்போது, அறுவை சிகிச்சைக்குப் பின் குட்டியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று டாக்டர்கள் கூறினர். அப்போதுதான், குட்டி இறந்ததாக தவறாக நினைத்தது எல்லோருக்கும் தெரிய வந்தது.
இதற்கிடையில், குட்டி இறந்து விட்டதாக கருதி இரங்கல் போஸ்டர் அடித்து அவரது நண்பர்கள் சுவர்களில் ஓட்டிவிட்டனர்.
அஞ்சலி செலுத்த சிலர் மாலை வாங்கிக் கொண்டு குட்டியின் வீட்டுக்கும் வந்தனர். குட்டி உயிருடன் இருப்பதை அறிந்து அவர்கள் மகிழ்ச்சியுடன் திரும்பினர்.இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:
Post a Comment