இலங்கைத் தமிழர் பிரச்சினையைப் பொறுத்த வரையில் மத்திய அரசின் கொள்கை தான் நம்முடைய கொள்கை. அவர்கள் எதனைச் சொல்கிறார்களோ அதனை நாம் பின்பற்றுவோம் என்று சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது என்று தமிழ்நாடு சட்டப் பேரவை விவாதத்தில் முதல்வர் கலைஞர் கருணாநிதியிடம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் தமிழ் நாட்டுச் சட்டப் பேரவையில் நடைபெற்ற விவாதத்தின் போது ம.தி.மு.க. உறுப்பினர் மு.கண்ணப்பன் பேசியதாவது;
"இலங்கை நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து தமிழர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக ஆக்கப்படக் கூடிய சூழ்நிலை இலங்கை நாட்டில் இருந்து கொண்டிருக்கின்றது. 1944, 1949 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பிரச்சினை, கடந்த கால நிகழ்வுகளைச் சுருக்கமாக நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். அங்கே இருக்கக்கூடிய தமிழர்கள் சிங்கள மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் ஈழத்து காந்தி என்று மதிக்கப்படுகின்ற தந்தை செல்வாவும் பண்டாரநாயக்கவும் 1957 ஆம் ஆண்டில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்தார்கள். குறைந்தபட்ச அதிகாரத்தை, உரிமைகளைத் தமிழர்களுக்குத் தருவதற்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய ஒப்பந்தம். அந்த ஒப்பந்தமும் கிடப்பிலே போடப்பட்டது.
அதேபோல, 1965 ஆம் ஆண்டில் தந்தை செல்வா- சேனாநாயக்க ஒப்பந்தம். அதுவும் கிடப்பில் போடப்பட்டது. அதேபோல, இந்திய நாட்டுடன் 1954 ஆம் ஆண்டில் பண்டித ஜவகர்லால் நேரு - கொத்தலாவல ஒப்பந்தம். அதுவும் செயற்படுத்தப்படவில்லை. 1962 ஆம் ஆண்டில் சிறிமாவோ பண்டாரநாயக்க -சாஸ்திரியால் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம். அதுவும் கிடப்பில் போடப்பட்டது. மீனவர்கள் உரிமை சம்பந்தமாக 1976 ஆம் ஆண்டில் ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதுவும் செயற்படுத்தப்படவில்லை. 1987 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி- ஜெயவர்த்தன ஒப்பந்தம். அந்த ஒப்பந்தமும் முறையாகச் செயற்படுத்தப்படாமல் கிடப்பிலே போடப்பட்டது. இன்று அங்கே இனப்பிரச்சினை தலை தூக்கிக் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருக்கிறது.
1987 ஆம் ஆண்டில் இந்தியா- இலங்கை ஒப்பந்தத்தில் வடக்கு- கிழக்கு மாகாணங்கள் இலங்கையில் தமிழர்கள் சமுதாயத்தின் வரலாற்று வாழ்விடம் என்று அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும். இது 1987 ஆம் ஆண்டு ஒப்பந்தத்திலேயே குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி பொதுமக்களால் வாக்கு அளிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு வடக்கு- கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு அதற்குப் பிறகு ஒப்புக்கொள்ளப்படவேண்டும். அந்தத் திட்டத்தின் அடிப்படையில் அங்கே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ராஜீவ் காந்தி ஒப்பந்தத்தில் 1987 ஆம் ஆண்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு மாறாக இலங்கை அரசே அங்கே இருக்கக்கூடிய நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து அவர்களே நீதிமன்றத்தின் தீர்ப்பையும் பெற்றிருக்கிறார்கள். இரண்டு மாகாணங்களாக இருக்க வேண்டும் என்று இப்போது வடக்கு- கிழக்கு மாகாணங்களை தனித்தனியாகப் பிரித்திருக்கிறார்கள்.
இப்போது கிழக்கு மாகாணத்தில் தேர்தல் என்று அறிவித்து தமிழர்களை இரண்டு பகுதிகளாகப் பிரித்து சிங்களவர்களை அங்கே குடியேற்றி மீண்டும் இனப்பிரச்சினை அதிகமாகக்கூடிய சூழ்நிலையை அங்கே உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அதேபோல, 1987 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் பல்வேறு விடயங்கள் இன்று மீறப்பட்டு இருக்கின்றன. இந்த ஒப்பந்தம் என்பது இந்தியா- இலங்கை ஒப்பந்தம். சுயாதிபத்திய உரிமை கொண்ட இரண்டு அரசுகளுக்கு இடையில் செய்யப்பட்ட ஒரு ஒப்பந்தமாகும். அனைத்துலக சட்டத்தின் கீழ் வலுவாக இருக்கக்கூடிய ஓர் ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தை இலங்கை அரசு ஒருபோதும், எப்போதுமே எந்தக் காலத்திலும் தட்டிக் கழித்துவிட முடியாது. அந்தவிதமாகத் தட்டிக் கழிப்பதனை இந்திய அரசு எந்த வகையிலும் அனுமதிக்கக்கூடாது என்று நாம் வலியுறுத்தவேண்டும்.
அதேபோல், இங்கே மீனவர்கள் பிரச்சினை 1974 - 76 ஆம் ஆண்டில் கச்சதீவு மற்றும் மீன்பிடி தொடர்பான இலங்கை - இந்தியா ஒப்பந்தங்கள் நடைமுறைக்கு வந்தால் வடகடலில் தமிழக மீனவர்கள் பாதுகாப்புடன் இருப்பார்கள் என்று அந்த ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டது. 1976 ஆம் ஆண்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி கலைக்கப்பட்டதற்கு பிறகு இந்த ஒப்பந்தங்கள் நடைமுறையில் இல்லாமல் போய்விட்டது.
1977 ஆம் ஆண்டுக்குப் பின் கச்சதீவில் உள்ள புனித அந்தோனியார் கோவிலுக்கு தமிழக கிறிஸ்தவ பெருமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அந்தக் கோவில் திருவிழாவே அங்கு நடப்பதில்லை. அந்தக் கோவிலையே இன்று இலங்கை அரசு மூடிவிட்டது. ஒப்பந்தங்கள் போடுவதும் அவற்றை நடைமுறைப்படுத்தாமல் பின்வாங்குவதும் இலங்கை அரசின் கடந்த கால வரலாறு.
ஆகவே, அப்படிப்பட்ட நிலைமைக்கு ஆளாக்கப்படாமல் 1987 ஆம் ஆண்டில் போடப்பட்ட ஒப்பந்தத்தை முழுமையாகச் செயற்படுத்துவதற்கு இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நம்முடைய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதேபோல், இன்று விடுதலைப் புலிகளை அழிக்கிறோம், ஒடுக்குகிறோம் என்ற பெயரில் ஈழத்தமிழ் மக்கள் மிகப்பெரிய பாதிப்புக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள். குழந்தைகள், தாய்மார்கள் அதேமாதிரி மதத்தலைவர்கள், இந்துக் கோவில்கள், கிறிஸ்தவ கோவில்கள் இப்படி நாள்தோறும் அவை எல்லாம் அழிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.
இப்படிப்பட்ட படுகொலைகளையும் தடுத்து நிறுத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் அருகில் இருக்கக்கூடிய நம்முடைய நாட்டிற்கு இருக்கிறது என்ற அடிப்படையில் ஏதோ மத்திய அமைச்சின் கொள்கைதான் நம்முடைய கொள்கை - அவர்கள் எதைச் சொல்கிறார்களோ அதை நாம் பின்பற்றுவோம் என்று நாம் சொல்லிக்கொண்டிருக்காமல் தமிழர்கள் வாழக்கூடிய பகுதி, நம்முடைய இன மக்கள் அங்கே இருக்கிறார்கள் என்ற உணர்வோடு நம்முடைய கருத்தை வலியுறுத்தி இந்திய அரசாங்கத்தை செயற்பட வைக்கவேண்டும்.
நம்முடைய முதலமைச்சர் கலைஞர், தமிழகத்தை காப்பாற்றக்கூடிய பெரும் பொறுப்பும் கடமையும் இன்றைய நாள் அவருக்கு இருக்கிறது. எனவே, தமிழ் மக்களை காப்பாற்றுங்கள், ஈழத்தமிழர்களை காப்பாற்றுங்கள் என்று வேண்டி விரும்பிக் கேட்டு என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்".
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment